மகாமகம் (Mahamaham) என்பது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் இந்துப் பண்டிகையாகும். ஆண்டுதோறும் மாசித் திங்கள் மகம் நாளன்று மாசி மகம் விழா கொண்டாடப்படுகிறது. வியாழன் சிம்ம ஓரையில் பயணிக்கும் பொழுது, வரும் மாசி மகம் விழா மாமகம்[1] ஆகும். இந்நிகழ்வு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகிறது.[2] பொதுவாக இந்தியாவில் இந்துக்களின் புனித நீராடல் என்பதானது நதிக்கரைகளில் மட்டுமே காணப்படும் நிகழ்வாகும். கும்பகோணத்தில் மட்டுமே புனித நீராடல் என்பதானது மாமகக் குளத்தில் நீராடுவதைக் குறிக்கும். இக்குளத்தில் நீராடுபவர் பொற்றாமரைக் குளத்திலும் நீராடிக் காவிரி நதிக்குச் செல்வது மரபாகும்.[3][4]
பல அவைகள் இணைந்தது பேரவை(பெருமை+அவை) ஆகும். பல மன்றங்கள் இணைந்தது மாமன்றம்(மா+மன்றம்) ஆகும். இது இடத்திற்கு. இதே போல காலத்திற்கும் உள்ளது. பல ஆண்டுகளிற்கு ஒரு முறை(இங்கு பன்னிரண்டு ஆண்டுகளிற்கு ஒரு முறை) வரும் மகம் நாளினை மாமகம்(மா+மகம்) என்றனர். மாமகத்தை பேச்சுவழக்கில் மாமாங்கம் என்றும் கூறுகின்றனர். மாமகம் என்ற சொல்லே பேச்சுவழக்கில் திரிந்து மாமாங்கம் என்றானது. மாமாங்கம் என்ற சொல் பன்னிரண்டு ஆண்டுகாலத்தைக் குறிக்கும் சொல்லாகவும் பயன்படுகிறது. இதை சங்கதமயப்படுத்தி மஹாமஹம் என்று அழைப்பர். இதை தமிழ்ப்படுத்தி மகாமகம் என்று அழைப்பர்.
இந்துக்களால் புண்ணிய நதிகளென கருதப்படும் கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவேரி, சிந்து, கோதாவரி, சரயு, தாமிரபரணி ஆகிய நவநதிகளும் பக்தர்களின் பாவங்களை நீக்கும் பணியினால் அவை பாவங்களை கொண்டவைகளாயின. இப்பாவங்களை களைய சிவபெருமானிடம் வேண்டினார்கள். அதற்கு சிவபெருமான் "கும்பகோணத்தில் அக்னித் திக்கில் ஓர் தீர்த்தமுண்டு. அதில் குரு சிம்ம ராசியில் இருக்கும் போது வரும் மக நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமி நாளை மகாமக நாளென்பர். அந்நாளில் அத்தீர்த்தத்தில் முறைப்படி நீராடினால் உங்களின் பாவங்கள் நீங்கும்" என்றார். அதன்படி நதிகள் புனித நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொண்டன என்பது தொன்மக் கதையாகும்.[5]
இந்த மகாமக குளத்தினை நவகன்னிகளும், திசைத் தெய்வங்களும் உண்டாக்கின என்பதால் இந்த தீர்த்தம் மகாமக தீர்த்தம் என்றும் நவகன்னியர் தீர்த்தமென்றும் அழைக்கப்படுகின்றன.
சிவன் கைலாசத்திலிருந்து நவகன்னிகையரை மகாமகக் குளத்திற்கு அழைத்துவந்து பாவங்களைப் போக்கினார். அவ்வகையில் ஒரே நேரத்தில் 12 சைவக் கோயில்களின் சுவாமிகள் ஒரே இடத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி கொடுப்பது இக்குளத்தில் மட்டுமேயாகும். இந்நிகழ்வு வேறு எங்கும் கிடையாது.[6] இக்கோயில்கள் மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி கொடுக்கும் கோயில்களாகும். இக்கோயில்களில் கோடீஸ்வரர் கோயில் மற்றும் அமிர்தகலசநாதர் கோயில் கும்பகோணம் நகரில் அண்மையில் உள்ளன. மற்ற 10 கோயில்களும் கும்பகோணத்தில் அமைந்துள்ளன.
மகாமகத்தின்போது கீழ்க்கண்ட வைணவக் கோயில்களின் சுவாமிகள் எழுந்தருளி காவிரி நதியில் தீர்த்தவாரி நடைபெறும்.[6] இக்கோயில்கள் அனைத்தும் கும்பகோணம் நகரில் அமைந்துள்ளன.
தேவகுருவாகிய பிரகஸ்பதி என்றழைக்கப்படும் வியாழ பகவான், சிம்ம ராசியுடன் பொருந்தும்போது, அவரோடு மாசி மாதத்தில் மக நட்சத்திரமும், பௌர்ணமியும் சேரும் நிலையில், கும்ப ராசியில் சூரியன் இவர்களையும், இவர்களை சூரியனையும், முழுப் பார்வையுடன் பார்க்கும் நாளே மகாமகப் புண்ணிய நாளாகும். குரு பகவான் கும்ப ராசிக்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையே வருவதால் மகாமகப் புண்ணிய காலமும் 12 ஆண்டுகளுக்கொரு முறை வருகிறது. பிரம்மதேவர் கும்பேசரைப் பூசிப்பதற்குத் தகுந்த காலம் மாசித்திங்களே என மனத்துள் கொண்டு, சீலம் நிறைந்த அந்த மாதத்துப் பூர்வ பட்சத்திலே வரும் அசுவதி நட்சத்திரத்தில் புனித தீர்த்தத்தில் மூழ்கி, பூசையைத் தொடங்கி, மாசி மக மகோத்ஸவம் செய்வித்தார். ஒன்பது நாள் விழாவைச் சிறப்பாகச் செய்து, பத்தாவது என்று சொல்லப்படுகின்ற திருநாளிலே, மக நாளிலே, அக்னித் திக்கில் உள்ள தீர்த்தத்தில் கும்பேசருக்கு தீர்த்தம் ஆட்டு விழாவும் செய்தார். அதுவே மக விழா என்றழைக்கப்படுகிறது.[7] இதுவரை மகாமகம் 1518, 1529, 1541, 1553, 1565, 1577, 1589, 1600, 1612, 1624, 1636, 1648, 1660, 1672, 1683, 1695, 1707, 1719, 1731, 1743, 1755,1767, 1788, 1802, 1814, 1826, 1838, 1850, 1861, 1873, 1885, 1897, 1909, 1921, 1933, 1945, 1956, 1968, 1980, 1992, 2004 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்றுள்ளன.[8]
அகம் என்றால் பாவம் என்று ஒரு பொருள் உண்டு. மா என்றால் அணுகாது என்று பொருள். எனவே, மாஅகம்=மாகம் (மாமகம்-மிகப்பெரிய பாவ நீக்கம்).[9]
திருச்சிராப்பள்ளி திருவானைக்கா கோவிலில் உள்ள விஜயநகரப் பேரரசின் குறுநில மன்னான தெலுங்குச் சோழன் வாலக காமயர் அக்கலராசருக்குரிய கல்வெட்டில் திருவானைக்கா கோவிலிலிருக்கும் அகிலாண்ட நாயகியருக்குத் தினமும் அமுது படைக்க வெண்கோகொண்கொடி என்னும் கிராமத்தில் ஒரு வேலி நிலம் தானமாக தரப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இக்கல்வெட்டின் காலம் பொ.ஊ. 1482 மாசி மாதம் ஒன்பதாம் தியதி ஞயிற்றுக்கிழமை. அன்று மகாமகப் புண்ய காலமாகும்.[10]
கிருஷ்ணதேவராயர் கொண்டாடிய மகாமகம் தொடர்பாக இரு வெவ்வேறு நாள்கள் குறிப்பிடப்படுகின்றன. பொ.ஊ. 1517 தை மாதம் 6ஆம் தேதி வெள்ளிக்கிழமை விஜயநகரமன்னர் கிருஷ்ணதேவராயர் (பொ.ஊ. 1509-1929) திருப்பதிக்குச் சென்று திருவேங்கடநாதனைத் தரிசித்தார். பிறகு கும்பகோணத்திற்குச் சென்று மாசி மாதம் 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை மகாமகப் புண்ய காலத்தில் மகாமகக் குளத்தில் நீராடினார்.[10][11] பொ.ஊ. 1518ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி புதன்கிழமை கும்பகோணத்தில் நடந்ததாகவும், அன்று கிருஷ்ணதேவராயர் மகாமகக்குளத்தில் நீராடி பொன்னும் பொருளும் வாரி வழங்கியதாகவும் கல்வெட்டுக்களின் மூலமாகத் தெரியவருகிறது.[12]
1624ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மகாமகம் வந்ததாகவும் அன்று ரகுநாத நாயக்கன் குளத்தில் நீராடி, தன் எடைக்குச் சமமான பொன்னை தானமாக வழங்கியதாகவும் துலாபார மண்டபத்தில் காணமுடிகிறது.[12]
மகாமகத்திருவிழாவின்போது புலவர்களும், இலக்கியவாதிகளும் கூடி விவாதம் செய்துள்ளனர். டாக்டர் உ.வே.சாமிநாதையரவர்களின் கூற்று மூலம் இதனை அறியலாம். “அந்த வருஷம் 1873.மகாமக வருஷம். மகாமக காலத்தில் கும்பகோணத்தில் பெருங்கூட்டம் கூடுமென்றும் பல வித்வத் சபைகள் நடைபெறும் என்றும் கேள்வியுற்றிருந்தேன். திருவாவடுதுறை ஆதீனத்தலைவர் ஸ்ரீசுப்பிரமணிய தேசிகர் தம் பரிவாரங்களுடன் சென்று தங்குவாரென்றும், பல வித்துவான்கள் அவர் முன் கூடுவார்களென்றும். பிள்ளையவர்களும் அவருடன் போய்த் தங்குவாரென்றும் அறிந்தேன். நம்முடைய துரதிர்ஷ்டம் எவ்வளவு கொடியது. பன்னிரண்டு வருஷங்களுக்கு ஒரு முறை வரும் இவ்விசேஷசத்துக்குப் போய் வர நமக்கு முடியவில்லை. பிள்ளையவர்களைச் சார்ந்தும் அவர்களோடு சேர்ந்து இப்புண்ணிய காலத்தில் நடக்கும் விசேஷங்களைக் கண்டுகளிக்க முடியாமல் அசௌகரியம் நேர்ந்துவிட்டதே என்றெல்லாம் நினைத்து வாடினேன். சூரிய மூலையிலிருந்து சிலர் மகாமகத்துக்குப்போய் வந்தனர். அங்கே சுப்பிரமணிய தேசிகரும், பிள்ளையவர்களும் வந்திருந்தார்களென்றும் பல விசேஷங்கள் நடைபெற்றனவென்றும் அவர்கள் வந்து சொல்ல எனக்கும் இயல்பாகவே இருந்த வருத்தம் பின்னும் அதிகமாயிற்று“ என்று ‘என் சரித்திரம்‘ நூலில் குறிப்பிடுகிறார். இங்கு பிள்ளையவர்கள் எனக் குறிப்பிடப்படுபவர் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை ஆவார்.[13][14]
1885இல் ஒரு மகாமகம் நடைபெற்றுள்ளது.[15] தாருண வருஷம் மாசி மாதம் (1885 மார்ச்சு) மகாமகம் வந்தது. அப்போது கும்பகோணத்தில் அளவற்ற ஜனங்கள் கூடினர். தியாகராச செட்டியாரும் வந்திருந்தார். திருவாவடுதுறையிலிருந்து ஸ்ரீ சுப்பிரமணியதேசிகர் பரிவாரத்துடன் விஜயம் செய்து கும்பகோணம் பேட்டைத் தெருவிலுள்ள தங்கள் மடத்தில் தங்கியிருந்தனர். பல கனவான்களும் வித்துவான்களும் வந்து அவரைக் கண்டு பேசி இன்புற்றுச் சென்றனர்.[16]
1897இல் ஒரு மகாமகம் நடைபெற்றுள்ளது.[15] 1897-ஆம் வருடம் பிப்ரவரி மாதம் மகாமகம் நடந்தது. திருவாவடுதுறை ஆதீன கர்த்தராக விளங்கிய அம்பலவாண தேசிகர் தம்முடைய பரிவாரங்களுடன் கும்பகோணம் பேட்டைத் தெருவில் உள்ள மடத்தில் விஜயம் செய்திருந்தார். பல தேசங்களிலிருந்தும் பிரபுக்களும் வித்துவான்களும் வந்து கூடினர். அப்போது தினந்தோறும் அம்பலவாண தேசிகருடைய முன்னிலையில் வித்துவான்களுடைய உபந்யாசங்களும் சம்பாஷணைகளும் நடைபெற்றன.[17][18] பாம்பன் சுவாமிகள் 1897 வருடம் மாசி மாதம் பன்னிரு மகாமக புண்ணியகால ஸ்நானம் கருதி கும்பகோணம் வந்தார்கள்.[19]
மகாமகம் என்பது பொதுவாகப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பகோணத்தில் நடைபெறும் திருவிழாவாகும். இருபதாம் நூற்றாண்டில் வந்த மகாமகங்கள் பின்வரும் ஆண்டுகளில் நடந்துள்ளன.[20]
6.3.1909 சனிக்கிழமை (கீலக மாசி 23)
22.2.1921 செவ்வாய் (ரௌத்ரி மாசி 11)
10.3.1933 வெள்ளி (ஆங்கிரஸ மாசி 27)
26.2.1945 திங்கள் (தாரண மாசி 15)
25.2.1956 (மன்மத மாசி 13)
14.2.1968 புதன் (பிலவங்க மாசி 2)
1.3.1980 சனி (சித்தார்த்தி மாசி 18)
18.2.1992 செவ்வாய் (பிரஜோத்பத்தி மாசி 6)
அப்போது கும்பகோணம் காஞ்சி மடத்தின் நிர்வாகப் பீடமாக இருந்தது. கலவையில் ஆசாரிய பீடம் ஏறிய பரமாச்சாரியார் கும்பகோணம் நோக்கி பயணம் தொடங்கினார். 1909இல் கும்பகோணத்தில் மகாமகம் திருவிழா வந்தது. மகாமகத்தன்று சுவாமிகள் யானை மீது அமர்ந்தவாறு மகாமக குளத்திற்கு நீராடச் சென்றார். தஞ்சை அரச குடும்பத்தினரும், அரசு அதிகாரிகளும் முன் சென்றனர். அது கண் கொள்ளாக்காட்சியாக அமைந்தது.[21]
1921ஆம் ஆண்டு நடந்த மகாமகம் குறித்து மகாகவி சுப்பிரமணிய பாரதி ஓர் அரிய கட்டுரையை எழுதியுள்ளார். தீர்த்த ஸ்தலங்கள், புண்ணிய ஷேத்திரங்கள் எல்லா மதத்தினருக்கும் பொதுவாக அமைந்திருக்கின்றன. பாவத்தைத் துரத்திட விரும்புபவர்க்கு ஒரு மனோ உறுதியை இத்தகைய விழாக்கள் நமக்குத் தெளிவுறுத்துகின்றன என்று குறிப்பார். ‘பாவத்தைக் களைந்து புண்ணியத்தைப் போட்டுக்கொள்வதாகிய ஒரு ராஜசடங்கு‘ என்று மகாமகத்தை மகாகவி பாரதியார் குறிப்பிடுகிறார்.[22] இம்மகாமகத்தின்போது சென்னை முஸ்லீம் இளைஞர் சங்கத்தைச் சேர்ந்த 200 இளைஞர்கள் வருகை தந்து பொதுமக்களுக்குச் சீரிய தொண்டாற்றியுள்ளனர். அப்போது பட்டீஸ்வரத்தில் முகாமிட்டிருந்த மகா பெரியவர் இதனைத் தெரிந்து அத்தனை முஸ்லீம் இளைஞர்களையும் அழைத்து அகமகிழ்ந்தார். அதோடு மட்டுமல்லாமல் அவர்கள் அனைவருக்கும் அவர்களுடைய சங்கத்திற்கு அன்புப்பரிசாக வெள்ளிக்கோப்பைகளை வழங்கியுள்ளார்.[23]
கும்பகோணம் நகரத்திற்கு பிப்ரவரி 1932இல்தான் முதன்முதலாக மின்விளக்குகள் பொருத்தப்பட்டன. ஒரு தனியார் நிறுவனம் மின்சாரத்தை உற்பத்தி செய்து நகரத்திற்கு வழங்கியது. 1933ஆம் ஆண்டு நடந்த மகாமகத்திருவிழா தலைத் தீப ஒளித்திருவிழாவாக மின்னியது. தமிழ்நாட்டில் முதல் பேசும் திரைப்படம் துவக்கப்பட்ட ஆண்டு 1931. 1933ஆம் ஆண்டில் கருப்பு வெள்ளைப் படம் பார்த்த மக்களுக்கு இரவுநேரங்களில் வண்ணங்களோடு ஒளி வில்லைகள் இலவசமாக மகாமகக் கண்காட்சியின்போது காட்டப்பட்டது தனிச்சிறப்பாகும்.[24] இந்த மகாமகத்தின்போது பம்பாயிலிருந்து சர்க்கஸ் போட்டுள்ளார்கள். அனைவரும் அதனை அதிசயமாகப் போய்ப் பார்த்துள்ளார்கள். கூட்டுக்குள் சைக்கிள் விடுதல், நூறடி உயரத்தில் நின்று ஒருவர் தன் மேல் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திவிட்டு அப்டியே தண்ணீரில் விழுதல் என்ற சாகசமெல்லாம் இருந்தன.[25]
மகாமகம் என்பது பொதுவாகப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரவேண்டியது. 1956 மகாமகம் 11ஆம் ஆண்டிலேயே வந்தவகையில் சிறப்பு பெறுகிறது. 1956இல் மாசியிலேயே குருவும் சந்திரனும் சிங்க ராசியில் கூடிவிட்டனர். எனவே, அந்த ஆண்டே - பதினொரு ஆண்டுகளே இடைவெளி ஆகியிருந்தபோதிலும் - மகாமகம் வந்துவிட்டது.[20]
கும்பேஸ்வர சுவாமியின் நினைவாக இவ்விழா கொண்டாடப்படுகிறது. அது சமயம் மகாமகக்குளத்தில் நீராடுவது புனிதமாகக் கருதப்படுகிறது. 1980, மார்ச் 1 ஆம் தேதி மகாமக விழா மிகச் சிறப்புடன் நடைபெற்றது.[26] இம்மகாமகத்தின்போது கும்பகோணம் கீதா வெளியீட்டகம் கும்பகோணம், மகாமகம், குடந்தையைச் சுற்றிலுள்ள தலங்கள், குடந்தையின் வாழ்ந்த கோமான்கள் என்ற தலைப்புகள் உள்ளிட்ட கட்டுரைகளைக் கொண்ட ஒரு மலரை வெளியிட்டது.
1992 ஆம் ஆண்டு பக்தர்களின் வருகை ஒரு மில்லியனைத் தாண்டியது என்று கணக்கிட்டு இருக்கிறார்கள். மகாமஹத்தன்று முக்கியமான கோவில் தேர்களில் இறைவன் வீதி உலா வந்து மக்களை ஆசீர்வதிக்கிறார். ஸ்வாமிகள் நீராடும் போதே பக்தர்களும் நீராட அனுமதிக்கப்படுகிறார்கள். இதை தீர்த்தவாரி என்று அழைக்கிறார்கள். இவ்வாறு செய்வது பல ஜென்ம பாவங்களைப் போக்கும் என்பது ஐதீகம்.[27] அப்போதைய தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா பெப்ரவரி 18 அன்று நடைபெற்ற மகாமக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது ஏற்பட்ட நெரிசலில் மகாமகக் குளக்கரையில் அமைந்திருந்த ஒரு கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்து 60 நபர்கள் பலியானார்கள்.[28][29][30]
இம்மகாமகத்தின் நினைவாக தமிழ்நாடு அரசு சிறப்பு மலரை வெளியிட்டது. இந்நூல் அருளாளர்களின் ஆசியுரைகள், வாழ்த்துச்செய்திகள் மற்றும் பதிப்புரையுடன் உள்ளது. இந்நூலில் சுமார் 40 கட்டுரைகள் அடங்கியுள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற சைவத்தலங்கள், வைணவத்தலங்கள், கும்பகோணம், மகாமகம், கோயில் அமைப்பு, மடங்கள், செப்புத்திருமேனி, கோவிந்த தீட்சிதர் உள்ளிட்ட பல தலைப்புகளில் கட்டுரைகள் காணப்படுகின்றன.
21ஆம் நூற்றாண்டில் இதுவரை இரண்டு மகாமகங்கள் (2004 மற்றும் 2016இல்) நடைபெற்றுள்ளன.
இருபத்தோராம் நூற்றாண்டின் முதல் மகாமகம் 6.3.2004 (மாசி 23)இல் நடைபெற்றது. 12 வருடங்களுக்கு ஒரு முறை கும்பகோணத்தில் கொண்டாடப்படும் மகாமகத்திருவிழா தமிழக மக்களுக்கு முக்கியமானதாகும். இந்த டிஜிட்டல் யுகத்தில், பரபரப்பாகிவிட்ட வாழ்க்கை முறையையும் மீறி பல லட்சம் மக்கள் நாடெங்குமிருந்து வந்து கும்பகோணத்தில் குவிந்திருந்தனர் என்பது இந்திய ஆன்மிகப் பாரம்பரியம் தொடர்வதற்கு சான்று. 75,000 பேர் நிற்கக்கூடி மகாமகக் குளத்தில் இந்தியா முழுவதும் இருந்து வந்து நீராடிச் சென்ற பக்தர்களின் எண்ணிக்கை 25 இலட்சம். கடந்தமுறைபோல் அசம்பாவிதம் நடக்காமலிருப்பதற்காகப் பாதுகாப்பிற்குப் பயன்படுத்தப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 19,500. இந்த மகாமகத்திற்காக சாலைகள், பேருந்து நிலையங்கள், கழிப்பிட வசதிகள் தயார் செய்வதற்காக செலவிடப்பட்ட தொகை ரூ.40 கோடி.[31] இம்மகாமகத்தின் நினைவாக தமிழ்நாடு அரசு மகாமகம் 2004 சிறப்பு மலரை வெளியிட்டது. அந்நூலில் அருளாளர்களின் ஆசியுரைகளுடனும், 40க்கும் மேற்பட்ட சிற்பம், ஓவியம், கட்டடம், இசை, இலக்கியம், கல்வெட்டு, புராணம் என்ற பல கூறுகளில் அமைந்த கட்டுரைகளைக் கொண்டுள்ளது. மகாமகம், குடந்தையில் சூரியன் வழிபாடு, பழையாறைத் திருக்கோயில்கள், குடந்தைக் கீழ்க்கோட்டம், ஏட்டுச்சுவடிகளில் குடந்தைப்புராணம், கலம்காரி ஓவியங்கள், கும்பேசர் குறவஞ்சி உள்ளிட்ட பல தலைப்புகளில் கட்டுரைகள் காணப்படுகின்றன.
2016 மகாமகம் பிப்ரவரி 13ம் தேதி சிவன் கோயில்களில் கொடியேற்றத்துடன் துவங்கும் மகாமக திருவிழாவின் நிறைவு நாளான 22ம் தேதி மகாமகக் குளத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராடுவர்.[32] ஒவ்வொரு மகாமகத்தின்போது அதற்கு முதல் ஆண்டு இளைய மகாமக ஆண்டாக கருதப்படும் நிலையில் 2015ஆம் ஆண்டு இளைய மகாமகம் நடைபெற்றது. மகாமக விழாவினையொட்டி மகாமகம் தொடர்பான கோயில்களில் 24 ஜனவரி 2016 அன்று பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.[33] சிவன் கோயில்களில் 13 பிப்ரவரி 2016 அன்றும் வைணவக் கோயில்களில் 14 பிப்ரவரி 2016 அன்றும் கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. பிப்ரவரி 21, 22 ஆகிய இரு நாள்களிலும் அனைத்துக் கோயில்களும் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும். அபிமுகேஸ்வரர் கோயிலிலும், நாகேஸ்வரர் கோயிலிலும் 21 பிப்ரவரி 2016 அன்றும் கும்பேஸ்வரர் கோயிலில் 22 பிப்ரவரி 2016 அன்றும் தேரோட்டம் நடைபெறவுள்ளது.[34] மகாமக பெருவிழாவுக்காக தஞ்சை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக சிறப்பு அடையாள சின்னம் (லோகோ) வெளியிடப்பட்டது. இந்த சின்னத்தில் ஆதிகும்பேஸ்வரர் கோயில் கோபுரம், மகாமகக் குளம், சிவன், பார்வதி படத்துடன் சூலத்தையும், பெருமாளுக்குரிய திருமண், அந்த எழுத்துகளின் நடுவில் பொறிக்கப்பட்டு உள்ளது.[35]
மகாமகக் குளத்தைச் சுற்றி இருந்த மணல் சேற்றுப்பகுதிகளை நீக்கி, தூய்மைப்படுத்தி, குளத்தின் உள்ளே ஏறி இறங்க வசதியாக படித்துறைகளை அமைத்தவர். அதன் மேல் தளத்தில் மகாமகக் குளத்தைச் சுற்றிலும் பதினாறு மண்டபங்களையும் கட்டினார். அதன் நினைவாக ஒவ்வொன்றின் அருகிலும் பதினாறு சிவன் கோயில்களைச் சிறியதாக அழகுற வடிவமைத்தார். இன்று நாம் காணுகின்ற மகாமகக்குளத்தின் அழகுக்கும், கலை நேர்த்திக்கும், சுந்தர அழகில் சொக்க வைக்கும் சுற்று மண்டபங்களின் எழில் தோற்றத்துக்கும் கோவிந்த தீட்சிதர் முக்கியக் காரணமாய் இருந்தார்.[36]
சைவ இலக்கியமான சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தில் மகாமகம் பற்றிய குறிப்புகள் உள்ளன. "பூமருவும் கங்கை முதல் புனிதமாம் பெருந்தீர்த்தம் மாமகத்தான் ஆடுதற்கு வந்து வழி படுங்கோயில்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மகாமகக் குளத்தில் காணப்படுகின்ற 19 படித்துறைகள், புனித தீர்த்தங்கள் என்று அண்மையில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டு உணர்த்துகிறது.[37]
டாக்டர் இராசு.பவுன்துரை, கும்பகோணம் மகாமகத்திருவிழா, தமிழ் மரபு மையம், தஞ்சாவூர் 613 004, 1991
புலவர் கோ.மு.முத்துசாமிபிள்ளை கும்பேசுவரர் திருக்கோயிலும் மகாமகத்திருவிழாவும், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1992