மா.இராமலிங்கம் (M. Ramalingam) (பி. 5. 10. 1939 ) ஒரு தமிழ் எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். இவர் 1981ன் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர். எழில்முதல்வன் என்ற பெயரில் அறியப்பட்டவர்.
இராமலிங்கம் திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டியில் பிறந்தவர். இவர் 1964 ஆம் ஆண்டு தமிழக அரசின் கல்வித்துறையில் பணியில் சேர்ந்தார். சிறிது காலத்திற்குப்பின் இவர் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் பணிபுரிந்தார். தமிழ் இலக்கிய விமர்சனம் குறித்து ஏழு புத்தகங்கள் எழுதியுள்ளார். இவரது நவீன தமிழ் உரைநடை பற்றிய இலக்கிய விமர்சன நூலான புதிய உரைநடை 1981 ஆம் ஆண்டில் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது.[1][2]
இவர் உயர்நிலைக் கல்வியைத் திருத்துறைப்பூண்டியிலும், தமிழ் இளங்கலைப் பட்ட வகுப்பினைக் கும்பகோணம் அரசு கல்லூரியிலும் பயின்றவர். முதுலைப் பட்ட வகுப்பினைச் சென்னை மாநிலக்கல்லூரியில் பயின்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர். இதற்காகப் பல பரிசில்களைப் பெற்றவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக 1975 இல் முனைவர் பட்டம் பெற்றவர். 1964 முதல் 1974 வரை சென்னை மாநிலக் கல்லூரியில் துணைப்பேராசிரியராகப் பணியாற்றியவர். அதன் பிறகு மன்னார்குடி, இராமநாதபுரம், கோயமுத்தூர், இராசிபுரம், பொன்னேரி, கும்பகோணம் கல்லூரிகளில் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணிபுரிந்த பெருமைக்குரியவர். 1985 முதல் 2000 வரை திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக விளங்கி ஓய்வு பெற்றவர்.
2024 நவம்பரில் இவரது படைப்புகளை தமிழ்நாடு அரசு நாட்டுடமை ஆக்கி, பரிவுத் தொகையாக ரூ 10 இலட்சம் வழங்கியது.[3] [4]