மரண வாக்குமூலம் (Dying Declaration) எனப்படுவது சட்டத்திற்குப் புறம்பான செயலின் விளைவால் இறக்கும் நிலையிலுள்ள மனிதரிடமிருந்து அவர் இறப்புக்குக் காரணமான தகவல்களை எழுத்து மூலமாகவோ, வாய்மூலமாகவோ பெறுவது ஆகும்.
யார் வேண்டுமானாலும் மரண வாக்கு மூலம் பெறலாம்.[1] ஆனால் மருத்துவரால் பெறப்படும் மரணவாக்கு மூலத்திற்கு அதிக மதிப்பு உண்டு. மனிதர் இறக்க நேரமாகும் எனத் தெரியுமாயின் உடனடியாக நீதிபதியை (magistrate) அழைக்க வேண்டும். நீதிபதியால் பெறப்படும் மரணவாக்கு மூலத்திற்கு அதிகபட்ச மதிப்பு உண்டு.குறுகிய காலமே இருக்கும் வேளையில், நீதிபதியை அழைக்க முடியாத நிலையில் மருத்துவரே இரண்டு சாட்சிகளின் முன்னிலையில் மரண வாக்குமூலம் பெறலாம்.[2]
ஒருவர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் தரும் போது சத்தியப் பிரமாணம் (oath) எடுத்துக் கொள்வது வழக்கம். ஆனால் மரண வாக்குமூலம் தருபவர் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஏனென்றால் மரணத் தருவாயில் இருக்கும் மனிதன் பொய்யன்றி மெய்யே பேசுவான் என்று சட்டம் நம்புகிறது.
முதலில் வாக்குமூலம் தருபவர் தெளிந்த மனநிலையில் (compos mentis) தான் இருக்கிறார் என மருத்துவர் சான்றளிக்க வேண்டும். எழுதும் நிலையில் இருந்தால் வாக்குமூலம் அளிப்பவரே வாக்குமூலத்தை எழுதலாம். இல்லாத நிலையில் மருத்துவரே எழுதலாம். வாக்குமூலம் தருபவரின் சொந்த வார்த்தைகளில் தான் வாக்குமூலம் எழுதப்பட வேண்டும். வாக்குமூலம் பெறுபவர் எவ்வித மாற்றங்களையும் செய்யக் கூடாது. ஆம் இல்லை என விடைவரும் கேள்விகளையும் (leading questions) கேட்கக் கூடாது. ஒரு விடயம் தெளிவாக இல்லையென்றால் அதைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்கான கேள்விகளைக் கேட்கலாம். ஆனால் கேட்கப்பட்ட கேள்வியையும் பெறப்பட்ட விடையையும் அப்படியே பதிவு செய்ய வேண்டும். இறுதியாக வாக்குமூலத்தை உரக்கப் படித்துக் காட்டி வாக்குமூலம் அளித்தவரின் பெருவிரல் ரேகை அல்லது கையெழுத்தைப் பெற வேண்டும். மருத்துவரும் இரு சாட்சிகளும் கையொப்பமிட வேண்டும். பெறப்பட்ட வாக்குமூலத்தை உடனடடியாக உறையிலிட்டு முத்திரையிட்டு நீதிபதிக்கு அனுப்பப்பட வேண்டும்.
வாக்குமூலத்தில் இது நடந்தது என்ற தகவல்களே இடம் பெற வேண்டும். இது நடந்திருக்கலாம் எனும் ஊகக்கருத்து கூடாது. வாக்களிப்பவருக்கு அப்படி ஓர் ஊகம் இருக்குமாயின் அவ்வூகம் ஏற்படக் காரணத்தையும் பதிவு செய்ய வேண்டும்.
வாய் பேச இயலாதவரும் வாக்கு மூலம் அளிக்கலாம். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் சைகையில் (gestures) அளித்த பதில்களும் அப்படியே பதிவு செய்யப்பட வேண்டும்.
மரணவாக்கு மூலம் அளித்தவர் உயிர் பிழைத்திருப்பாராயின் அவர் நீதிமன்றத்திற்கு வந்து தன்னுடைய நேரடி சாட்சியத்தை அளிக்க வேண்டும்.
{{cite web}}
: Check date values in: |date=
(help)[தொடர்பிழந்த இணைப்பு]