மாரினி டி லிவேரா | |
---|---|
விருதுகள் | 2019 International Women of Courage Award |
மாரினி டி லிவேரா (Marini De Livera) இலங்கையைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞரும் சமூக ஆர்வலரும் ஆவார். இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் முன்னாள் தலைவராக இவர் பணியாற்றினார்[1] 2019 ஆம் ஆண்டில், அமெரிக்க வெளியுறவுத் துறை இவருக்கு சர்வதேச தைரியமான பெண்கள் விருதை வழங்கி சிறப்பித்தது.[2][3]
குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆதரவான வழக்கறிஞராக பணியாற்றுகிறார் அனாதை இல்லங்களில் சிக்கியுள்ள குழந்தைகளுக்கு மாற்று பராமரிப்பை ஊக்குவிக்கிறார். பொதுமக்களிடையே சட்டக் கல்வியறிவை உருவாக்க காட்சி கலை மற்றும் நாடகத்தைப் பயன்படுத்துகிறார். தனது சொந்த தெரு நாடகக் குழுவை வைத்திருக்கிறார். இது நாடு முழுவதும் மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பான நாடகங்களை நிகழ்த்துகிறது என்பது போன்ற காரணங்களை முன்னிறுத்தி அமெரிக்க வெளியுறவுத் துறை இவ்விருதை மாரினிக்கு வழங்கியது.
மாரினி டி லிவேரா மனித உரிமைகள் பாடத்தில் முதுகலை பட்டயச் சான்றிதழ் படிப்பும், இலண்டன் டிரினிட்டி கல்லூரியில் பேச்சு மற்றும் நாடகத்தில் இளநிலை பட்டம் பெற்றார். இலங்கையில் தனது முக்கியமான சமூக சேவைகளுக்காகவும், குறிப்பாக குற்றச் செயல்களால் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோருக்கு உதவுவதற்காகவும் பாராட்டப்படுகிறார். இலங்கை இராணுவத்திற்கான மனித உரிமைகள் பயிற்சியாளராக குறுகிய காலம் பணியாற்றியதற்காகவும் இவர் பாராட்டப்படுகிறார்.[4]
2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனிப்பட்ட காரணங்களுக்காக வேலையை விட்டுச் சென்ற அலுவலர் நடாசா பாலேந்திரனுக்குப் பதிலாக, இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவால் தேசிய குழந்தை பாதுகாப்பு ஆணையத்தின் புதிய தலைவராக இவர் நியமிக்கப்பட்டார்.[4]
இராணுவம், காவல்துறை, பொது அதிகாரிகள் மற்றும் அடிமட்ட தலைவர்களுக்கான மனித உரிமைகள் பயிற்சியாளராகவும் டி லிவேரா பணியாற்றியுள்ளார். தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் முன்னாள் தலைவர் என்பதால் இவர் சிறுவர், சிப்பாய்கள் மறுவாழ்வு, சிறைச் சீர்திருத்தக் குழு, மற்றும் பெண்கள் மீதான தேசியக் குழு ஆகியவற்றின் உறுப்பினராக இருந்துள்ளார். திருமதி டி லிவேரா, குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தில் திருத்தங்களை உருவாக்கிய குழுவுக்குத் தலைமை தாங்கினார். இலங்கை, இங்கிலாந்து மற்றும் சீசெல்சு நாடுகளில் சட்ட விரிவுரைகளை வழங்கியுள்ளார்.
பன்னாட்டு தைரியமான பெண்கள் விருது 2019 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினமான மார்ச்சு மாதம் எட்டாம் தேதியன்று வழங்கி சிறப்பிக்கப்பட்டது. பெரும்பாலும் கவனத்திற்கு வராமலேயே போகும் பெண்களின் குறிப்பிடத்தக்க சாதனைகள் நினைவுக்கு கொண்டு வரப்பட்டு பன்னாட்டு மகளிர் தினம் அன்று அப்பெண்களுக்கு வழங்கப்படுகிறது. சர்வதேச மகளிர் தினம் பெண்கள் தரத்தை உயர்த்தும் கொண்டாட்டமாகும். இலங்கையில் பெண்களின் தரத்தை மேம்படுத்துவதற்காக இவர் முன்னெடுத்த பல முக்கிய பங்களிப்புகளுக்காக இவ்விருது மாரினி டி லிவேராவுக்கு வழங்கப்பட்டது.
65 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 120 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட பெண்களை வெளியுறவுத்துறை அங்கீகரித்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க தூதர்கள் அந்தந்த புரவலர் நாடுகளில் இருந்து தைரியமான ஒரு பெண்ணை பரிந்துரைக்கின்றனர். இறுதித் தேர்வாளர்கள் மூத்த துறை அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கீகரிக்கப்படுகிறார்கள்.
விருது பெற்ற 10 பெறுநர்களில் ஒருவராக இலங்கையின் மாரினியும் பரிந்துரைக்கப்பட்டார்.[5][6]
வங்காள தேசத்தின் ரசியா சுல்தானா, பர்மாவின் நாவ் கன்யாவ் பாவ், திசுபூட்டியின் மௌமினா உசைன் தாரர், எகிப்தின் மாமா மேகி, இயோர்டானின் கர்னல் காலிடா கலஃப் அன்னா அல்-டிவால், அயர்லாந்தின் சகோதரி ஓர்லா திரெசி, மாண்டிநீக்ரோவைச் சேர்ந்த ஒலிவரா லேகிக், பெருவின் புளோர் டி மரியா வேக சபாடா மற்றும் தான்சானியாவின் அன்னா அலோய்சு எங்கா உள்ளிட்டவர்கள் இவ்விருதை வென்ற மற்ற ஒன்பது பெண்களாவர்.