பௌமாகர வம்சம்

பௌமாகர வம்சம்
சுமார் பொ.ச.8ஆம் நூற்றாண்டு–சுமார் பொ.ச.10ஆம் நூற்றாண்டு
Map
பௌமா-கர அரசர்களும் (நீலம்) அவர்களது நிலப்பிரபுக்களும் (சாம்பல்) வழங்கிய கல்வெட்டுகள்
தலைநகரம்ஜெய்ப்பூர்
சமயம்
பௌத்தம்
இந்து சமயம்
அரசாங்கம்முடியாட்சி
வரலாற்று சகாப்தம்மத்திய கால வம்சம்
• தொடக்கம்
சுமார் பொ.ச.8ஆம் நூற்றாண்டு
• முடிவு
சுமார் பொ.ச.10ஆம் நூற்றாண்டு
முந்தையது
பின்னையது
சைலோத்பவ வம்சம்
[[சோமவம்சி வம்சம்]]
பாஞ்ச் வம்சம்

கர வம்சம் (Kara dynasty) என்றும் பௌமா வம்சம் (Bhauma dynasty) அழைக்கப்படும் இது 8 -10 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் கிழக்கு இந்தியாவில் ஆட்சி செய்த இந்திய வம்சமாகும். தோசலா என்று அழைக்கப்படும் இவர்களின் இராச்சியம், இன்றைய ஒடிசாவின் பகுதிகளை உள்ளடக்கி இருந்தது.

8-ஆம் நூற்றாண்டின் கடைசி காலாண்டில், பௌமாகரர்கள் முன்னாள் சைலோத்பவ பிரதேசத்தின் கட்டுப்பாட்டைப் பெற்றனர். வம்சங்களின் ஆரம்பகால ஆட்சியாளர்கள் பௌத்தத்தையும், அதன் பிற்கால ஆட்சியாளர்கள் சைவம் மற்றும் வைணவத்தையும் பின்பற்றினர். ஐந்து பெண்களை உள்ளடக்கிய வம்சம், 10-ஆம் நூற்றாண்டில் பாஞ்சர்கள் மற்றும் சோமவம்சிகளால் மாற்றப்பட்டது.

தோற்றம்

[தொகு]

பௌமா-கர குடும்பத்தின் தோற்றம் பற்றி உறுதியாகத் தெரியவில்லை.[1] வம்சத்தின் முந்தைய பதிவுகள் இவர்களின் குடும்பத்தை "பௌமா" என்று பெயரிடுகின்றன. வம்சத்தின் ஆறாவது மன்னரான இரண்டாம் சுபாகரனின் கல்வெட்டில் "கர" முதலில் ஒரு வம்சப் பெயராகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து ஆண் அரசர்களின் பெயர்களும் "கர" என்று முடிவடைகின்றன. இது "கர" ஒரு குடும்பப் பெயராக பயன்படுத்தப்படுவதை விளக்கியது. [2]

வரலாறு

[தொகு]

ஆரம்பகால ஆட்சியாளர்கள்

[தொகு]

பௌமா-கர கல்வெட்டுகள் தேதி குறிப்பிடப்படாமல் இருக்கின்றன. இது வெறுமனே 'சம்வத்' (நாட்காட்டிக்கன சமசுகிருதச் சொல்) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.[3] இந்த சகாப்தம் பொது ஊழி 736-ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது என்றும், பௌமா-கர ஆட்சியின் தொடக்கத்தைக் குறிக்கிறது என்றும் வரலாற்றாசிரியர் கிருஷ்ண சந்திர பாணிகிரஹி நம்பினார்.[1] இருப்பினும், தினேஷ்சந்திர சிர்கார் இந்த சகாப்தத்தின் தொடக்கத்தை பொ.ச. 831 என தேதியிட்டார். பௌமா-கர நிலப்பிரபுத்துவ இரண்டாம் சத்ருபஞ்சனின் தசபல்லா கல்வெட்டில் உள்ள வானியல் தரவுகளின் பகுப்பாய்வு அடிப்படையில் இரிச்சர்ட் ஜி. சாலமன் சிர்காரின் பரிந்துரையை மிகவும் உறுதியானது என்று நம்புகிறார். இருப்பினும் அது உறுதியானது அல்ல என்றும் இவர் குறிப்பிடுகிறார். [4]

முந்தைய பௌமா கர மன்னர்கள் தெற்கு கொங்கோடா பகுதியை ஆண்ட சைலோத்பவர்களுடன் சமகாலத்தில் வடக்கு தோசாலி பகுதியை ஆட்சி செய்ததாகத் தெரிகிறது.[5] மன்னர் முதலாம் சிவகரன் (சுமார் பொ.ச. 756 அல்லது 786) காலத்தில் இந்த வம்சம் கடலோர ஒடிசாவின் பெரும்பகுதியை ஆட்சி செய்திருக்கலாம். [6] சுவேதக கங்க மன்னன் ஜெயவர்மதேவனின் கஞ்சாம் கல்வெட்டின் படி, முதலாம் சிவகரன் கொங்கோடாவையும் கலிங்கத்தின் வடக்குப் பகுதியையும் கைப்பற்றினான். அவரது வழித்தோன்றல் மூன்றாம் சிவகரனின் தல்சர் கல்வெட்டு, அவர் இராதா (இன்றைய மேற்கு வங்காளம் ) மன்னனை தோற்கடித்து, தோற்கடிக்கப்பட்ட மன்னனின் மகளை மணந்தார் என்று கூறுகிறது. [5]

பாலர்கள் மற்றும் இராஷ்டிரகூடர்களின் படையெடுப்புகள்

[தொகு]

முதலாம் சுபாகரனின் (ஆட்சி பொ.ச.790), நியூல்பூர் கல்வெட்டு, அரியணையின் உரிமையைக் கோரிய தனது உறவினர்களின் கிளர்ச்சியை நசுக்கினார் எனக் கூறுகிறது. [7] பொ.ச. 790க்கும் 829-க்கும் இடையில், முதலாம் சுபாகரன், அவரது மூத்த மகன் இரண்டாம் சிவகரன் ஆகியோரின் ஆட்சியின் போது, இராஷ்டிரகூடர்களும், பாலர்களும் தொடர்ந்து பௌமா இராச்சியத்தின் மீது படையெடுத்து பலவீனப்படுத்தியது.[6] [7]

முதலாம் சுபாகரனின் இளைய மகன் முதலாம் சாந்திகரன், மேலைக் கங்க மன்னன் இராஜமல்லனின் மகளான முதலாம் திரிபுவன மகாதேவியை மணந்தார். திரிபுவன மகாதேவியின் (சுமார் கொ.ச.846) டேங்கானாள் கல்வெட்டு, இராஷ்டிரகூட-பாலர் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு முன்பு பௌமா-கர இராச்சியம் மோசமான நிலையில் இருந்ததாகக் கூறுகிறது.[7] அவர் இராச்சியத்தை மீண்டும் ஒன்றிணைத்தார். ஆனால் குடும்பம் அதன் முன்னாள் அதிகாரத்தை மீண்டும் பெறவே இல்லை.[6] அவரது பேரன் இரண்டாம் சாந்திகரன் வயது வந்தவுடன் அவர் அரியணையைத் துறந்ததாக அவரது தல்சர் கல்வெட்டு தெரிவிக்கிறது. [8]

உள்நாட்டுப் போர்

[தொகு]

பௌமா-கர குடும்ப உறுப்பினர்களால் ஏற்பட்ட அதிகாரப் போட்டியின் காரணமாக சுமார் பொ.ச 880-லிருந்து படிப்படியாக வீழ்ச்சியுற ஆரம்பித்தது. வம்சத்தின் முதல் அறியப்பட்ட சைவ மன்னரான நான்காம் சுபாகரன் ஆட்சி ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவாகவே நீடித்தது (ஆட்சி பொ.ச.881-884). அவருக்குப் பிறகு அவரது சகோதரர் மூன்றாம் சிவகரன் ஆட்சி செய்தார். அவருடைய ஆட்சி சுமார் ஒன்பது ஆண்டுகள் நீடித்தது.[6]

நான்காம் சுபாகரனின் இராணியான இரண்டாம் திரிபுவன மகாதேவி (பொ.ச. 894) அடுத்து ஆட்சிக்கு வந்தார்.[6] மூன்றாம் சிவாகரன் வாரிசு இல்லாமல் இறந்தார் என்று அவரது கல்வெட்டுகள் பொய்யாகக் கூறுகின்றன. இது அவரது மருமகன்கள் அரியணைக்கான உரிமைகோரலைப் புறக்கணிக்கும் ஒரு திட்டமிட்ட முயற்சியாகும்.[9] அண்டை நாடான சோமவம்சி வம்சத்தின் ஆட்சியாளராக இருந்த அவரது தந்தை முதலாம் ஜனமேஜயனின் உதவியுடன் அவர் அரியணையைப் பெற்றதாக பெரும்பாலான வரலாற்று அறிஞர்கள் நம்புகின்றனர். [10] ஜனமேஜயன் ஒட்டர நாட்டின் மன்னனைக் கொன்றதாக பிரம்மேஸ்வரர் கோயில் கல்வெட்டு தெரிவிக்கிறது. பானிகிரஹி கொல்லப்பட்ட மன்னரை மூன்றாம் சிவகரனுடன் அடையாளம் காட்டினார். ஆனால் மற்ற வரலாற்றாசிரியர்கள் அவரை ஜனமேஜயனின் கலகக்கார பாஞ்சா அரசராக அடையாளப்படுத்துகின்றனர்.[11] இரண்டாம் திரிபுவன மகாதேவியின் ஆட்சி அநேகமாக மிகக் குறுகிய காலமே இருந்திருக்கும். ஏனெனில் அவரது ஏற்றம் அரசவைப் பிரிவுகளால் சர்ச்சைக்குரியதாக இருந்துள்ளது. [10] பிற்கால பௌமா-கர அரசர்களின் பதிவுகள் அவரது ஆட்சியைக் குறிப்பிடவில்லை. இது மூன்றாம் சிவகரனின் மகன்களால் அவர் ஒரு முறையான ஆட்சியாளராக அங்கீகரிக்கப்படவில்லை என்பதைக் குறிக்கிறது, அவர்கள் இணை அரசாங்கங்களை அமைத்திருக்கலாம். [9]

பொ.ச.894-923-இல் குறைந்தது ஐந்து ஆட்சியாளர்கள் பௌமா-கர சிம்மாசனத்தை உரிமை கொண்டாடினர். இது இராச்சியம் நிலையற்றதாக மாறியிருந்தது என்பதை கூறுகிறது. பின்னர், இரண்டாம் திரிபுவன மகாதேவியின் இரு மருமகன்களான மூன்றான் சாந்திகரன், ஐந்தாம் சுபாகரன் ஆகியோர் பதவியேற்றனர். அதன்பின், ஐந்தாம் சுபாகரனின் இராணியான கௌரி மகாதேவி, அவர்களது இளம் மகள் தண்டிமகாதேவியின் ஆட்சியாளராக, இராச்சியத்தைக் கட்டுப்படுத்தினர். தண்டிக்குப் பிறகு (பொ.ச. 916 அல்லது 923), அவரது மாற்றாந்தாய் வகுலா-மகாதேவி (ஐந்தாம் சுபாகரனின் மற்றொரு இராணி) அரியணை ஏறினார்.[12] வகுலாவின் தந்தைவழி குடும்பம் தண்டியை அரியணையில் இருந்து கீழே இறக்க உதவியிருக்கலாம்.[9] இவருக்குப் பிறகு மூன்றாம் சாந்திகரனின் இராணியான தர்ம மகாதேவி பதவிக்கு வந்தார்.[10] இந்த இராணிகள் பரம-மகேசுவரி, 'பரம-பட்டாரிகா', மகாராஜாதிராஜா, பரமேசுவரி ஆகிய பட்டங்களை ஏற்றுக்கொண்டனர்.[12]

அண்டை நாடுகளான சோமவம்சி மற்றும் பஞ்சா வம்சத்தினர் பௌமா-கர இராச்சியத்தைக் கைப்பற்ற முயன்றதாகத் தெரிகிறது. இது வேறுபாடுகள் மற்றும் அரசியல் சூழ்ச்சிகளுக்கு வழிவகுத்தது. வரலாற்றாசிரியர் கிருஷ்ண சந்திர பாணிகிரஹியின் கூற்றுப்படி, கிஞ்சலியின் பஞ்சாக்கள் தங்கள் இளவரசிகளில் இருவரை (வகுலா மற்றும் தர்மா) பௌமா-கர குடும்பத்தில் திருமணம் செய்து வைத்தனர். பின்னர் அவர்கள் மூலம் பௌமா-கர சிம்மாசனத்தைக் கட்டுப்படுத்தினர். பௌமா-கர பிரதேசம் இறுதியில் சோமவம்சிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. [10]

மதம்

[தொகு]
சாமுண்டி கோவிலில் காணப்படும் சிற்பம்

பௌமா-கர மன்னர்கள் பௌத்தத்தின் மீதும், சைவ சமயத்தின் மீதும் சகிப்புத்தன்மையுடன் இருந்தனர். பௌத்த மதத்தைச் சேர்ந்த முதலாம் சுபாகரன், சைவ மதத்தைச் சேர்ந்த மாதவ-தேவியை மணந்தார். பௌத்த மதத்தைச் சேர்ந்த மூன்றாம் சுபாகரன், நோட்டிலோ கிராமத்தின் ஒரு பகுதியை வைத்தியநாதருக்கு ( சிவனின் அம்சம்) அர்ப்பணிக்கப்பட்ட புலிந்தேசுவர சன்னதிக்கு வழங்கினார். இது அவரது இந்தோல் கல்வெட்டு மூலம் தெரிகிறது. சைவரான மூன்றாம் சிவகரன்,, ஜெயஷ்ரம- புத்த விகாரத்தில் ஒரு பௌத்த கோவிலுக்கு இரண்டு கிராமங்களை வழங்கினார். முதலாம் திரிபுவன மகாதேவியின் டேங்கானாள் கல்வெட்டின் படி, அவரது முன்னோடிகளான முதலாம் சிவகரனும் முதலாம் சாந்திகரனும் "மற்றவர்களுக்காக தங்கள் நாட்டின் செல்வத்தை மதப் பணிகளில் செலவழித்து தீர்த்துவிட்டனர்" என்கிறது. மேலும் பல மடங்களையும்கோவில்களையும் கட்டினார்கள். [7]

பிராமணியம்

[தொகு]
சாமுண்டி கோயில், ஒடிசா

பௌமா கர ஆட்சியின் பிற்பகுதி ஒடிசாவில் பிராமணியத்தின் மறுமலர்ச்சியைக் குறித்தது. இது தாந்த்ரீக பௌத்தத்தின் (வஜ்ரயானம்) பெயரில் நடத்தப்படும் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான அரச முயற்சிகளின் விளைவாக இருக்கலாம்.[13] முதலாம் சுபாகரனின் இராணி மாதவ-தேவி, மாதவேசுவரருக்கு ( சிவன்) அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோயிலைக் கட்டினார். மேலும் வழிபாடு நடத்துவதற்கு ஒரு சைவ ஆச்சாரியரையும் நியமித்தார். [14]

ஒரு வைணவரான இராணி முதலாம் திரிபுவன மகாதேவியின் தந்தை இராஷ்டிரகூடர் மற்றும் பாலப் படையெடுப்பாளர்களை இராச்சியத்திலிருந்து வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகித்ததாகத் தெரிகிறது.[7]

பத்தாவது மன்னன் ஐந்தம் சுபாகரன் (ஆட்சி பொ.ச. 881) தன்னை சிவ பக்தன் ( பரம-மகேசுவரன் ) என்று அழைத்துக் கொண்டார். குடும்பத்தின் அடுத்தடுத்த ஆட்சியாளர்கள் அனைவரும் சைவ சமயத்தைப் பின்பற்றினார்கள். குடும்பத்தால் கட்டப்பட்ட அனைத்து கோவில்களும் சிவன் கோவில்களாக இருந்தன. விதிவிலக்காக சாமுண்டிக்கு சாமுண்டி கோயில் கட்டப்பட்டது .[14]

சான்றுகள்

[தொகு]

உசாத்துணை

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]