மரியா குர்சோவா Maria Kursova | |
---|---|
2013 இல் மரியா குர்சோவா | |
நாடு | உருசியா ஆர்மீனியா |
பிறப்பு | 3 சனவரி 1986 உருசியாவின் செவெரோத்வின்சுக் நகரம் |
பட்டம் | பெண் கிராண்டு மாசுட்டர் (2007) |
உச்சத் தரவுகோள் | 2366 (சூலை 2007) |
மரியா குர்சோவா (Maria Kursova) என்பவர் உருசிய- ஆர்மீனிய பெண் சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார். இவர் 1986 ஆம் ஆண்டு சனவரி மாதம் மூன்றாம் நாள் உருசியாவின் செவெரோத்வின்சுக் நகரில் பிறந்தார் [1]. பிடே அமைப்பு வழங்கும் பெண் கிராண்டு மாசுட்டர் பட்டத்துடன் இவர் சதுரங்கம் ஆடி வருகின்றார். 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற 10 வயதுக்கு உட்பட்டோர் பெண்கள் உலக சதுரங்கப் போட்டியில் முதலிடம் பிடித்தார். இதேபோல 2001 இல் நடைபெற்ற ஐரோப்பிய பெண்கள் அணி சதுரங்கச் சாம்பியன் பட்டப் போட்டியிலும் வெற்றி பெற்றார்.
2003 ஆம் ஆண்டில் நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்டோருக்கான ஐரோப்பிய பெண்கள் சதுரங்கச் சாம்பியன் பட்டப் போட்டியில் நட்டாலியாபோகோனினாவுடன் சமநிலை புள்ளிகள் எடுத்து முதல் இடத்திற்கான போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தார் [2]. 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற 12 வயதுக்கு உட்பட்டோர் பெண்கள் ஐரோப்பிய சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார் [3].
பெண்கள் உலக சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டியில் 2006 ஆம் ஆண்டு குர்சோவா கலந்துகொண்டு விளையாடினார். முதல் சுற்றில் சீன வீராங்கனை சாவோ சியுவைத் தோற்கடித்தார் என்றாலும் இரண்டாவது சுற்றில் உருசிய வீராங்கனை இகாடெரினா கோவாலெவ்சிகயாவிடம் வீழ்ந்தார்.
2011 ஆம் ஆண்டு முதல் குர்சோவா ஆர்மீனியாவிற்காக விளையாடி வருகிறார் [4]. 2012 இல் பெண்கள் ஆர்மீனிய சதுரங்க சாம்பியன் பட்டத்தை வென்றார் [5].
பெண்கள் சதுரங்க ஒலிம்பியாடு போட்டிகளில் இவர் ஆர்மீனியா அணிக்காக 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் விளையாடினார். 2011 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் பெண்கள் அணி உலக சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டியில் பங்கேற்று விளையாடினார். இதேபோல 2011 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் பெண்கள் ஐரோப்பிய அணி சாம்பியன் பட்டப் போட்டியிலும் பங்கேற்று விளையாடினார் [6].
2016 ஐரோப்பிய தனிநபர் சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டியில் குர்சோவா இரண்டு வீராங்கனைகளிடம் வெற்றியும் யோவாங்கா அவுசுகா என்ற பிரித்தானிய வீராங்கனையுடன் சமநிலையும் பெற்றார் [7].
ஆர்மீனிய கிராண்டு மாசுட்டர் ஆர்மான் பாசிக்யன் என்ற சதுரங்க வீர்ரை குர்சோவா திருமணம் செய்து கொண்டார் [8].