மலேசிய அரசியலின் ஒரு பகுதி |
மலேசிய அரசியல் |
---|
மலேசியாவின் முடியாட்சிகள் (ஆங்கிலம்: Monarchies of Malaysia; மலாய்: Negeri-Negeri Melayu;) என்பது மலேசியாவின் அரசியல் அமைப்பு நடைமுறையைச் சார்ந்த முடியாட்சி முறையாகும். மலேசியாவின் அரசியல் அமைப்பு வெஸ்ட்மின்ஸ்டர் அரசியல் பாணியிலான (Westminster system) நாடாளுமன்ற அமைப்பை அடிப்படையாகக் கொண்டது.
மலேசியாவில் உள்ள ஒன்பது மாநிலங்கள், பாரம்பரிய மலாய் ஆட்சியாளர்களால் வழிநடத்தப் படுகின்றன. மலேசிய ஆட்சியாளர்களின் பேரவை எனும் அமைப்பின் மூலமாக அந்த ஒன்பது மாநிலங்களும் மலாய் மாநிலங்கள் என்று அழைக்கப் படுகின்றன. அந்த மாநில அரசியலமைப்புகள், அரச வம்சாவளியைச் சேர்ந்த ஆண் மலாய் முசுலீம்கள் அரியணையில் அமரும் தகுதியை வரையறுத்து உள்ளன.
தீபகற்ப மலேசியாவின் கெடா, கிளாந்தான், ஜொகூர், பெர்லிஸ், பகாங், சிலாங்கூர் மற்றும் திரங்கானு ஆகிய ஏழு மாநிலங்களின் முடியாட்சிகள், ஆண்வழி மரபு ஆதிக்கத்தில் (agnatic primogeniture), மூத்த தலைமகனை ஆட்சியாளராகத் தேர்வு செய்கின்றன்.
பேராக் மாநிலத்தைப் பொறுத்த வரையில், அரச குடும்பத்தின் மூன்று பிரிவுகளுக்கு இடையில் மூத்த நிலை அடிப்படையில் (agnatic seniority), ஆட்சியாளர் ஒருவர் தேர்வு செய்யப் படுகிறார். அந்த ஏழு மாநிலங்களின் ஆட்சியாளர்களும் சுல்தான் (Sultan) எனும் பட்டத்தைப் பயன்படுத்துகின்றனர்.
நெகிரி செம்பிலான் மாநிலத்தைப் பொறுத்த வரையில், அங்கே ஒரு வகையான தேர்வுநிலை முடியாட்சி நடைபெறுகிறது. அதாவது அந்த மாநிலத்தின் பரம்பரைத் தலைவர்களால், அரச குடும்பத்தின் ஆண்களில் ஒருவர் ஆட்சியாளராகத் தேர்வு செய்யப் படுகிறார்.
நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ஆட்சியாளர் யாங் டி பெர்துவான் பெசார் (Yang di-Pertuan Besar) என்று அழைக்கப் படுகிறார். தீபகற்ப மலேசியாவின் வடக்கில், தாய்லாந்து எல்லையில் அமைந்து இருக்கும் பெர்லிஸ் மாநிலத்தின் ஆட்சியாளர் ராஜா (Raja) என்று அழைக்கப் படுகிறார்.
ஒவ்வோர் ஐந்து வருடங்களுக்கும் ஒரு முறை மலேசியாவின் பேரரசர் (யாங் டி பெர்துவான் அகோங்) தேர்ந்தெடுக்கப் படுகிறார். அதற்காக மலேசிய ஆட்சியாளர்களின் பேரவை, (ஆங்கிலம்: Conference of Rulers; மலாய்: Majlis Raja-Raja;) ஒன்று கூடுவது வழக்கம்.[1]
யாங் டி பெர்துவான் அகோங் எனும் பேரரசர் மாநிலங்களின் ஆட்சியாளர்களால் தேர்ந்தெடுக்கப் படுவதால்,[2] மலேசியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முடியாட்சி நடைபெறுகிறது.
மலாய் மாநிலங்கள் என்று அழைக்கப் படும் ஒன்பது மாநிலங்களின் ஆட்சியாளர்களில் ஒவ்வொருவரும் அவரவர் மாநிலத்தின் மாநிலத் தலைவராகச் செயல்படுகிறார்.[3] அவருடைய மாநிலத்தில் இஸ்லாம் மதத்தின் தலைவராகவும் பணியாற்றுகின்றனர்.
உலகின் மற்ற பல நாடுகளில் உள்ள அரசியலமைப்பு மன்னர்களைப் போலவே, மலாய் மாநிலங்களின் ஆட்சியாளர்கள் தங்கள் மாநிலங்களில் உண்மையான ஆட்சியில் பங்கேற்பது இல்லை. மாறாக, அவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் மாநிலத் தலைவர் மந்திரி பெசார் ஆலோசனையின்படி செயல் படுகிறார்கள். அதே வேளையில் மந்திரி பெசாரின் ஆலோசனையை நிராகரிப்பதிலும் அதிகாரங்கள் உள்ளன.
இருப்பினும், ஒவ்வொரு மாநிலத்தின் ஆட்சியாளருக்கும் மந்திரி பெசாரை நியமிப்பதில் அதிகாரங்கள் உள்ளன.