மறைமலை அடிகள் | |
---|---|
![]() 2007 ஆம் ஆண்டு இந்தியாவின் முத்திரையில் மறைமலை அடிகள் | |
பிறப்பு | வேதாசலம் 15 சூலை 1876 நாகப்பட்டினம், தஞ்சை மாவட்டம் (மதராசு பிரசிடென்சி), சென்னை மாகாணம், இந்தியா |
இறப்பு | 15 செப்டம்பர் 1950 மதராசு, மதராசு மாநிலம், இந்தியா | (அகவை 74)
உறவினர்கள் | நீலாம்பிகை(மகள்), புலியூர்க் கேசிகன் (மகளின் மருமகன்) |
மறைமலை அடிகள் (சூலை 15, 1876 - செப்டம்பர் 15, 1950) புகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர். தமிழையும் வடமொழியையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர். உயர்தனிச் செம்மொழியாம் தமிழை, வடமொழிக்கலப்பின்றித் தூய நடையில் எழுதிப் பிறரையும் ஊக்குவித்தவர். சிறப்பாகத் தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கித் தமிழைச் செழுமையாக வளர்த்தவர். பரிதிமாற் கலைஞரும் மறைமலை அடிகளும் தனித்தமிழ் இயக்கத்தின் இரு பெரும் முன்னோடித் தலைவர்கள். குலசமய வேறுபாடின்றிப் பொதுமக்களுக்குக் கடவுட்பற்றும், சமயப் பற்றும் உண்டாக்கும் முறையில் சொற்பொழிவுகள் ஆற்றுவதில் வல்லவர். சைவத் திருப்பணியும், சீர்திருத்தப் பணியும் செவ்வனே செய்து தமிழர்தம் உள்ளங்களில் நீங்காத இடம் பெற்றவர்.
மறைமலை அடிகளின் இயற்பெயர் வேதாசலம் பிள்ளை.. இவர் 1876 சூலை 15-ஆம் நாள் மாலை 6.35-இக்குத் திருக்கழுக்குன்றத்திலே பிறந்தார். இவர் தந்தையார் சொக்கநாதபிள்ளை, தாயார் சின்னம்மையார். தந்தையார் நாகப்பட்டினத்தில் அறுவை சிகிச்சை மருத்துவராய்ப் பணியாற்றி வந்தார். பல்லாண்டுகள் பிள்ளைப்பேறு இல்லாமல் இருந்து திருக்கழுக்குன்றம் சிவன் வேதாசலரையும் , அம்மை சொக்கம்மையையும் வேண்டி நோன்பிருந்து பிள்ளைப்பேறு பெற்றதால், தம் பிள்ளைக்கு வேதாசலம் என்று பெயரிட்டார். பின்னர்த் தனித்தமிழ்ப்பற்று காரணமாக 1916-இல் தம் பெயரை மறைமலை (வேதம் = மறை, அசலம் = மலை)(அதாவது அவரின் 40-ஆவது வயதில்) என்று மாற்றிக்கொண்டார். அவர் தம்முடை பிள்ளைகள் திருநாவுக்கரசு, நீலாம்பிகை தவிர மற்றவர்களின் வடமொழிப்பெயர்களைத், திருஞான சம்பந்தம்: அறிவுத்தொடர்பு, மாணிக்க வாசகம் : மணிமொழி, சுந்தரமூர்த்தி: அழகுரு, திரிபுரசுந்தரி : முந்நகரழகி எனத் தனித்தமிழாக்கினார்.
மறைமலைஅடிகள், நாகையில் வெசுலியன் தொண்டு நிறுவனக் கல்லூரியைச் சேர்ந்த உயர்நிலைப்பள்ளியில் நான்காம் படிவம் வரை படித்தார். அவருடைய தந்தையாரின் மறைவு காரணமாக அவரால் பள்ளிப்படிப்பைத் தொடர முடியவில்லை. ஆனால்,நாகையில் புத்தகக் கடை வைத்திருந்த தமிழ்ப்புலமை மிகுந்த நாராயணசாமிப் பிள்ளை என்பவரிடம் தமிழ் கற்றார். 'சைவ சித்தாந்த சண்டமாருதம்' என்று புகழ் பெற்றிருந்த சூளை சோமசுந்தர நாயகர் அவர்களிடம் சைவ சித்தாந்தம் கற்றார்.
இவர் மீனலோசனி என்ற செய்தித்தாளுக்குத் தொகுப்பாளராகப் பணியாற்றி வந்தார். அதில் அவர் எழுதிய கட்டுரைகளைக் கண்ணுற்ற சைவசித்தாந்த சண்டமாருதம் என்று அழைக்கப்பட்ட சோமசுந்தர நாயக்கர் பரிந்துரையினால் அதன் பின்னர் சைவ சித்தாந்த தீபிகை என்ற இதழில் பணியாற்றினார். ஆயினும் அவர் உள்ளத்தில் தமிழ் ஆசிரியராக வேண்டும் என்ற எண்ணம் உறுதி கொண்டு இருந்ததால் அதற்குத் தன்னைத் தகுதிப்படுத்திக் கொண்டார் அதற்கான வாய்ப்பையும் எதிர்பார்த்துக் காத்திருந்தார். மறைமலை அடிகள் ஞானசாகரம் என்ற இதழை 1902-ஆம் ஆண்டு தொடங்கி நடத்தினார் அதனைப் பின்னர் அறிவுக்கடல் என்று தனித் தமிழில் பெயர் மாற்றம் செய்தார். சென்னைக்கு வந்த பின்னர்க் கிறித்தவக் கல்லூரியில் வீ.கோ.சூரியநாராயண சாத்திரியாருடன் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார்.1905-இல் சைவ சித்தாந்த மகா சமாசம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். அதன் மாநாட்டுத் தலைமையையும் ஏற்றார். பல ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியபின், பல்லாவரத்தில் இராமலிங்க வள்ளலாரின் கொள்கைப்படி 22.04.1912-இல் “சமரச சுத்த சன்மார்க்க சங்கம்” தொடங்கினார். பின்னர்த் தனித்தமிழ் ஈடுபாட்டால் அதனைப் “பொதுநிலைக் கழகம் “ எனப் பெயர் மாற்றினார். திருமுருகன் அச்சுக்கூடத்தை ஏற்படுத்திப் பல நூல்களை வெளியிட்டார். மணிமொழி நூல்நிலையம் என்னும் நூல்நிலையத்தை உருவாக்கினார்.
மறைமலை அடிகள் "பல்லாவரம் முனிவர்" என்றும் குறிப்பிடப்பட்டார்.[1]
ஆகிய 54 நூல்களை எழுதியுள்ளார்.
1950-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி தமது எழுபத்தைந்தாவது அகவையில் இறந்தார்.
இவரது நினைவப் போற்றும் விதமாக சென்னையில் உள்ள ஒரு பாலத்துக்கு மறைமலை அடிகள் பாலம் என பெயரிடப்பட்டது.
புலவர் இரா இளங்குமரன், தமிழ் மலை - மறைமலை அடிகள், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-8, 2ம் பதிப்பு 1992 (முதல் பதிப்பு 1990). பக். 1 - 112.