மாக் மண்டின் (மலாய்: Mak Mandin; ஆங்கிலம்: Mak Mandin; சீனம்: 麦曼丁) என்பது மலேசியா, பினாங்கு, வட செபராங் பிறை மாவட்டம் (North Seberang Perai District) உள்ள ஒரு நகரம். இந்த நகருக்கு மிக அருகில் செபராங் பிறை நகரம் அமைந்து உள்ளது. சுங்கை பட்டாணி நகரில் இருந்து 48 கி.மீ.; பாலிங் நகரில் இருந்து 7 கி.மீ. வடக்கே உள்ளது.
மாக் மண்டின் ஒரு நகர்ப்புற கிராமம்; மற்றும் தொழில்துறை பகுதி ஆகும். இது பிறை ஆற்றின் (Prai River) வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. [1]
மாக் மாண்டின் வளாகத்தில் ஒரு பெரிய தொழிற்பேட்டை உள்ளது. பினாங்கில் தொடக்கப்பட்ட ஆரம்பகால தொழிற்பேட்டைகளில் மாக் மாண்டின் தொழிற்பேட்டையும் (Mak Mandin Industrial Estate) ஒன்றாகும். இது செபெராங் ஜெயா தொழில் பூங்காவின் (Seberang Jaya Industrial Park) வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது.
1957-ஆம் ஆண்டு மலாயா விடுதலை அடைந்த பின்னர், பல பத்தாண்டுகளாக செபராங் பிறை பகுதி, கணிசமான அளவிற்குப் பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளது. மாக் மாண்டின் தொழிற்பேட்டை உருவாக்கப்பட்ட பின்னர் மேலும் துரிதமாக வளர்ச்சி கண்டது.[2]
செபராங் பிறையில் பல தொழில்துறை நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன. 1974-ஆம் ஆண்டில் பினாங்கு துறைமுகத்தின் முக்கிய நடவடிக்கைகளை பட்டர்வொர்த் நகர்ப் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. அதனால் செபராங் பிறை நகரத்தின் பொருளாதாரம் உயரத் தொடங்கியது.
வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலை பினாங்கு பாலம்; மற்றும் பினாங்கு இரண்டாவது பாலம் போன்ற பல முக்கிய திட்டங்களால் செபராங் பிறையின் இணைப்புகளும்; போக்குவரத்துகளின் கட்டமைப்புகளும் எளிதாக்கப்பட்டு உள்ளன. அதனால் இன்று, மலேசியாவின் இரண்டாவது பெரிய நகரமான பினாங்கின் ஒரு பகுதியாகச் சிறப்பு பெறுகிறது.[3]
மாக் மாண்டின் தொழிற்பேட்டை (Mak Mandin Industrial Estate) என்பது பட்டர்வொர்த்தில் உள்ள மாக் மாண்டின் பகுதியில் உள்ள ஒரு பெரிய தொழிற்பேட்டை ஆகும். இது [பிறை ஆறு|பிறை ஆற்றின்]] வடக்கு மற்றும் மேற்கு கரையில் உள்ளது.
மாக் மாண்டினில் உள்ள தொழிற்பேட்டை, பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பெட்டாலிங் ஜெயா தொழிற்பேட்டைக்கு (Petaling Jaya Industrial Estate) இணையாக, 1961-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அந்த வகையில் பினாங்கில் உள்ள தொழிற்பேட்டைகளில் மாக் மாண்டின் தொழிற்பேட்டை மிகப் பழமையான ஒன்றாகும்.[4]
மாக் மாண்டின் தொழிற்பேட்டையில் உள்ள பெரும்பாலான தொழிற்சாலைகள் பொருட்கள் உற்பத்தியில் கவனம் செலுத்துகின்றன. உணவுப் பொருட்கள், துணிவகைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், வீட்டுப் பாத்திரங்கள் போன்ற பொருட்களை உற்பத்தி செய்கின்றன.
மாக் மண்டின் சாலை (Jalan Mak Mandin), பாகன் லாலாங் சாலை (Jalan Bagan Lalang), மற்றும் பெர்மாத்தாங் பாவ் சாலை (Jalan Permatang Pauh) ஆகிய மூன்று முக்கிய சாலைகள் இந்தத் தொழிற்பேட்டைக்கு முக்கியச் சாலைகளாக உள்ளன.[4]
பட்டர்வொர்த் நகரில், மாக் மண்டின் பச்சை வீடு என்று பரவலாக அறியப்படும் மாக் மண்டின் ஸ்ரீ முருகன் ஆலயம் 1974 செப்டம்பர் 20-ஆம் தேதி தோற்றுவிக்கப்பட்டது. 1976-இல் முதலாவது மகா கும்பாபிஷேகம் கொண்டாடப்பட்டது.[5]
1978 சூலை 23-ஆம் தேதி, சங்கங்களின் பதிவு இலாகாவில் பதிவு செய்யப்பட்ட இந்த ஆலயத்திற்கு, 1989-ஆம் ஆண்டில், 12,534 சதுரடி பரப்பளவு கொண்ட நிலம் பினாங்கு மாநில அரசாங்கத்தால் வழங்கப்பட்டது. பினாங்கு மாநில அரசாங்கம் வழங்கிய நிதியுதவி; பொதுமக்களின் நிதியுதவி ஆகியவற்றால் 1993-ஆம் ஆண்டு, இந்த ஆலயம் செப்பனிடப்பட்டது.
மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி பினாங்கு மாநிலத்தில் அதிகமான மாணவர்களைக் கொண்ட தமிழ்ப்பள்ளி ஆகும். 1970-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்தப் பள்ளியில் இடப் பற்றாக்குறையினால் காலைப் பள்ளி மதியப் பள்ளி என இரு நேரங்களில் வகுப்புகள் நடைபெற்றன.
முன்பு பட்டர்வொர்த் நகரில் இருந்த கம்போங் பங்காளி தமிழ்ப்பள்ளி; இந்தியர் சங்கத் தமிழ்ப்பள்ளி; ஆகிய இரு தமிழ்ப்பள்ளிகளும் ஒன்றிணைக்கப் பட்டு, மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி என்று ஒரு புதிய கூட்டுப்பள்ளி உருவானது.
பினாங்கு மாநில அரசாங்கம் 2016-ஆம் ஆண்டில் புதிய மூன்றுமாடி பள்ளிக்கு 42 இலட்சம் ரிங்கிட் ஒதுக்கியது. 2019-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. இருப்பினும் பல்வேறு காரணங்களினால் 2022-ஆம் ஆண்டு வரையில் மாணவர்கள் புதிய பள்ளிக்குச் செல்ல முடியாமல் இருந்தது.[6]
இந்தப் பள்ளியில் 16 வகுப்பறைகள்; ஒரு நவீன சிற்றுண்டிச்சாலை; குளிர்சாதன வசதி கொண்ட நூல்நிலையம்; ஒரு மாநாட்டு அறை; ஒரு மருத்துவச் சிகிச்சை அறை; போன்ற வசதிகள் உள்ளன.[7]
மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியின் மண்டப நிர்மாணிப்புப் பணிகள் 2020-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன. மண்டப நிர்மாணிப்புப் பணிகளுக்கு பினாங்கு மாநில அரசாங்கம் 50 இலட்சம் ரிங்கிட் ஒதுக்கியது.
இந்தியர்கள் மட்டுமின்றி அனைத்து இனங்களும் பயன்படுத்தும் வகையில் கட்டப்படும் இந்த மண்டபத்தின் திறப்பு விழா 2023 சூன் மாதத்தில் நடைபெற உள்ளது.
மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியில் 720 மாணவர்கள் பயில்கிறார்கள். 55 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசியக் கல்வியமைச்சு 2020 சனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[8]
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
PBD2076 | மாக் மண்டின் | SJK(T) Mak Mandin | மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி | 13400 | பட்டர்வொர்த் | 720 | 55 |