மகிபதிவர்மன் Mahipativarman ព្រះអង្គម្ចាស់ មហិទ្ធិវរ្ម័ន | |
---|---|
King Mahipativarman | |
கம்போடியாவின் முடியாட்சி | |
ஆட்சிக்காலம் | கி.பி. 790 - 802 |
முன்னையவர் | முதலாம் இராசேந்திரவர்மன் (Rajendravarman I) |
பின்னையவர் | இரண்டாம் செயவர்மன் |
பிறப்பு | அனிந்திதபுரம் (Aninditapura) |
இறப்பு | கி.பி. 802 அனிந்திதபுரம் |
துணைவர் | இராசேந்திரதேவி |
குழந்தைகளின் பெயர்கள் | இந்திராதேவி |
மரபு | பாலாதித்யபுரம் (Baladityapura) |
அரசமரபு | வர்மன் |
தந்தை | முதலாம் இராசேந்திரவர்மன் |
தாய் | நிருபத்தேந்திரதேவி |
மதம் | இந்து சமயம் |
மகிபதிவர்மன் அல்லது மகிபதிவன் (ஆங்கிலம்: Mahipativarman அல்லது Mahipativam; கெமர்: ព្រះអង្គម្ចាស់ មហិទ្ធិវរ្ម័ន; தாய் மொழி: มหิปติวรมัน) என்பவர் கெமர் பேரரசை (Khmer Empire) சார்ந்த சென்லா இராச்சியத்தின் (Chenla Kingdom) அரசர் ஆவார். சென்லா இராச்சியம் தற்போது கம்போடியாவில் ஒரு பகுதியாக உள்ளது.[1]
மகிபதிவர்மன் மன்னன், வியாதபுரம் (Vyathapura) எனும் அரச குடும்பத்தின் வழித்தோன்றல் ஆகும். மகிபதிவர்மனின் தந்தையார் பெயர் முதலாம் இராசேந்திரவர்மன் (Rajendravarman I). தாயாரின் பெயர் நிருபத்தேந்திரதேவி (Nrpendradevi of Sambhupura).
மகிபதிவர்மனின் மனைவியின் பெயர் இராசேந்திரதேவி (Rajendra Devi). இவர்களின் மகளின் பெயர் இந்திராதேவி (Indra Devi).
இந்திராதேவி; முதலாம் இந்திரவர்மன் எனும் கம்போடிய மன்னனைத் திருமணம் செய்து கொண்டார். இந்திராதேவி - முதலாம் இந்திரவர்மன் இணையருக்குப் பிறந்த மகன் முதலாம் யசோவர்மன் (Yasovarman I). அந்த வகையில் இந்திராதேவி; வியாதபுரம் (Vyathapura); சம்புபுரம் (Shambhupura) ஆகிய அரச குடும்பங்களின் வழித்தோன்றல் ஆகும்.
8-ஆம் நூற்றாண்டில் பற்பல உள்நாட்டுப் போர்களினால் சென்லா இராச்சியம் அரசியல் ரீதியாக நிலையற்றதாக இருந்தது. இந்தப் போர்ப் பிரச்சனைகளும் மோதல்களும்; சென்லாவின் சில சிறிய பகுதிகளையும்; சில மாநிலங்களையும் தடுமாறச் செய்து பலகீனப்படுத்தின.
இந்தக் கட்டத்தில் ஜாவாவில் இருந்து சைலேந்திர ஜாவானியர்கள் (Sailendra Javanese) சென்லா மீது படையெடுத்தனர். 787-ஆம் ஆண்டில் சைலேந்திரர்கள் மத்திய கம்போடியாவின் திரலாச்சு (Tralach Island) தீவைக் கைப்பற்றினர். அத்துடன் அன்னாம் (Annam) மற்றும் சம்பா கடற்கரைகளை ஆக்கிரமித்தனர்.
பின்னர் அவர்கள் சம்புபுரம் (Shamphoupur) நகரத்தின் மீது படையெடுத்தனர். அவர்கள் சம்புபுரம் நகரத்தை கொள்ளையடித்து எரித்து அழித்தார்கள். அவர்கள் விரும்பியபடி மக்களைக் கொன்றார்கள்.
இந்த நேரத்தில் சைலேந்திர ஜாவானியர்கள் சிலரைப் பிடித்து அவர்களின் தலைகளைக் கொய்தனர். இவர்களை எதிர்த்துப் போராடும் போது மகிபதிவர்மன் பிடிபட்டு அவரின் தலை துண்டிக்கப்பட்டது. அத்துடன் அவரின் தலை ஜாவாவிற்கு கொண்டு செல்லப்பட்டது.
பின்னர், சைலேந்திரர்கள் கம்போடியாவின் சென்லா பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் கி.பி. 802-ஆம் ஆண்டில் கெமர் மன்னர் இரண்டாம் செயவர்மன் சென்லாவை விடுவித்தார்.