மலேசிய கல்வி அமைச்சு (மலாய்: Kementerian Pendidikan Malaysia; ஆங்கிலம்: Ministry of Education Malaysia) என்பது மலேசிய அரசாங்க அமைச்சுகளில் ஒன்றாகும். இந்த அமைச்சின் தலைமையகம் புத்ராஜெயா (Putrajaya) மத்திய அரசாங்க நிர்வாக மையத்தில் (Federal Government Administrative Centre) உள்ளது.
இந்த அமைச்சு, மலேசியாவின் கல்வித் துறை சார்ந்த அனைத்து அமைப்புகளுக்கும்; செயல் பாடுகளுக்கும் பொறுப்பு வகிக்கும் முதன்மை அரசாங்க அமைப்பாகச் செயல் படுகின்றது. அத்துடன் கல்வி சார்ந்த அனைத்துக் கொள்கைகளையும் நிர்வகித்துப் பராமரிக்கும் பொறுப்புகளையும் கொண்டுள்ளது.
மலேசியாவின் 23-ஆவது அமைச்சரவை 2022 டிசம்பர் 2-ஆம் தேதி, அறிவிக்கப்பட்டது. மலேசியக் கல்வி அமைச்சராக பாட்லினா சீடேக் (Fadhlina Sidek) என்பவர் நியமிக்கப்பட்டார். மறுநாள் 2022 டிசம்பர் 3-ஆம் தேதி, 28 அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.[3]
மலேசிய கல்வித் துறை அமைச்சு உருவாக்கப்பட்ட தொடக்கக் காலத்தில், மலேசிய கல்வி அமைச்சு (Kementerian Pendidikan) என்று பொதுவாக அழைக்கப்படது. அந்த அமைச்சு கல்வி தொடர்பான அனைத்துச் செயல்பாடுகளுக்கும் பொறுப்பாக இருந்தது.
2004-ஆம் ஆண்டில், மலேசியக் கல்வி அமைச்சு இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. ஒரு பிரிவின் பெயர் மலேசிய கல்வி அமைச்சு (Kementerian Pelajaran). பாலர் பள்ளி முதல் உயர்நிலைப்பள்ளி வரையிலான பொறுப்புகளை ஏற்றுக் கொண்டது. மற்றொரு பிரிவின் பெயர் மலேசிய உயர்கல்வி அமைச்சு (Ministry of Higher Education).
பிரதமர் நஜீப் ரசாக் (Prime Minister Najib Razak) பிரதமராகப் பொறுப்பு வகித்த காலத்தில், இரண்டு அமைச்சுகளும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டன. அதன் பின்னர், 2015-இல் மீண்டும் இரு அமைச்சுகளாகப் பிரிக்கப்பட்டு தனித்தனியாகச் செயல்பட்டன.
வரலாற்று அடிப்படையில் துங்கு அப்துல் ரகுமான் அவர்களைத் தவிர மற்ற அனைத்து மலேசியப் பிரதமர்களும் கல்வி அமைச்சராகப் பொறுப்பு வகித்துள்ளனர். ஆகவே, மலேசிய கல்வி அமைச்சர் பதவி என்பது மலேசியப் பிரதமர் பதவிக்கு ஒரு படிக்கல்லாகக் கருதப்படுகின்றது.