![]() | |
நாள் | 7 பிப்ரவரி – மார்ச் |
---|---|
அமைவிடம் | சரவாக் கூச்சிங் மாவட்டம், பாவு மாவட்டம், சமரகான் பிரிவு செரியான் பிரிவு) ஜொகூர் தங்காக் மாவட்டம், லேடாங் மாவட்டம், சிகாமட் மாவட்டம் மலாக்கா அலோர் காஜா மாவட்டம், மத்திய மலாக்கா மாவட்டம், ஜாசின் மாவட்டம் நெகிரி செம்பிலான் தம்பின் மாவட்டம், ரெம்பாவ் மாவட்டம், போர்டிக்சன் மாவட்டம் |
இறப்புகள் | 3 இறப்புகள்[1][2] |
சொத்து சேதம் | $ 550 மில்லியன் (USD) |
மலேசிய வெள்ளம் 2016 (ஆங்கிலம்: Malaysian Floods 2016; மலாய்: Malaysian Floods 2016) என்பது 2016-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மலேசியாவின் சில மாநிலங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நிகழ்வாகும்.
பிப்ரவரி 2016 தொடக்கத்தில் பெய்த கனமழையால், சரவாக், ஜொகூர், மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலங்களில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளம் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பேரிடர் புனர் மையங்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏறக்குறைய அனைத்து வகையான தரைவழி போக்குவரத்துகளும் துண்டிக்கப்பட்டன.
2016 பிப்ரவரி 9-ஆம் தேதி, கூச்சிங் மாவட்டம் (Kuching District), பாவு மாவட்டம் (Bau, Sarawak), சமரகான் பிரிவு (Samarahan Division), செரியான் பிரிவு (Serian Division) ஆகிய இடங்களில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 765-இல் இருந்து 1,065-ஆக உயர்ந்தது.[3]
2016 பிப்ரவரி 11-ஆம் தேதி, அந்த எண்ணிக்கை 5,600-ஆக அதிகரித்தது.[4] பிப்ரவரி 22 வரை, வெள்ளத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,965-ஆக இருந்தது.[5] சரவாக் மாநிலத்தில் ஏற்பட்ட அந்த வெள்ளத்தினால் சரவாக் பொது மருத்துவமனையும் (Sarawak General Hospital) வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.[6]
மேலும் பல பாம்புகள் மற்றும் முதலைகள் வெள்ளப் பகுதிகளில் சுற்றித் திரிந்து மனிதர்களைத் தாக்கியதாகவும் அறியப்படுகிறது.[7] பிப்ரவரி 20-ஆம் தேதி, ஓர் இளம்பெண் ஆற்றில் தவறி விழுந்ததில் ஓர் உயிரிழப்பு ஏற்பட்டது.
பிப்ரவரி 26-ஆம் தேதி, 7,288 மாணவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர்; மற்றும் 10 பள்ளிகள் தற்காலிக நிவாரண மையங்களாகப் பயன்படுத்தப்பட்டன.[8] வெள்ளத்தின் போது, ஒரு தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் ஓர் ஆசிரியர் அவரின் குடும்பத்துடன் சிக்கித் தவித்தாகவும் அறியப்படுகிறது.[9]
பிப்ரவரி 7-ஆம் தேதி, ஜொகூர் மாநிலத்தில் இரண்டு பேர் பலியாகினர். ஒருவர் பலத்த நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டார்; மற்றொருவர் மீன்பிடிக் குளத்தில் விழுந்து இறந்தார்.[1] பிப்ரவரி 9-ஆம் தேதி, தங்காக் மாவட்டம், லேடாங் மாவட்டம் மற்றும் சிகாமட் மாவட்டம்-ஆகிய இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 137 பேரில் இருந்து 135 பேராக குறைந்தது.[3]
பிப்ரவரி 8 ஆம் தேதி, மலாக்கா மாநிலத்தில் சுமார் 4,600 பேர் வெளியேற்றப்பட்டனர். மத்திய மலாக்கா மாவட்டத்தில் உள்ள 6 நிவாரண மையங்களில் 3,020 பேர் தங்க வைக்கப்பட்டனர்.
அலோர் காஜா மாவட்டத்தில் உள்ள 6 நிவாரண மையங்களில் 1,560 பேர்; மற்றும் ஜாசின் மாவட்டத்தில் ஒரு நிவாரண மையத்தில் 24 பேர் தங்க வைக்கப்பட்டனர்.[10] இருப்பினும் வெள்ள நிலைமை மேம்பட்ட பிறகு பிப்ரவரி 9-இல் வெளியேற்றப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 189 ஆகக் குறைந்தது.[3][11]
நெகிரி செம்பிலான் மாநுலத்தில், பிப்ரவரி 7-ஆம் தேதியின்படி வெளியேற்றப் பட்டவர்களின் எண்ணிக்கை 671-ஆக இருந்தது.[12] மேலும் பிப்ரவரி 8-ஆம் தேதி, அந்த எண்ணிக்கை 705-ஆக அதிகரித்தது. அதே நேரத்தில் வெள்ள நீர் வடிந்த பிறகு அனைத்து நிவாரண மையங்களும் ஒரே நாளில் மூடப்பட்டன.[13]
மலேசியா — சரவாக் முதலமைச்சர் அடேனான் சத்தேம் (Adenan Satem) மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி மற்றும் பிற அடிப்படைத் தேவைகளை வழங்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார்.
சரவாக் மாநில அரசும் எதிர்காலத்தில் இதுபோன்ற வெள்ளம் மீண்டும் ஏற்படாமல் இருக்க நீண்ட கால தீர்வைக் காண்பதாக உறுதியளித்தது.[14] மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (Malaysian Fire and Rescue Department), பாதிக்கப் பட்டவர்களை மீட்பதில் சிறப்பான பணிகளைச் செய்த அதே வேளையில்; பள்ளிகள், சாலைகள் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சுத்தம் செய்வதற்கும் உதவினார்கள்.[15]
மலேசியா சபா பல்கலைக்கழகத்தின் (University of Malaysia Sabah) மாணவர் நலக் குழுவின் (Student Welfare Committee - JAKMAS) துன் முஸ்தபா குடியிருப்புக் கல்லூரி (Tun Mustapha Residential College) மூலம் சரவாக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஒரு தொண்டு இயக்கத்தை நடத்தியது.[16]
ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு (UMNO) மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1,500 குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் அடிப்படைத் தேவைப் பொருட்களை அனுப்பி உதவியது.