போர்னியோ நிறுவனம் (ஆங்கிலம்: Borneo Company அல்லது Borneo Company Limited (BCL) மலாய்: Syarikat Borneo) என்பது வடக்கு எனும் மலேசியா, போர்னியோ தீவின், சரவாக் சபா மாநிலங்களில் உருவாக்கப்பட்ட, மிகப் பழைமையான பிரித்தானிய நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் 1856 சூன் மாதம் உருவாக்கப்பட்டது.
தொடக்கத்தில், போர்னியோ நிறுவனத்தின் நிர்வாகிகள்; மூத்த பணியாளர்கள் அனைவரும் ஐரோப்பியர்களாக இருந்தனர். 1950-களில் மட்டுமே உள்ளூர் சரவாக்கியர்கள் நிர்வாகிகளாகவும் மற்றும் மேலாளர்களாகவும் நியமிக்கப் பட்டனர். இந்த நிறுவனம் சரவாக், சபா, புரூணை முழுவதும் கிளைகளைக் கொண்டு இருந்தது.[1]
போர்னியோ நிறுவனம், 1856-ஆம் ஆண்டு சூன் மாதம் லண்டனில் £ 60,000 மூலதனத்துடன் பதிவு செய்யப்பட்டது. வெள்ளை இராஜா ஜேம்சு புரூக்கின் நெருங்கிய நண்பர்கள் உட்பட; ராபர்ட் அன்டர்சன் (Robert Henderson), சார்லசு டெம்பிளர் (Charles Templer), ஜேம்சு டைசு (James Dyce), பிரான்சிசு ரிச்சர்ட்சன் (Francis Richardson), ஜான் ஆர்வி (John Harvey) ஆகியோர் அதன் இயக்குநர்களாக இருந்தார்கள்.[2]
போர்னியோ நிறுவனத்தின் வணிகத் தலைமையகம் சிங்கப்பூரில் இருந்தது. வணிகங்கள் விரைவில் தாய்லாந்திலும், பின்னர் இந்தோனேசியா, ஆங்காங், இந்தியாவிலும் திறக்கப்பட்டன.[3][4]
சரவாக்கில், அதன் முதல் மேலாளர் லுட்விக் வெர்னர் ஆல்ம்சு (Ludvig Verner Helms) எனும் ஒரு டென்மார்க்கியர். அவர் அதற்கு முன்பு 1852-ஆம் ஆண்டில் இருந்து சரவாக்கில் வர்த்தகம் செய்து வந்தார். போர்னியோ தீவில் உள்ள அனைத்து கனிமங்களின் சுரங்கங்களையும், தாதுக்களையும் கையகப்படுத்தும் அதிகாரம் போர்னியோ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.[1]
அத்தகைய விளைபொருட்களைப் பண்டமாற்று செய்தல் அல்லது விற்றல் போன்றவற்றுக்கு சரவாக் அரசாங்கக் கருவூலத்திற்கு உரிமத் தொகை செலுத்த வேண்டும் என ஓர் ஒப்பந்தம் 1857-ஆம் ஆண்டில் (1857 Royalty Payments Agreement) செய்து கொள்ளப்பட்டது.
சவ்வரிசி கொள்முதல் அதன் வர்த்தகத்தின் முதல் செயல்பாடு ஆகும். அவர்களின் முதல் தொழிற்சாலை கூச்சிங்கில் இருந்தது. அஞ்சனக் கல் சுரங்கம் (Antimony Mining), பாவு மாவட்டம், பாவு நகரில் (Bau Town) இருந்தது.[1]
பின்னர் சமரகான் பிரிவு சிமுஞ்சான் மாவட்டத்தில் (Simunjan District) நிலக்கரி கொள்முதல் செய்யப்பட்டது. அடுத்து தெகோரா நகரில் பாதரசம்; பாவு நகரில் தங்கம் கொள்முதல் செய்யப்பட்டது.
அப்போதைய சரவாக் வெள்ளை இராஜாக்கள் போர்னியோ நிறுவனத்துடன் விருப்பும் வெறுப்பும் கலந்த உறவைக் கொண்டு இருந்தனர். அந்த நிறுவனம் தங்களுக்கு உதவும் என்று நம்பி இருந்தனர். இருப்பினும், சீனத் தொழிலாளர்கள் கொடுத்த தொல்லைகளின் போது வெள்ளை இராஜாக்களுக்கு இந்த போர்னியோ நிறுவனம்தான் இராணுவ ஆதரவை வழங்கியது
அடுத்ததாக அந்த நிறுவனம் சரவாக் அரசாங்க நாணயத்தையும் அச்சிட்டது. அதன் பின்னர் வணிகம், காப்பீடு, தரகு, பயணம் மற்றும் கப்பல் போக்குவரத்து என விரிவடைந்தது.[5]
1923-ஆம் ஆண்டில், சரவாக்கில் கனிமங்களைப் பிரித்து எடுப்பதன் மூலம் அதிக அளவில் பொருளாதாரப் பயன்கள் கிடைக்கவில்லை. அதனால் இலண்டனில் இருந்த போர்னியோ நிறுவனத்தின் தலைமையைகம் அதன் 1857-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தைக் கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இரண்டாம் உலகப் போர் 1945-இல் முடிவடைந்த பிறகு, ராயல் டச்சு செல் ஆயில் நிறுவனத்திடம் (Royal Dutch Shell Oil Company) இருந்து எண்ணெய் விநியோகம் செய்யும் முகவர் பணியைச் செய்தது.
கூச்சிங்கில் முதல் பெட்ரோல் நிலையத்தை உருவாக்கியதும் இந்த நிறுவனம் தான். அதன் பின்னர் சரவாக் முழுவதும் நுகர்வோர் பொருட்களை இறக்குமதி செய்து விநியோகிக்க வேண்டும் என சரவாக் காலனித்துவ அரசாங்கம் இந்த நிறுவனத்தைக் கட்டாயப் படுத்தியது. 1967-இல், போர்னியோ நிறுவனம் சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்ட இன்ச்கேப் குழுமத்துடன் (Inchcape Group) இணைந்தது.[6]
1974-இல், போர்னியோ நிறுவனம்; சரவாக் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்துடன் (Sarawak Economic Development Corporation - SEDC) கூட்டு முயற்சியைத் தொடங்கியது. ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்குப் பின்னர், 2018 செப்டம்பர் 28-ஆம் தேதி, போர்னியோ நிறுவனம் அதன் அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்திக் கொண்டது.[1]