1968ஆம் ஆண்டு மெக்சிகோ ஒலிம்பிக் போட்டியின், 200 மீட்டர் அரை இறுதி தகுதிச் சுற்று ஓட்டத்தில், அவர் செய்த 20.92 விநாடிகள் சாதனையை இதுவரை மலேசியர் எவராலும் முறியடிக்க முடியவில்லை.[2]பறக்கும் மருத்துவர் என்று அன்பாக அழைக்கப்படுகின்றார்.[3]மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தின் இணை வேந்தராக பதவி வகிக்கும் முதல் மலேசிய இந்தியர், முதல் மலேசியத் தமிழர்.[4][5]
மணி ஜெகதீசன், பேராக் மாநிலத்தின் அரச நகரான கோலாகங்சார் நகரில் 1943 நவம்பர் மாதம் 2ஆம் தேதி பிறந்தார். கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் உள்ள 100 குவார்ட்டர்ஸ் பகுதியில் வளர்ந்தார். ஜாலான் பத்து தொடக்கப் பள்ளியில் ஆறாம் வகுப்பு வரை பயின்றார்.
1955ஆம் ஆண்டு தன்னுடைய உயர்நிலைப் படிப்பை ‘வி.ஐ’ என்று அழைக்கப்படும் விக்டோரியா உயர்நிலைப்பள்ளியில் ஓராண்டு பயின்றார். பின்னர் 1956ஆம் ஆண்டு, சிங்கப்பூரில் இருக்கும் ஆங்கிலோ சீனப் பள்ளிக்கு மாற்றலாகிச் சென்றார். அங்கு 1961ஆம் ஆண்டு வரை அவருடைய கல்வி வாழ்க்கை தொடர்ந்தது.
1967ஆம் ஆண்டு சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில்நோயியல் துறையில் பட்டம் பெற்று மருத்துவரானார். அது மட்டும் அல்லாமல், அந்த ஆண்டு பல்கலைக்கழகத்தின் சிறந்த மாணவராகவும் தேர்வு செய்யப்பட்டார். அதற்காகத் தங்கப் பதக்கமும் பெற்றார்.
1970ஆம் ஆண்டு பாங்காக்கில் உள்ள மகிடோல் பல்கலைக்கழகத்திலும், 1970ஆம் ஆண்டு லண்டன் பல்கலைக்கழகத்திலும் மருத்துவத் துறையில் உயர்க்கல்வியை மேற்கொண்டார்.[6] ஆங்கிலோ சீனப் பள்ளியில் பயிலும் போது, தன்னுடைய 16வது வயதிலேயே 1960 ரோம் ஒலிம்பிக் போட்டிகளில் மலாயாவைப் பிரதிநிதித்தார்.[7] எந்தப் பதக்கத்தையும் பெறவில்லை.
1960ஆம் ஆண்டு ரோம் ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு, அடுத்து அடுத்து வந்த இரு ஒலிம்பிக் போட்டிகளிலும், இரு ஆசிய விளையாட்டுகளிலும் மலேசியாவைப் பிரதிநிதித்துச் சிறப்பு செய்தார். அவர் மலேசிய நாட்டிற்குப் பதக்கங்களை மட்டும் கொண்டு வரவில்லை.
மாறாக இந்த நாட்டில், ஓட்டப் பந்தய சாதனைகளையும் படைத்துள்ளார். அவர் செய்த சில சாதனைகள் இன்றும் முறியடிக்கப்படாமல் இருக்கின்றன. அவரை ஆசியாவின் வேகமான ஓட்டக்காரர் என்றும் பறக்கும் மருத்துவர் என்றும் மலேசிய மக்கள் அன்புடன் அழைக்கின்றனர்.[8]
மணி ஜெகதீசன் முதல் முறையாக 1959 பாங்காக் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டார். 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. 1961 தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில், மலேசியாவிற்கு மூன்று தங்கங்களையும் ஒரு வெள்ளியையும் கொண்டு வந்தார். அடுத்து அவருடைய பார்வை ஆசிய விளையாட்டுகளின் பக்கம் திரும்பியது.
1962இல் ஜகார்த்தாவில் நடைபெற்ற போட்டிகளில் 200மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் பெற்று புதிய சாதனையையும் செய்தார். 1966இல் பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மூன்று தங்கங்களைக் கொண்டு வந்தார். ஓர் அனைத்துலகப் போட்டியில், ஒரே சமயத்தில் மூன்று தங்களை வென்று சாதனை படைத்தவர்கள் மலேசியாவில் எவரும் இல்லை. அதன் பின்னர் ‘ஆசியாவின் வேகமான மனிதர்’ எனும் அடைமொழியும் அவருக்கு கிடைத்தது.[9]
அதன் பின்னர், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 200மீட்டர் ஓட்டத்தில் மலேசியர் எவருக்கும், இதுவரையில் தங்கப் பதக்கம் கிடைக்கவில்லை. அதுவும் ஒரு சாதனையாக இருந்து வருகிறது. அதே ஆண்டு ‘ஆசிய விளையாட்டாளர்’ (Asian Athlete of 1966) எனும் விருதும் அவருக்கு கிடைத்தது. ஜெகதீசன் மூன்று ஒலிம்பிக் விளையாட்டுகளில் கலந்து கொண்டு இருக்கிறார்.
தன்னுடைய 16வது வயதில் உயர்நிலை நான்காம் படிவம் படித்துக் கொண்டு இருக்கும் போது 1960 ரோம் ஒலிம்பிக்கில் பங்கு பெற்றார். 1964இல் பலகலைக்கழகத்தில் படித்துக் கொண்டு இருக்கும் போது 1964 தோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கு பெற்றார். இந்த ஒலிம்பிக் போட்டியில் 200மீட்டர் நேரோட்டத்திற்கு, அரையிறுதிப் போட்டியாளராகத் தேர்வு பெற்றார்.
1968 மெக்சிகோ ஒலிம்பிக்கில் தகுதி பெற்ற ஒரு மருத்துவ அதிகாரியாகப் பங்கு பெற்றார். அதே ஆண்டு, தம்முடைய 24வது வயதில் விளையாட்டுகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார். இப்போது, டாக்டர் மணி ஜெகதீசன், அனைத்துலக ரீதியில் ஒரு பிரபலமான மருத்துவராகவும், மருத்துவ ஆய்வாளராகவும் ஓர் அடையாளத்தை உருவாக்கி இருக்கிறார்.[10]