மல்டிவர்சு அல்லது பல்லண்டம் என்பது மார்வெல் திரைப் பிரபஞ்ச ஊடக உரிமையில் ஒரு கற்பனையான அமைப்பாகும். இது மார்வெல் காமிக்ஸில் இருந்த அதே பெயரை அடிப்படையாகக் கொண்ட எண்ணற்ற பல மாற்று யதார்த்தங்கள் மற்றும் பரிமாணங்களின் தொகுப்பாகும். இதன் முதல் தொடக்கம் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் (2016) என்ற திரைப்படத்தில் இருந்து தொடங்குகின்றது, இது "தி மல்டிவர்சு சகா" வில் அடங்கிய நான்காம் கட்டம், ஐந்தாம் கட்டம் மற்றும் ஆறாம் கட்டம் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த சகா விமர்சகர்களிடமிருந்து கலவையான பதிலைப் பெற்றது, அதன் காட்சியமைப்பு மற்றும் ஆர்வம் ஆகியவற்றிற்காக பாராட்டப்பட்டது, அத்துடன் மார்வல் திரைப் பிரபஞ்சம் அல்லாத மார்வெல் படங்களின் கதாபாத்திரங்களின் ஒருங்கிணைப்பு பார்வையாளர்கள் மற்றும் வர்ணனையாளர்களிடையே ஊகத்தையும் விவாதத்தையும் உருவாக்கியுள்ளது.
மல்டிவர்சு முதன்முதலில் 1960 மற்றும் 1970 களில் வெளியான மார்வெல் வரைகதைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 1962 இல் வெளியான ஸ்ட்ரேஞ்சர் டைல்ஸ் #103 என்ற கதையில் பென்டாஸ்டிக் போரின் ஜானி ஸ்டார்ம் என்ற கதாபாத்திரம் மார்வெல் வரலாற்றில் முதல்முறையாக ஒரு மாற்று யதார்த்தத்திற்கு டெலிபோர்ட் செய்யப்பட்டது, அந்தக் கதாபாத்திரம் ஐந்தாவது பரிமாணத்திற்கு அனுப்பப்பட்டது (பின்னர் பூமி-1612 என நியமிக்கப்பட்டது).[1] இந்த மல்டிவர்சு பற்றிய தெளிவான விளக்கம் வாட் இப்...? #1 (1977) மற்றும் மார்வெல் டூ-இன்-ஒன் #50 (1979) போன்ற கதைகளில் விரிவாக கூறப்பட்டது. வரைகதைகளில் இடம்பெற்றுள்ள முக்கிய உண்மை என்றால் 1983 இல் வெளியான த டேர்டெவில்ஸ் #7[2] என்ற கதையில் பூமியை வேறுபட்டு காட்டுவதற்காக எர்த்-616 என்று கேப்டன் பிரிட்டன் படைப்பாளி டேவிட் தோர்ப்பால் பெயரிடப்பட்டது.[3][4]
2008 ஆம் ஆண்டில், மார்வெல் திரைப் பிரபஞ்ச உரிமையின் கீழ் என்ற அயன் மேன் திரைப்படம் வெளியிடப்பட்டது.[5] அத்துடன் மார்வெல் திரைப் பிரபஞ்சம் இருப்பதாக லோகி, க்வென்பூல் மற்றும் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் ஆகிய வரைகதை கதாபாத்திரங்கள் அறிந்திருப்பதாகக் வரைகதைகளில் காட்டப்பட்டுள்ளது.[6][7][8] மற்றும் 2016 ஆம் ஆண்டு வெளியானடாக்டர் ஸ்ட்ரேஞ்ச் திரைப்படத்தின் மூலம் மல்டிவர்சு அறிமுகப்படுத்தப்பட்டது, இதை பற்றி இயக்குனர் இசுகாட் டெரிக்சன் கூறுகையில் "மார்வெல் காமிக் புத்தக பிரபஞ்சத்தை மார்வெல் மல்டிவர்ஸில் உடைத்துவிட்டது" என்று குறிப்பிட்டார்.[9] அந்த நேரத்தில், தயாரிப்பாளரும் மார்வெல் ஸ்டுடியோசு தலைவருமான கேவின் பிகே வரைகதையில் இடம்பெற்றுள்ளதைப் போன்ற இணையான பிரபஞ்சங்களை ஆராயும் திட்டம் எதுவும் இல்லை என்றும், அதற்குப் பதிலாக பல்வேறு "அன்னிய பரிமாணங்களை" படம் ஆராய்வதாகவும் கூறினார்.[10]