மலேசிய கூட்டரசு சாலை 1 (Malaysia Federal Route 1) என்பது மலேசியாவின் முதல் நெடுஞ்சாலை; மிகப் பழமையான நெடுஞ்சாலையாகவும் விளங்குகிறது. இதுவரை தீபகற்ப மலேசியாவில் அமைக்கப்பட்ட தொடக்கக்கால பொது சாலைகளில் மிகப் பழைமையானது.
கூட்டரசு சாலை 1 என்பது வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப் படுவதற்கு முன்னர் தீபகற்ப மலேசியாவின் மேற்கு மாநிலங்களின் சாலை அமைப்பில் முதுகெலும்பாக விளங்கியது.[1]
கூட்டரசு சாலை 1 என்பது தீபகற்ப மலேசியாவில் உள்ள மூன்று வடக்கு - தெற்கு நெடுஞ்சாலைகளில் ஒன்றாகும். தவிர மேலும் இரண்டு கூட்டரசு சாலைகள் உள்ளன. கூட்டரசு சாலை 3; கூட்டரசு சாலை 5.[2]
மலேசியா-சிங்கப்பூர் எல்லை நகரமான ஜொகூர் பாருவில் தொடங்கும் கூட்டரசு சாலை 1-இன் ’0’ கிலோமீட்டர் தஞ்சோங் புத்திரி சிஐக்யூ வளாகத்தில் (Tanjung Puteri CIQ Complex) தொடங்குகிறது. இப்போது அந்த வளாகம் இப்போது இடிக்கப்பட்டு விட்டது.
ஜொகூர் பாரு நகரில் முதல் கிலோமீட்டர் தொலைவில் தொடங்கும் இந்தச் சாலை தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கடற்கரையின் பிரதான நெடுஞ்சாலையான கூட்டரசு நெடுஞ்சாலை 3 உடன் இணைக்கப்பட்டு உள்ளது.
அடுத்து ஸ்கூடாய் பகுதியில் உள்ள கூட்டரசு நெடுஞ்சாலை 5 உடன் கிலோமீட்டர் 19-இல், இந்தப் பாதை இணைக்கப்பட்டு உள்ளது. கூட்டரசு நெடுஞ்சாலை 5, தீபகற்ப மலேசியாவின் மேற்கு கடற்கரையின் முக்கிய நெடுஞ்சாலையாகும்.
கூட்டரசு நெடுஞ்சாலை 1 தீபகற்ப மலேசியாவின் உள் பகுதியில் உள்ள முக்கிய நெடுஞ்சாலையாகும். அனைத்து மேற்கு மாநிலங்களையும் கடந்து செல்கிறது. தம்பின் முதல் சுங்கை சிப்புட் வரை, எப்.டி. 1 (FT1 highway) நெடுஞ்சாலை தித்திவாங்சா மலைத்தொடரின் மேற்கு அடிவாரத்தில் ஓடுகிறது.
இந்தப் பாதை ஜித்ரா, கெடாவில் உள்ள வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலை E1 உடன் சந்திக்கிறது.
கூட்டரசு நெடுஞ்சாலை 1-ஐ ஒரு மில்லியனுக்கும் அதிகமான மலேசியர்கள் தங்களின் முக்கியப் பொருளாதார ஆதாரமாக நம்பியுள்ளனர்.