![]() தமிழ் மக்கள் குழு பிரித்தானிய மலாயா, 1898 | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
ஏறக்குறைய 1,971,000[1] (~80% மலேசிய இந்தியர்கள்)[2] | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
![]() ![]() | |
மொழி(கள்) | |
தமிழ், ஆங்கிலம்,மலாய் மொழி | |
சமயங்கள் | |
இந்து, கிறிஸ்தவம், பௌத்தம், இசுலாம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
தமிழர், தமிழ் முஸ்லிம்கள், மலையகத் தமிழர், சிங்கப்பூர் இந்தியர், இலங்கைத் தமிழர், மலேசிய மலையாளிகள், மலேசியத் தெலுங்கர், திராவிடர் |
மலேசியத் தமிழர் (மலாய்: Orang Tamil Malaysia; ஆங்கிலம்: Tamil Malaysians); தமிழ் பின்புலத்துடன் மலேசியாவில் வாழும் தமிழர்கள் ஆகும். நீண்ட காலமாக மலேசிய நிலப் பகுதிகளுக்கும் தமிழர்களுக்கும் தொடர்புகள் உள்ளன.
மலேசியாவில் ஏறத்தாழ 4 மில்லியன் தமிழர்கள் வாழ்கிறார்கள். இந்த மக்கள் தொகையில், பெரும்பான்மை 80% பேர் தமிழ்நாடு மற்றும் இலங்கையைச் சேர்ந்த இந்தியத் தமிழ் இனக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் ஆகும்.
பெருமளவிலான தமிழர்களின் மலேசியக் குடியேற்றம் பிரித்தானிய ஆட்சியின் போது தொடங்கியது. இந்தியத் தொழிலாளர்கள் தோட்டங்களில் வேலை செய்வதற்கு அப்போதைய மலாயா பிரித்தானிய அரசாங்கம் வசதிகளைச் செய்து கொடுத்தது.
அந்த வகையில் தமிழ்நாட்டில் இருந்து சென்றவர்களில் பெரும்பான்மையினர் இப்போதைய மலேசியத் தமிழர்கள் ஆவார்கள். இருப்பினும், சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே தமிழ்ச் சமூகங்கள் மலாயாவில் குடியேறி உள்ளனர்.[3][4]
தமிழர்களுக்கும் மலேசியாவுக்கும் இடையே 2000 ஆண்டுகளுக்கும் மேலாக உறவுகள் இருந்து வருகின்றன.
பண்டைய தமிழ்க் கவிதைப் படைப்பான பட்டினப்பாலை நவீன மலேசியாவின் நிலப்பகுதியை காழகம் (தமிழ்: கழகம்) என்று குறிப்பிடுகிறது.
10-ஆம்; 11-ஆம் நூற்றாண்டுகளைச் சார்ந்த தமிழ் இலக்கியம், நவீன மலேசிய மாநிலமான கெடாவை, கடாரம் (Kadaram) என்று குறிப்பிடுகிறது. பிரித்தானிய காலனித்துவத்திற்கு முன்னர், மலாயா தீவுக்கூட்டத்தில் தமிழர்கள் மிகவும் அறிமுகமானவர்களாக இருந்து உள்ளனர் என்பதும் அறியப் படுகின்றது.
தமிழ்நாட்டின் பல்லவ வம்சத்தினர் தமிழ் கலாசாரத்தையும் தமிழ் எழுத்துக்களையும் மலேசியாவிற்குள் கொண்டு வந்தனர்.[5] சோழப் பேரரசின் தமிழ்ப் பேரரசர் முதலாம் இராசேந்திர சோழன் 11-ஆம் நூற்றாண்டில் மலேசியாவின் மீது படையெடுத்தார்.[6]
மலாய் தீபகற்பம் 11-ஆம் நூற்றாண்டில் வலுவான தமிழ்க் கலாசாரத்தைக் கொண்டு இருந்தது. பல இடங்களில் தமிழ் வணிகர் சங்கங்கள் நிறுவப்பட்டன.[7] அந்த நேரத்தில், கடல்சார் ஆசியாவின் முக்கியமான வர்த்தகர்களாகத் தமிழர்கள் இருந்தனர்.
தென்கிழக்கு ஆசியாவில் குடியேறிய தமிழர்களில் பெரும்பாலோர் பெரும்பான்மையான மலாய் இனக் குழுவுடன் இணைந்து விட்டனர். இருந்தாலும், மலாக்கா செட்டிகள் போன்றவர்கள் தனித்தச் சமூகத்தினர். பொதுவாகச் சொன்னால் முந்தையக் குடியேற்ற வரலாற்றின் எச்சங்கள் என்று சொல்லலாம்.[8]
பிரித்தானிய காலனித்துவக் காலத்தில், மலாயா தோட்டங்களில் வேலை செய்வதற்கு வழி காணும் வகையில் இந்தியத் தொழிலாளர்களுக்கு பிரிட்டன் வசதி செய்து கொடுத்து. இந்தியாவில் இருந்து குடியேறியவர்களில் பெரும்பாலோர் தமிழ் இனத்தவர்கள். ஆங்கிலேயப் பேரரசின் அப்போதைய சென்னை மாகாணத்தில் (Madras Presidency) இருந்து வந்தவர்கள்.
தமிழ்நாட்டில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள் சில ஆண்டுகளுக்குப் பிறகு அங்கேயே நிரந்தரமாகக் குடியமர்ந்தனர்.
தமிழ் இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மருது பாண்டியரின் உறவினர்களும் மற்றும் 72 வீரர்களும் பினாங்கு தீவிற்கு 1802-ஆம் ஆண்டு மெட்ராஸ் சென்னை மாகாணத்தின் அரசாங்கத்தால் (British India Government) நாடு கடத்தப் பட்டனர்.[9]
இரண்டாம் உலகப் போரின் போது, சயாம் மற்றும் பர்மா நாடுகளுக்கு இடையிலான 415 கி.மீ. இரயில் பாதைக் கட்டுமானத்தில் 1,20,000-க்கும் மேற்பட்ட தமிழர்களை ஜப்பானிய இராணுவம் பயன்படுத்தியது.
இந்தத் திட்டத்தின் போது, அவர்களில் பாதி பேர் (சுமார் 60,000 பேர்) மரணமுற்றதாக முதலில் நம்பப்பட்டது. இருப்பினும், ஏறக்குறைய 150,000-க்கும் மேற்பட்ட தமிழ் இந்தியர்கள் கொல்லப்பட்டு இருக்கலாம் என அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பாம்புக் கடி மற்றும் பூச்சிக் கடி, காலரா, மலேரியா & பெரிபெரி போன்ற நோய்களுக்குப் பலியாகி உள்ளனர். தவிர சித்திரவதை, கற்பழிப்பு, வன்முறைகளைத் தாங்க முடியாமல் தற்கொலையும் செய்து கொண்டனர்.[10]
சயாம் மரண ரயில்பாதையின் கட்டுமானத் துறையில் வேலை செய்தவர்கள் அடிமைகளை விட படுமோசமான, கொடூரமான முறைகளில் நடத்தப் பட்டனர். அவர்களின் குடியிருப்பு வசதிகளும் மிக மிக ஆரோக்கியமற்றவையாக இருந்தன. அவர்கள் பரிதாபத்திற்குரிய மனிதப் பிண்டங்களாக வாழ்ந்தனர்.
ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் புள்ளிவிவரப்படி சயாம் மரண ரயில்பாதை கட்டுமானத்தில் 330,000 பேர் பணிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 106,000 பேர் இறந்து போயினர்.[11]
காலரா நோயை ஒழிப்பதற்காக, ஜப்பானியப் படைகள் இந்தியர்களுக்கு எதிராக மாபெரும் படுகொலைகளை நடத்தி உள்ளனர். அனுதினமும் ஏராளமான தமிழ் இந்தியர்களைக் கொன்றனர்.
தாங்க முடியாத வேலைச் சுமை; அடிமைகள் போல மரணம் அடையும் வரையில் உழைப்பு; இவற்றின் காரணமாகவும் பல்லாயிரம் பேர் இறந்தனர்.[12] அதே நேரத்தில் சில ஜப்பானிய வீரர்களும் இறந்து உள்ளனர்.[13]
இந்திய தமிழர்களைக் கொல்வதற்கான மற்ற முறைகளில், அவர்களின் மொத்தக் குடும்பத்தாரையும் எரித்து கொன்று விடுவதும் அடங்கும். ஜப்பானிய அதிகாரிகள், இந்திய வேலைக்காரப் பெண்களை நிர்வாணமாக நடனமாட அழைப்பது உண்டு.
ஜப்பானியர்களின் இரவு விருந்துகளில் ஏராளமான இந்தியப் பெண்கள், ஜப்பானிய அதிகாரிகளால் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த வன்முறைகளின் விளைவாக 19 வயதான ஒரு தமிழ்ப் பெண், ஜப்பானிய வீரர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்தும் போனார்.
மலேசியாவில் தமிழ் ஒரு போதனா மொழியாகும். 500-க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் உள்ளன. மலேசியத் தமிழர்கள் பற்றிய அமெரிக்க ஆய்வாளர் அரோல்டு சிப்மேன் (Harold Schiffman) கூற்றுப்படி, சிங்கப்பூருடன் ஒப்பிடும்போது, மலேசியாவில் மொழி பராமரிப்பு என்பது சாதகமாக உள்ளது.
இருப்பினும், தமிழர்கள் சிலர் மலாய் மொழிப் பள்ளிகளுக்கு மாறி வருவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.[14] பெரும்பாலான தமிழ் மாணவர்கள் இன்னும் பொது நிதியுதவி பெறும் தமிழ்ப்பள்ளிகளில் படித்து வருகின்றனர்.
இருப்பினும் தமிழ் மாணவர்களை மலாய் மொழிப் பள்ளிகளுக்கு மாற்றுவதற்கான நகர்வுக் கொள்கைகள் உள்ளன. அந்தக் கொள்கைகளுக்கு தமிழ் குழுக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.[15]
மலேசிய அரசியல் செயல்முறை, மூன்று பெரிய அரசியல் கட்சிகளின் கூட்டுறவு அரசியல் கூட்டணியை அடிப்படையாகக் கொண்டது. ஒவ்வோர் அரசியல் கட்சியும் ஓர் இன சமூகத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறது.
அந்த வகையில் மலேசிய இந்திய காங்கிரசு (Malaysian Indian Congress), நாடளாவிய நிலையில் மலேசிய இந்தியச் சமூகத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்கிறது.
மலேசியத் தமிழர்களின் பல உரிமைகள் மலேசியாவில் மறுக்கப் படுவதாகக் கூறி மலேசிய இந்திய குடிவழித் தமிழர்கள் இண்ட்ராப் எனும் இயக்கத்தின்வழி போராட்டங்களை நடத்தினார்கள். தவிர, மலேசியாவில் வாழும் இந்து சமயத்தைச் சேர்ந்த மக்களுக்கு எதிரான கொள்கையில் மலேசிய அரசு செயல்பட்டு வருகிறது என்பது இண்ட்ராப் குழுவின் குற்றச்சாட்டு.
மலேசிய இந்தியர்களும் இந்து சமயமும் மலேசியாவில் பாதுகாக்கப்பட வேண்டும் என்று இண்ட்ராப் வலியுறுத்தி வருகிறது. அதன் காரணமாக தேசிய ரீதியில் இண்ட்ராப் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.
மலேசிய அரசால் இந்துக் கோயில் அழிப்பு நிறுத்த வேண்டும், ஐக்கிய இராச்சியமும் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றமும் மலேசியவை கண்டனம் செய்யவேண்டும் இண்ட்ராப்பின் முக்கிய நோக்கங்கள் ஆகும். வழக்கறிஞர்கள் ம. மனோகரன், பொ. உதயகுமார், பொ. வேதமூர்த்தி, கணபதி ராவ், கங்காதரன் ஆகியோர் இக்குழுவின் தலைவர்கள்.