மதராஸ் மனதே (Madras Manade) (தமிழில் பொருள்: சென்னை நமதே) என்பது ஒரு தெலுங்கு முழக்கம் ஆகும். சென்னை மாநிலத்தில் இருந்து தெலுங்கு மக்கள் வாழும் பகுதிகளைப் பிரித்து ஆந்திர மாநிலத்தை உருவாக்கவேண்டும் என்ற போராட்டம் நிகழ்ந்த காலத்தில், சென்னையில் வாழ்ந்த தெலுங்கு மக்கள் சென்னையைப் புதியதாக உருவாகும் ஆந்திரத்துடன் இணைத்து, அதன் தலைநகராக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுப்பிய முழங்கிய முழக்கமாகும்.
தெலுங்கர்களுக்கான தனிமாநிலக் கோரிக்கையானது 1913 முதல் (அதற்கும் முன்னதாகவே இருக்கலாம்) எழுப்பப்பட்டு வந்தது[1] என்றாலும், 1940 கள் மற்றும் 1950 களில் அதன் வீச்சும் வேகமும் அதிகரித்தது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தத் தொடர் போராட்டங்களைத் தெலுங்கு தலைவர்களான த. பிரகாசம், தென்னெட்டி விசுவநாதம், புலுசு சாம்பமூர்த்தி, பிஜவாடா கோபால ரெட்டி, நீலம் சஞ்சீவ ரெட்டி, கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலு, போகராஜு பட்டாபி சீராராமையா போன்ற தலைவர்கள் நடத்தினர். இந்த முயற்சிகள் வெற்றியடையவில்லை. இதன்பிறகு அவர்கள் 'மதராஸ் மனதே' (మద్రాసు మనదే, Madras is ours) என்ற முழக்கத்தைப் பிரபலப்படுத்தினர். இதையடுத்து தமிழர்கள் சென்னையை தெலுங்கர்களுக்கு அளிப்பதை எதிர்த்தனர.[2]
ஜே. வி. பி குழு என்பது அந்தக் குழுவின் உறுப்பினர்களான ஜவகர்லால் நேரு, வல்லபாய் பட்டேல், போகராஜு பட்டாபி சீதாராம்யா ஆகியோரால் அப்பெயரைப் பெற்றது. இக்குழுவானது கூடி ஆலோசித்து 1949 ஏப்ரல் மாதத்தில் இந்திய தேசிய காங்கிரசின் பணிக்குழுவிடம் தன் அறிக்கையை அளித்தது. அதில் மொழிவழி மாகாணங்களை உருவாக்குவதைத் தள்ளிப்போட வேண்டும் என்று பரிந்துரைத்தது. மேலும் அதன் பரிந்துரையில் ஆந்திரப் பிரதேசத்தை சிறிது காலத்துக்குப் பிறகு அமைக்கலாம் என்றாலும் சென்னையைத் தங்களுக்கு வேண்டும் என்ற கோரிக்கையைக் கைவிட வேண்டும் என்றது.[3] தெலுங்கர்கள் தங்கள் கோரிக்கைகளைக் கைவிட தயாராக இல்லாததால் இந்த அறிக்கை வன்முறைக்கு வித்திட்டது. தெலுங்கு தலைவர்கள் இரண்டு திட்டங்களை முன்வைத்தனர். அதில் ஒன்று சென்னையை ஆந்திரா மற்றும் சென்னை மாநிலத்திற்கான பொதுவான தலைநகராக்குவது; இன்னொன்று கூவம் ஆற்றை எல்லையாகக் கொண்டு ஆற்றின் வடக்கில் உள்ள சென்னை நகர் பகுதியை ஆந்திரத்துக்கும் தெற்கில் உள்ள பகுதியை சென்னை மாநிலத்தும் என இரண்டாக பிரிக்கலாம் என்ற பரிந்துரையை வைத்தனர். இந்த திட்டங்களுக்கு தமிழகத் தலைவர்களைச் சம்மதிக்கவைக்க இந்திய ஒன்றிய அரசால் இயலவில்லை. அப்போது சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த சி. ராஜகோபாலாச்சாரி, ஆந்திர மாநிலத்திற்குச் சென்னை செல்வதை ஆதரிக்கவில்லை. தமிழ் மக்களின் சார்பாக போராடிய தமிழரசுக் கழகத் தலைவரான ம. பொ. சி தெலுங்கர்களின் கோரிக்கையை எதிர்த்துப் போராடினார். அவர் தலை கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம், வேங்கடத்தை விடமாட்டோம் ஆகிய முழக்கங்களை எழுப்பினார்.
இந்தக் கட்டத்தில் சுதந்திர போராட்ட வீரரான பொட்டி சிறீராமுலு, சென்னை நகரத்தை உள்ளடக்கிய ஆந்திரப் மாநிலப் பிரிவினைக் கோரிக்கைக்காக, சென்னையில் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவரை ம. பொ. சிவஞானம் சந்தித்தார். அப்போது தெலுங்கரான பிரகாசம், ராமுலுவின் உயிரைக்காக்க உதவுங்கள் என்றார். ஆனால், சென்னை இல்லாத ஆந்திராவைப் பிரிக்கக் கோரினால், தாமும், தன் தமிழரசு கழகமும் உதவுவதாக மா.பொ.சி. தெரிவித்தார்.[4] ராமுலுவின் உண்ணாநோன்பு தொடர்ந்தது. இறுதியில் அவர் இறந்தார். இதைத் தொடர்ந்து தெலுங்கு மாவட்டங்களில் கலவரம் பரவியது. இதையடுத்து, தெலுங்கர்கள் பெரும்பான்மையாக வாழும் பதினாறு மாவட்டங்கள் மற்றும் பெல்லாரி மாவட்டத்தின் மூன்று வட்டங்களைக் கொண்டு ஆந்திராவை ஒன்றிய அரசு உருவாக்கியது. தெலுங்குத் தலைவர்கள் சென்னை நகர் மீது தங்கள் உரிமை கோரலைக் கைவிட ஒப்புக்கொண்டதையடுத்து, புதிய மாநிலத்தின் தலைநகராக கர்னூல் மாறியது. புதிய மாநிலமானது 1953 அக்டோபர் 1 அன்று உருவானது.