மகாத்மா காந்தி பேருந்து நிலையம் Mahatma Gandhi Bus Station (இம்லிபன் பேருந்து நிலையம் Imlibun Bus Station) | |
---|---|
மகாத்மா காந்தி பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிற்கும் நடைமேடைகள் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | கௌலிகுடா, ஐதராபாத்து, தெலங்காணா. |
உரிமம் | தெலங்காணா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் |
நடைமேடை | 110 |
கட்டமைப்பு | |
தரிப்பிடம் | ஆம் |
துவிச்சக்கர வண்டி வசதிகள் | ஆம் |
மாற்றுத்திறனாளி அணுகல் | ஆம் |
மகாத்மா காந்தி பேருந்து நிலையம் (Mahatma Gandhi Bus Station) முன்னதாக இம்லிபன் என்று அழைக்கப்பட்டது. இம்லிபன் என்றால் புளியமரக் காடு என்று பொருளாகும். மேலும், இம்லிபன் என்பது இந்தியாவின் ஐதராபாத்து நகரின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு பேருந்து நிலையமாகும். இப்பேருந்து நிலையம் முசி ஆற்றின் மேலுள்ள இம்லிபன் தீவில் அமைந்துள்ளது. தெலுங்கானா மாநிலச் சாலைப் போக்குவரத்துக் கழகம் இப்பேருந்து நிலையத்தை நிர்வகிக்கிறது. ஒரேயொரு பாதை [1] வழியாகத்தான் அணுக முடியுமென்றாலும், இரண்டு பிரதான மற்றும் இரண்டு சிறிய சாலைப் பாலங்களைக் [2] கடந்தால் இப்பேருந்து நிலையத்தை அடையலாம். இந்தியாவில் உள்ள பேருந்து நிலையங்களில் பரப்பளவில் மூன்றாவது பெரிய பேருந்து நிலையம் இதுவாகும். தில்லி மற்றும் சென்னைக்கு அடுத்து 30 ஏக்கர் பரப்பளவில் இது பரந்து விரிந்து காணப்படுகிறது.
ஐதராபாத் நிசாம் ஆட்சிக் காலத்தில் இப்பேருந்து நிலையம் முசி ஆற்றங்கரையில் கட்டப்பட்டது. குவிமாட வடிவில் கட்டப்பட்ட இப்பேருந்து நிலையத்திற்கு இம்லிபன் என்று பெயர் சூட்டப்பட்டது. சிறிது காலத்திற்குப் பின்னர் முசி ஆற்றுப்படுகை நிரப்பப்பட்டு நவீன் வசதிகள் இந்நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டது.
மகாத்மா காந்தி பேருந்து நிலையம் தெலங்காணா மாநிலத்திற்கு பெரும் சேவை புரிகிறது. இதைத் தவிர அடுத்துள்ள மாநிலங்களான ஆந்திரப் பிரதேசம், சத்தீசுகர், கருநாடகம், மத்தியப் பிரதேசம், மகாராட்டிரம் மற்றும் தமிழ்நாடு பகுதிகளுக்கும் இப்போக்குவரத்துக் கழகம் தன் சேவையை நீட்டித்துள்ளது. அடுத்த மாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகள் தினமும் இந்நிலையத்தையே வந்தடைகின்றன.
சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் (120,000 மீ2) மகாத்மா காந்தி பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. 13 கோடி ரூபாய் மதிப்பில் இங்கு கட்டப்பட்டுள்ள கட்டிடத்தின் பரப்பளவு 8 ஏக்கர் ஆகும். பேருந்துகள் வந்து நிற்கவும் போகவும் 74 நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. 7380 சதுரமீட்டர் பரப்பளவுள்ள பயனியர் காத்திருக்கும் அறை, 3455 சதுரமீட்டர் பரப்பளவுள்ள வர்த்தக வளாகம், 5000 சதுரமீட்டர் பரப்பளவுள்ள தனியார் வாகன நிறுத்துமிடம் என பல்வேறு வசதிகளுடன் இப்பேருந்து நிலையம் உள்ளது. ஐதராபாத்தில், தெலங்காணா மாநிலச் சாலைப் போக்குவரத்துக் கழகம் பேருந்து நிலைய முனையங்கள் பலவற்றை நிர்வகிக்கிறது. தொலைதூரப் பேருந்துகளுக்காக பராமரிக்கப்படும் இரண்டு நிலையங்களில் இதுவும் ஒன்றாகும்.