மரபு வியட்நாமிய இசை (Traditional Vietnamese music) மிகவும் பன்முகப்பட்டது. உள்நாட்டு, அயல்நாட்டு இசை கலந்தது. வரலாறு தோறும் இது சீன இசையால் தக்கமுற்றது. இது கொரிய, மங்கோலிய, யப்பானிய இசைகளோடு ஒருங்கிணைந்த பகுதியாக விளங்குகிறது.[1] வியட்நாமிய இசையின் மீது இந்தோ சீனத்து முந்தைய சாம்பா அரசும் ஒரளவு தாக்கம் செலுத்தியுள்ளது
[நா நாசு ( Nhã nhạc)]] பரவலான வேந்தவை இசையாகும். இது வியட்நாமியத் திரான் பேரரசு முதல் கடைசி இங்குயேன் பேரரசு வரை புகழுடன் விளங்கியது. இது இங்குயேன் பேர்ரசர்களால் ஆர்வமுடன் பெரிதும் வளர்த்தெடுக்கப்பட்டது. நா நாசுடன் பல அரசவை நடனங்கள் வியட்நாம் அரசவையில் 19 ஆம் நூற்றாண்டில் ஆடப்பட்டன.இவற்றின் கருப்பொருள் அரசர் வாழ்நாளையும் நாட்டின் செல்வ வளத்தையும் பெருக்க வேண்டுவதாகவே அமைந்தது.
செவ்வியல் இசை கடவுளை வழிபடவும் கோயிலில் உள்ள கன்பூசியசு போன்ற அறிஞர்களை நினைவுகூரவும் பயன்படுத்தப்படுகிறது. இவை நா நாசு (Nhã Nhạc) ("உயர்நய இசை", சடங்கு, விழா இசை), தாய் நாசு (Đại nhạc) ("பேரிசை"), தியேயு நாசு (Tiểu nhạc) ("சிற்றிசை") எனப்படுகின்றன. பின்னது அரசரை மகிழச்செய்யும் இன்பியல் இசைவடிவம் ஆகும்.[2][3][4][5][6] வியட்நாமிய மரபு நடனமான அரசவை நடனம் வான் வு (அலுவலர் நடனம்), வோ வு (போர்ப்படை நடனம்) என இருவகையாகப் பிரிக்கப்படுகிறது .[7][8][9]
வியட்நாமிய நாட்டுப்புற இசை பன்முகமானது. இதில் தான் சா (dân ca), குவான் கோ (quan họ), தொப்பி சாவூவான் (hát chầu văn), சா திரு (ca trù), கோ (hò), தொப்பி சாம் (hát xẩm) ஆகிய வடிவங்களும் பிறவும் உள்ளடங்கும்.
சேவோ (Chèo) என்பது பொதுவாக வடக்கு வியட்நாமில் உழவர்கள் மரபாக நிகழ்த்தும் நடனம் கலந்த எள்ளல்பாணி இசையரங்கு வடிவம் ஆகும். இது ஊர்மன்றத்திலோ பொதுக் கட்டிட வெளியரங்கிலோ வழக்கமாக பயில்நிலைப் பயணக்குழுக்களால் நிகழ்த்தப்படுவதாகும். ஆனால் இன்று இது உள்ளரங்குகளிலும் தொழில்முறைக் கலைஞர்களால் நடத்தப்படுகிறது.
சாம் (Xẩm) அல்லது தொப்பிச் சாம் (Hát xẩm) (சாம் பாடல் (Xẩm singing)) என்பது ஒருவகை வியட்நாமின் வடக்கு வட்டார நாட்டுப்புற இசை வடிவம் ஆகும் . இது அண்மையில் வழக்கிறக்கும் நிலைக்கு வியட்நாமில் தள்ளப்பட்டுள்ளது. பேரரசு காலங்களில், இது பெரிதும் நகர்விட்டு நகர் நகர்ந்து பார்வையற்றோரால் தம் வாழ்க்கைப்பாட்டுக்காக பொது இடங்களில் நிகழ்த்தப்பட்டது .
குவான் கோ (Quan họ) (இசைப்பாட்டு (alternate singing)) நா வாசில் வழங்கும் ஒரு மக்கள் இசை வடிவம் ஆகும். இது இப்போது இரண்டாகப் பிரிந்துள்ள வாசு நின் மாகாணத்திலும் வாசு கியாங் மாகாணத்திலும் வியட்நாம் எங்கணும் நிகழ்த்தப்படுகிறது; இதில் பல வேறுபாடுகள் குறிப்பாக வடக்கு மாகாணங்களில் நிலவுகின்றன. இருவர் மாற்றி மாற்றிப் பாடும் இசைப்பாட்டாக அமைந்த இது புதுக்கப்பட்டு அரசவைச் சடங்குப் பாட்டாகவும் பயன்படுத்தப்படுகிறது.
தொப்பி சாவூ வான்(Hát chầu văn) அல்லது தொப்பி வான் என்பது திருவிழாக்களில் ஆவிகளை எழுப்ப பயன்படும் உயிரெழுப்பும் இசை வடிவம் ஆகும். இது வெறியாட்ட வகை உயர்வண்ணவகை (சந்தவகை) இசையாகும். 1986 க்குமுன் வியட்நாம் அரசு இவ்விசையையும் பிற சமய உணர்வு வடிவங்களையும் தடை செய்திருந்தது. பின்னர் இது பாம் வான் தி போன்றோரால் புதுப்பிக்கபட்டுள்ளது.
நாசு தான் தோசு சாய் பியேன் (Nhạc dân tộc cải biên) என்பது 1956 இல் கனோய் இசைப் பேணகம் உருவாக்கப்பட்டதும் 1950களில் எழுச்சிபெற்ற வியட்நாமியப் புத்தியல் நாட்டுப்புற இசை வடிவம் ஆகும். இவ்வலர்ச்சி மரபிசையுடன் மேலை இசைப்பண்களை இணைத்த்தால் ஏற்பட்டது. இதில் மேலை இசையின் ஒத்திசைவுக் கூறுகளும் இசைக் கருவிகளும் பயன்படுத்தப்பட்டன. இந்த இசை தூய்மைவாதிகளால் மரபிசையின் ஒலிக்கூறுகளை நீர்க்க செய்துவிட்டதாக கடிந்துரைக்கப்படுகிறது.
சா திரு(Ca trù) (அல்லது தொப்பி ஆ தாவோ (hát ả đào)) என்பது ஆ தாவொ எனும் பெண்பாடகரால் தொடங்கிவைக்கப்பட்ட நாட்டுப்புற இசை வடிவம் ஆகும். ஆ தாவோ பகைவரை தன் குரல் இசையால் கவர்ந்த பெண்பாடகர் ஆவார். பெரும்பாலும் இதைப் பெண்களே இசைப்பர். இந்த இசைவகை பரத்தமையுடன் தொடர்புற்றிருந்ததால் 1980 களுக்குப் பிறகு பொதுவுடைமை அரசு சற்றே தன்பிடியைத் தளர்த்தியதும் மீண்டும் புத்துயிர்ப்பு பெறலானது.
சா திருவில் பல வடிவங்கள் உண்டு. இது அரசவையில் தோன்றி பிறகு அரிஞரிடமும் அதிகார வகுப்பினரிடமும் சமுதாயக் கூடங்களில் நிகழ்த்தப்பட்டது. இது இன்பியல் வகை மகிழ்வூட்டல் நடனம் ஆகும். இதில் பெண்கள் ஆடலிலும் பாடலிலும் பயிற்சி பெற்று அதிகார வகுப்பினரை ஆடிப்பாடி மகிழ்விக்கின்றனர்.
"கோ(Hò)" இசையைக் குவான் கோ இசையின் தென்பானியாக்க் கருத முடியாது. இது புதுக்கிய ஆன், பெண் உரையாடல் வடிவில் பாடப்படுகிறது. இதன் கருப்பொருள் காதலாகவோ, காதல் உறவாகவோ ஊரகம் சார்ந்த திணைப்பொருளாகவோ அமையும். "கோ" வியட்நாமின் சாந்தோ பகுதியில் பரவலாக மக்களிடையே விளங்குகிறது.