மகல்வாரி (Mahalwari system) என்பது ஆங்கிலேயர்களால் அறிமுகப் படுத்தப் பட்ட ஒரு நிலவருவாய் திட்டமாகும். ஆங்கிலேயர்கள் உருவாக்கிய மூன்று முக்கியமான நிலவருவாய் திட்டங்களில் இத்திட்டமும் ஒன்றாகும். மகல் என்ற இந்தி சொல்லின் பொருள் வீடு, கிராமம் அல்லது சுற்றுவட்டாரம் என்பதாகும் [1]. இத்திட்டம் 1833 ஆம் ஆண்டு வில்லியம் பெண்டிங் ஆட்சி காலத்தில், ஓல்ட்டு மெக்கன்சி என்பவரால் பஞ்சாப், மத்திய மாகாணங்கள், வடமேற்கு மாகாணங்கள் ஆக்ரா, ஒரிசாவின் சில பகுதிகள், மத்தியப்பிரதேசம் போன்ற பகுதிகளில் முதன் முதலில் அறிமுகம் செய்யப் பட்டது. இந்த திட்டத்தின்படி நிலங்களின் தன்மைக்கேற்றவாறு வரி நிர்ணயம் செய்யப்பட்டது. நிலங்கள் முறையாக அளக்கப்பட்டன. பொதுவாக 66% வரி வசூல் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின்படி, கிராம சமுதாயத்திற்கும், அரசிற்கும் இடையே தரகர்கள் இல்லை. அரசுக்கு வரி செலுத்த வேண்டிய பொறுப்பு கிராமத்தையே சார்ந்தது. சில இடங்களில் நீர்ப்பாசன வசதியை அரசு செய்து தந்தது என்றாலும் அவற்றின் பலன்கள் அனைத்தும் அரசிற்கே கிடைத்தது எனலாம். இந்த திட்டத்தினால் இந்திய விவசாயிகள் கடுமையாக பாதிக்கப் பட்டனர். இந்த முறை உத்திர பிரதேசம், வடமேற்கு மாகாணம், மத்திய இந்தியாவின் சில பகுதிகள் மற்றும் பஞ்சாபில் நடைமுறையில் இருந்தது.[2]