பௌசியா கரீம் பைரோசு | |
---|---|
![]() 2024 இல் விருது பெறும் பௌசியா | |
தேசியம் | வங்காளதேசத்தவர் |
பணி | மனித உரிமைகள் வழக்கறிஞர் |
அறியப்படுவது | வங்காளதேச உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் |
பௌசியா கரீம் பைரோசு ( Fawzia Karim Firoze ) வங்காளதேச உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருக்கிறர். இவர் 2024 ஆம் ஆண்டில் சர்வதேச வீரதீரப் பெண்ணாக அங்கீகரிக்கப்பட்டார். ஆடைத் தொழிலாளர்கள், அமிலத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த இவர் ஆதரித்துள்ளார்.
1992 ஆம் ஆண்டில் வங்காளதேச தொழிலாளர் அமைப்புகளுக்கு ஆதரவளிப்பதில் பௌசியா ஈடுபட்டார். மனித உரிமைகளைப் பார்க்க இவர் ஒரு அலுவலகத்தை அமைத்திருந்தார். மேலும் ஜவுளித் தொழிலாளர்களுக்கு ஏற்படும் துன்புறுத்தல் , அச்சுறுத்தல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் கதைகளைக் கேட்டு இவர் அதிர்ச்சியடைந்தார். தற்போதுள்ள தொழிலாளர் சட்டங்களை முதலாளிகள் புறக்கணித்து வந்தனர். பைரோசு அவர்களுக்கு தொழிலார்ளுக்கு ஆதரவளித்து உதவினார். ஆனால் அவர்களுக்கென ஒரு சொந்த அமைப்பு தேவை என்பது உணரப்பட்டது. அமைப்பை ஏற்படுத்த 1994 இல் ஒரு மாநாடு நடத்தப்பட்டது.[1] வங்காளதேச சுயாதீன ஆடைத் தொழிலாளர்கள் சங்கம் கூட்டமைப்பு (BIGUF) 1990களின் பிற்பகுதியில் தொழிற்சங்க அமைப்பை ஆடைத் தொழிலாளர்களுக்கு கொண்டு வந்தது. மனித உரிமைகள் வழக்கறிஞராக பௌசியாவின் ஆதரவு கூட்டமைப்பை நிறுவுவதில் முக்கியமானது என்று கூறப்பட்டது.[2]
வங்காளதேச தேசிய பெண் வழக்கறிஞர்கள் சங்கம் வங்காளதேசத்தின் பெண் கைதிகள் குறித்த பௌசியாவின் ஆய்வை வெளியிட்டது.[3] பௌசியா 2007 முதல் 2018 வரை அச்சங்கத்தின் தலைவராக இருந்தார்.[4][5]
பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்க 13 மே 2009 அன்று வங்காளதேச உச்ச நீதிமன்றத்தின் உயர் நீதிமன்றப் பிரிவை தீர்ப்பளிக்க ஊக்குவித்த வழக்கறிஞர்களில் பௌசியா பைரோசும் ஒருவராவார்.[6]
2002 ஆம் ஆண்டில் அமிலத் தாக்குதல்களைத் தடைசெய்யும் சட்டத்தை இயற்றிய முதல் நாடு வங்காளதேசம் ஆகும்.[7] அமிலத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச அறக்கட்டளையின் நிறுவனர்களில் ஒருவராக பௌசியா இருக்கிறார்.
2015 ஆம் ஆண்டில் வங்காளதேசத்தின் வீட்டுத் தொழிலாளர்கள் பாதுகாப்பு மற்றும் நலக் கொள்கைக்கு வழிவகுத்த அழைப்புகளுக்கு தலைமை தாங்கிய சட்டம் மற்றும் மேம்பாட்டுக்கான அறக்கட்டளையின் தலைவராக இருந்தார். இந்த தீர்ப்பின் மூலம் வீட்டுத் தொழிலாளர்களின் உரிமைகள் வியத்தகு முறையில் மேம்படுத்தப்பட்டது.[8]
2007 ஆம் ஆண்டில் இவர் லேன்ட்மார்க் ஜட்ஜ்மென்ட்ஸ் ஆன் வயலன்ஸ் அகெயின்ஸ்ட் வுமன் ஆப் பங்களாதேஷ் (வங்காளதேசம், இந்தியா மற்றும் பாக்கித்தானின் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த மைல்கல் தீர்ப்புகள்) என்ற புத்தகத்தை வெளியிட்டார்.[9]
மனித உரிமை வழக்கறிஞராக பௌசியாவின் முப்பது ஆண்டுகால பணி அங்கீகரிக்கப்பட்டு 2024 இல் சர்வதேச வீரதீரப் பெண்களில் ஒருவராக ஆனார்.[6] இந்த விருது மார்ச் 2024 இல் இவருடன் சேர்ந்து வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 12 பேர்களுக்கும் அறிவிக்கப்பட்டது.[10] விருது பெற்றவர்கள் அமெரிக்க வெளியுறவுத்துறையின் சர்வதேச பார்வையாளர் தலைமைத் திட்டத்தில் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள். அங்கு அவர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்து தங்கள் பணியைப் பற்றி விவாதிக்கிறர்கள்.[11]