மனோ கணேசன் Mano Ganesan | |
---|---|
தேசிய கலந்துரையாடல்களுக்கான அமைச்சர் | |
பதவியில் 4 செப்டம்பர் 2015 – 21 நவம்பர் 2019 | |
தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 17 திசம்பர் 2024 | |
கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2015 – 24 செப்டம்பர் 2024 | |
பதவியில் 2001–2010 | |
கொழும்பு மாவட்டத்துக்கான மேல்மாகாண சபை உறுப்பினர் | |
பதவியில் 1999–2001 | |
பதவியில் 2014–2015 | |
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் | |
பதவியில் 2011–2014 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 17 திசம்பர் 1959 |
தேசியம் | இலங்கை மலையகத் தமிழர் |
அரசியல் கட்சி | ஜனநாயக மக்கள் முன்னணி |
பிற அரசியல் தொடர்புகள் | தமிழ் முற்போக்குக் கூட்டணி |
பிள்ளைகள் | சக்சின் திலிப் கணேசன் |
பெற்றோர் | வி. பி. கணேசன் |
உறவினர் | பிரபா கணேசன் (இளைய சகோதரர்) |
வேலை | தொழிற்சங்கவாதி |
சமயம் | இந்து |
மனோ கணேசன் (Mano Ganesan, பிறப்பு: திசம்பர் 17, 1959) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், சனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் என்ற தொழிற்சங்கத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சரும் ஆவார். இவர் 2015 செப்டம்பர் 4 முதல் 2019 நவம்பர் வரை தேசிய கலந்துரையாடல்களுக்கான அமைச்சராகப் பணியாற்றினார்.[1][2][3][4]
மனோ கணேசன் பிரபல தமிழ் தொழிற்சங்கவாதியும், திரைப்பட நடிகரும், இயக்குனருமான மறைந்த வி. பி. கணேசனின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனின் உடன்பிறந்தவரும் ஆவார்.[5] கொழும்பு கேரி கல்லூரியில் கல்வி பயின்றார்.
மனோ கணேசன் முதன் முதலில் மேல் மாகாண சபையில் மேலக மக்கள் முன்னணி என்ற தனது அரசியல் கட்சி உறுப்பினராக அரசியலில் இறங்கினார். இலங்கை நாடாளுமன்றத்திற்கு முதன் முதலில் 2001 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[6] 2004 தேர்தலில் தனது சனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணி கூட்டணியில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[7] 2010 தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி கூட்டணியில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார்.[8] அதே வேளையில் கொழும்பு மாவட்டத்தில் சனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் போட்டியிட்ட இவரது சகோதரர் பிரபா கணேசன் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். ஆனாலும், பிரபா கணேசன் பின்னர் இக்கட்சியில் இருந்து விலகி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் இணைந்து கொண்டார்[9].
மனோ கணேசன் 2011 உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஜனநாயக மக்கள் முன்னணி வேட்பாளராகப் போட்டியிட்டு கொழும்பு மாநகரசபை உறுப்பினரானார்.[10][11] 2014 மாகாண சபைத் தேர்தலில் மேற்கு மாகாணசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[12][13][14]
மனோ கணேசன் 2015 அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்ட எதிரணியின் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவிற்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார்.
2015 ஆம் ஆண்டில் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன்ம் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் அமைச்சர் பழனி திகாம்பரம் ஆகியோருடன் இணைந்து தமிழ் முற்போக்குக் கூட்டணி என்ற கூட்டமைப்பை ஆரம்பித்தார்.[15][16] இக்கூட்டணி 2015 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு ஆறு இடங்களைக் கைப்பற்றியது.[17] மனோ கணேசன் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.[18][19][20] மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையில் 2015 செப்டம்பர் 4 அன்று இவர் தேசிய கலந்துரையாடல்களுக்கான அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1][21][22] இவரது அமைச்சின் கீழ் அரச மொழிகள் திணைக்களம், அரச மொழிகள் ஆணைக்குழு, தேசிய மொழிப்பயிலகம், அரசு சாரா நிறுவன செயலகம் ஆகிய அரசுத் திணைக்களங்கள் இருந்தன. 2019 நவம்பரில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
2020 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. மனோ கணேசன் கொழும்பு மாவட்டத்தில் மீண்டும் தெரிவு செய்யப்பட்டு நாடாளுமன்றம் சென்றார்.[23]
2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணி மீண்டும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்து ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசிச் சின்னத்தில் போட்டியிட்டது. மனோ கணேசன் கொழும்பு மாவட்டத்தில் 19,013 விருப்பு வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.[24] இவர் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஊடாக 2024 திசம்பர் 17 இல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.[25][26][27][28]
அமெரிக்காவின் விடுதலைக் காப்பாளர் விருது (Freedom Defender’s Award) மனித உரிமைகளுக்கான சிம்பாப்வே வழக்கறிஞர்களுக்கும், மனோ கணேசனுக்கும் வழங்கப்படுவதாக 2007 டிசம்பர் 10 இல் அமெரிக்காவின் அப்போதைய அரசுச் செயலாளர் காண்டலீசா ரைஸ் வாசிங்டன், டி. சி.யில் அறிவித்தார்.[29]
தேர்தல் | தொகுதி | கட்சி | வாக்குகள் | முடிவு |
---|---|---|---|---|
1999 மாகாணசபை | கொழும்பு மாவட்டம் | IOPF | தெரிவு | |
2001 நாடாளுமன்றம்[6] | கொழும்பு மாவட்டம் | ஐதேமு | 54,942 | தெரிவு |
2004 நாடாளுமன்றம்[7] | கொழும்பு மாவட்டம் | ஐதேமு | 51,508 | தெரிவு |
2010 நாடாளுமன்றம்[8] | கண்டி மாவட்டம் | ஐதேமு | 28,033 | தெரிவு செய்யப்படவில்லை |
2011 உள்ளூராட்சி சபை[10] | கொழும்பு மாநகரசபை | சமமு | 28,433 | தெரிவு |
2014 மாகாணசபை[14] | கொழும்பு மாவட்டம் | சமமு | 28,558 | தெரிவு |
2015 நாடாளுமன்றம்[30] | கொழும்பு மாவட்டம் | ஐதேக | 69,064 | தெரிவு |
2020 நாடாளுமன்றம் | கொழும்பு மாவட்டம் | ஐமச | 62,091 | தெரிவு |
2024 நாடாளுமன்றம்[24] | கொழும்பு மாவட்டம் | ஐமச | 19,013 | தெரிவு செய்யப்படவில்லை[note 1] |