ஆதிகேசவப் பெருமாள் கோவில் | |
---|---|
![]() | |
அமைவிடம் | |
நாடு: | ![]() |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | சென்னை |
அமைவு: | மயிலாப்பூர் |
ஆள்கூறுகள்: | 13°1′50″N 80°16′14″E / 13.03056°N 80.27056°E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | இந்துக் கோயில் கட்டிடக்கலை |
ஆதிகேசவப் பெருமாள் கோவில் (Adikesava Perumal temple, Mylapore) என்பது தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை மாவட்டம், மயிலாப்பூர் பகுதியில் அமைந்துள்ள, ஆதிகேசவப் பெருமாளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வைணவக் கோயில் ஆகும். இக்கோயிலின் மூலவர் ஆதிகேசவப் பெருமாள்; தாயார் மயூரவல்லி தாயார் ஆவர். இக்கோயில் பகுதியில் பேயாழ்வார் அவதரித்ததாகக் கருதப்படுகிறது.[1] முன்னர் இக்கோயிலின் தீர்த்தமான சித்திரகுளம், மயிலாப்பூர் பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கியது. இக்கோயில் தெப்பத் திருவிழா ஆண்டுதோறும் தை மாதத்தில் நடைபெறுகிறது.[1]
இக்கோயில் தல புராணத்தின்படி, ஆதிகேசவப் பெருமாள், முனிவர் பிருகுவின் மகளான பார்கவியை மணந்து கொண்டதாகக் கருதப்படுகிறது.[2]
ஆதிகேசவப் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான சித்திரக் குளத்தில் தற்போது மழை நீர் சேகரிப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.[3] சித்திரக் குளத்திற்கு வரும் மழைநீர் வடிகால்கள் தூர்ந்து போனதால்[4] சித்திரக் குளத்தில் நீர் இன்றி தெப்பத் திருவிழா நடைபறுவது நின்றது. இருப்பினும் இக்கோயில் தெப்பத் திருவிழா இறுதியாக 2005-ஆம் ஆண்டு மற்றும் 2016-ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.
சென்னை மயிலாப்பூரில் அமைந்த ஆதிகேசவப் பெருமாள் கோவில் 1.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கோயில் இந்துக் கோயில் கட்டிடக்கலையில் செவ்வக வடிவத்தில் கட்டப்பட்டது. இக்கோயில் இரண்டு வளாகங்களைக் கொண்டது. இக்கோயில் நுழைவாயிலின் கோபுரம் 5 நிலைகளுடன் (தளங்களுடன்) கூடியது. கர்ப்பககிரகத்தின் மூலவரான ஆதிகேசவப் பெருமாளின் நின்றநிலை விக்கிரகத் திருமேனி கருங்கல்லால் அமைக்கப்பட்டது. கருடாழ்வார் சந்நதி மூலவரை நோக்கி அமைந்துள்ளது. மயூரவல்லித் தாயாரின் சந்நதி வளாகத்தின் இருபுறங்களில் ஆழ்வார்கள் திருமேனிகள் வரிசையாக உள்ளது.[5] இக்கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் மேற்பார்வையில் உள்ளது.[6]
இக்கோயில் காலையில் 7 மணி முதல் 11 வரையும், மாலையில் 5 மணி முதல் 8 மணி வரையும் திறந்திருக்கும். கோயில் உற்சவர் ஏகாதசி, திருவோணம், பௌர்ணமி, அமாவாசை போன்ற நாட்களில் உற்சவ மூர்த்தி ஆதிகேசவப் பெருமாள், பூதேவி, மயூரவல்லித் தாயார்களுடன் கோயிலைச் சுற்றி பவனி வருவார். வெள்ளிக் கிழமைகளில் மட்டும் மயூரவல்லித் தாயாரும், பூரம் நட்சத்திரத்தன்று ஆண்டாள் தாயாரும், புனர்பூசம் நட்சத்திரத்தன்று இராமரும், குறிப்பிட்ட ஆழ்வாரின் பிறந்தநாட்களில் மட்டும் அந்த ஆழ்வார் மட்டும் பல்லக்கில் பவனி வருவார். பங்குனி மாதத்தில் இக்கோயிலில் பிரம்மோற்சவம் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். ஆடி மாதத்தில் சித்திரக் குளத்தில் தெப்பத் திருவிழா 5 நாட்கள் நடைபெறும்.