இடம் | சந்தை, ஈரோடு |
---|---|
வகை | மணிக்கூட்டுக் கோபுரம் |
ஈரோடு, மணிக்கூட்டுக் கோபுரம் (Clock Tower, Erode) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் ஈரோட்டில் அமைந்துள்ள ஒரு மணிக்கூட்டுக் கோபுரம். இது உள்ளூரில் மணிக்கூண்டு என்றும் அழைக்கப்படுகிறது.
பரபரப்பான சந்தை வர்த்தகர்களின் நலனுக்காக அசல் மணிக்கூட்டுக் கோபுரம் ஆங்கிலேயர்களால் இந்த இடத்தில் கட்டப்பட்டது. இது பழைய நகரத்தின் மையத்தில் பன்னீர்செல்வம் பூங்காவிற்கு அருகில் அமைந்துள்ளது. இது இப்போது ஈரோட்டின் வர்த்தப் பகுதியாகும். இது மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் ஒரு சந்திப்பில் கட்டப்பட்டுள்ளது. இங்கு நேதாஜி சாலை, ஆர்.கே.வி. சாலை, பிரப் சாலை, ஈசுவரன் கோவில் சாலை அல்லது கோட்டை சாலை என ஐந்து சாலைகள் உருவாகின்றன. தர்க்கரீதியாக, இது ஈரோடு நகரத்தின் ஆரம்ப புள்ளியாகும். இந்த மணிக்கூட்டுக் கோபுரத்தின் தெற்கில் அப்துல்கனி துணி சந்தையும், வடக்கே காய்கறி சந்தையும் உள்ளது.
இது சரியாக ஈரோடு கோட்டையின் கிழக்கு நுழைவாயிலில் அமைந்துள்ளது. தளபதி மீடோசு படையெடுத்து வந்த காலத்தில் இக்கோட்டை ஏறத்தாழ முற்றாகவே அழிந்து விட்டது. [1] பிறகு, மக்களின் நிவாரணப்பணிக்காக அழிவுற்ற மண்கோட்டையினை சீர் செய்து, சுற்றியிருந்த அகழியையும் நிரப்பினார்கள். முன்பு அகழியிருந்த பகுதியே தற்பொழுது அகழிமேடு என்று அழைக்கப்படுகிறது.
ஆனால் தற்போதும் கோட்டை என்ற பெயர் வழக்கில் உள்ளது. மணிக்கூண்டிற்கு மேற்கே, அகழிமேடு வரை உள்ள பகுதியை 'கோட்டை' என்றும், மணிக்கூண்டிற்குக் கிழக்கே காலிங்கராயன் கால்வாய் வரை உள்ள பகுதியை 'பேட்டை' என்றும் அழைத்து வருகின்றனர்.
சாலை மேம்பாடுகளுக்காக அசல் கட்டமைப்பு இடிக்கப்பட்டிருந்தாலும், மாற்று கட்டமைப்புகள் அந்த இடத்தில் ஈரோடு மாநகராட்சியால் கட்டப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், இந்த இடத்தில் சில காலம் மணிக்கூட்டுக் கோபுர அமைப்பு இல்லாமல் இருந்தது. ஆனாலும், இந்த இடம் அதன் பெயரைத் தக்க வைத்துக் கொண்டது. மேலும் உள்ளூர் மக்களால் கடிகார கோபுரம் அல்லது தமிழில் மணிக்கூண்டு என்று அழைக்கப்படுகிறது.
கடந்த காலத்தின் மகிமையைத் தக்க வைத்துக் கொள்ள, பிப்ரவரி 2006 இல், ஈரோடு மாநகராட்சி அதே இடத்தில் நவீன மணிக்கூட்டுக் கோபுரத்தை உருவாக்க திட்டமிட்டது. 50 அடி உயர கோபுர அமைப்பு 2009 ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது. நடுவில் ஒரு காவல் கண்காணிப்பு கோபுரம் உள்ளது. [2]
பின்னர் 2015 ஆம் ஆண்டில், இந்த கோபுரம் அகற்றப்பட்டு, பொது-தனியார் பங்களிப்புடன் ஒரு புதிய கட்டமைப்பு கட்டப்பட்டுள்ளது. அந்த இடத்தில் இது மூன்றாவது கட்டமைப்பாகும். இது இன்னும் பொதுமக்களுக்கு சேவையை வழங்கி அதன் மகிமையைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. [3]