மாதவரம் சந்திப்பு | |
---|---|
அமைவிடம் | |
மாதவரம், சென்னை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா | |
சந்தியில் உள்ள சாலைகள்: | 4 |
கட்டுமானம் | |
வழித்தடங்கள்: | 2 |
பராமரிப்பு: | மாநில நெடுஞ்சாலைத் துறை, தமிழ்நாடு |
மாதவரம் சந்திப்பு என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் மாதவரம் புறநகர்ப் பகுதியில், 13°08'40.5" N, 80°13'12.4" E (அதாவது, 13.144590° N, 80.220113° E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 33 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சில முக்கிய சாலைகளின் சந்திப்பு ஆகும்.[1][2] மூலக்கடை வழியாக மாதவரம் செல்லும் பெரும் வடக்கு வழித்தடம், செங்குன்றம் பகுதியிலிருந்து புழல் வழியாக மாதவரம் செல்லும் பெரும் வடக்கு வழித்தடம், அண்ணா நகர் பகுதியிலிருந்து இரட்டை ஏரி சந்திப்பு வழியாக மாதவரம் செல்லும் உள்வட்டச் சாலை, எண்ணூர் பகுதியிலிருந்து மணலி வழியாக மாதவரம் செல்லும் உள்வட்டச் சாலை ஆகியவை சந்திக்கும் இடமே மாதவரம் சந்திப்பு ஆகும்.[3][4][5]
மாதவரம் சந்திப்பு முதல் சென்னை வெளி வட்டச் சாலை வரை, சென்னை தடா சாலையில் ஆறு வழித்தட உயர்மட்ட சாலை அமைக்க மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.[6][7]
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ இரயில் திட்டத்தின் கீழ், மூன்றாவது வழித்தடமாக சுமார் 45.8 கி.மீ. நீளத்தில் மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரை அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான வழித்தடத்தில் மாதவரத்திலிருந்து சுரங்கப்பாதை உருவாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.[8] இத்திட்டத்தின் கீழ் 19.1 கி.மீ. தூரம் சுரங்கப்பாதைகள் கொண்ட வழித்தடமாகவும், 26.7 கி.மீ. உயர்மட்டப் பாதைகள் கொண்ட வழித்தடமாகவும் அமைய இருக்கின்றன. 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு, மெட்ரோ தொடருந்து சேவைகளைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.[9]
ஐந்தாவது வழித்தடமாக சுமார் 47 கி.மீ. நீளத்தில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை மெட்ரோ இரயில் சேவை வழங்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.[10] மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் இடையே 46 இரயில் நிலையங்களைக் கொண்டு, சுமார் 41 கி.மீ. தூரத்திற்கு உயர்மட்டப் பாதையாக அமையவிருக்கும் இத்தடத்தில் பாதைகள் அமைக்கத் தேவையான தூண்கள் நூற்றுக்கும் மேற்பட்டு கட்டப்பட்டுள்ளன.[11] மாதவரம் - சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் சுமார் 5.8 கி.மீ. தூரத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாதவரம் - சோழிங்கநல்லூர் வழித்தடத்திலும், இரட்டை ஏரி சந்திப்பு வரை உயர்மட்டப் பாதைக்கான தூண்கள் மற்றும் தூண்களின் மேல் இணைப்புப் பாதைகள் அமைவதற்கான பணிகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன.[12][13] இவ்வழித்தடத்தில் கொளத்தூர் (இரட்டை ஏரி சந்திப்பு) முதல் வில்லிவாக்கம் (நாதமுனி) வரை சுரங்கப்பாதையாக அமையவிருக்கிறது.[14]
சென்னையின் துணைப் பேருந்து நிலையமாகக் கருதப்படுகிற மாதவரம் புறநகர் பேருந்து நிலையம், இந்தச் சந்திப்பிற்கு அருகிலேயே அமையப் பெற்றுள்ளது. இங்கிருந்து ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மாநிலங்களுக்கும் தொலை தூரப் பயணங்களுக்கும் பேருந்து சேவைகள் உள்ளன.