மாலா சென் (Mala Sen), ( ஜூன் 3, 1947 - மே 21, 2011) ஒரு இந்திய - பிரித்தானிய எழுத்தாளர் மற்றும் மனித உரிமை ஆர்வலர் ஆவார் . இவர், ஒரு ஆர்வலராக, பிரித்தானிய ஆசிய மற்றும் பிரித்தானிய பிளாக் பாந்தர்ஸ் இயக்கங்களின் ஒரு பகுதியாக, 1960 கள் மற்றும் 1970 களில் இலண்டனில் தனது குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் செயற்பாடு மற்றும் இன உறவுப் பணிகளுக்காக அறியப்பட்டார், [1] பின்னர் இந்தியாவில் இவரது பெண்கள் உரிமை செயற்பாடுகளுக்காக பரவலாக பேசப்பட்டார். ஒரு எழுத்தாளராக, இவர் எழுதிய, இந்தியாவின் கொள்ளை ராணி: தி ட்ரூ ஸ்டோரி ஆஃப் பூலான் தேவி எனப்படும் புத்தகத்திற்காக அறியப்பட்டார், இது 1994 ஆம் ஆண்டு பாராட்டப்பட்ட திரைப்படமான பாண்டிட் குயின் எடுப்பதற்கு வழிவகுத்தது. கிராமப்புற இந்தியாவில் பெண்கள் மீதான அடக்குமுறையை ஆராய்ந்த பின்னர், இவர் 2001 இல் டெத் பை ஃபயர் என்கிற புத்தகத்தை வெளியிட்டார்.
உத்தரகண்ட் மாநிலத்தின் முசோரியில் 1947 ஜூன் 3 ஆம் தேதி பிறந்த மாலா சென், லெப்டினென்ட் ஜெனரல் லியோனல் புரோதீப் சென் மற்றும் கல்யாணி குப்தா ஆகியோரின் மகள் ஆவார். 1953 இல் இவரது பெற்றோர் விவாகரத்து செய்ததைத் தொடர்ந்து, இவர் தனது தந்தையால் வளர்க்கப்பட்டார். [2] சென் வங்காள பாரம்பரியத்தைச் சேர்ந்தவர். [3] தேராதூனில் உள்ள வெல்ஹாம் பள்ளியில் படித்த பிறகு, மும்பையில் உள்ள நிர்மலா நிகேதன் கல்லூரியில் வீட்டு அறிவியல் பயின்றார். 1965 ஆம் ஆண்டில் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் உதவித்தொகை பெற்ற ஃபாரூக் தோண்டியுடன் இங்கிலாந்துக்கு சென்றார். இவர்கள் 1968 இல் திருமணம் செய்து கொண்டனர், ஆனால் 1976 இல் விவாகரத்து செய்தனர், இருப்பினும் இவர்கள் தொடர்ந்து நட்பு உறவைப் பேணி வந்தனர்.
இங்கிலாந்து வந்த பிறகு, சென் தனது சுய தேவைகளுக்காக ஒரு தையற்காரியாக வேலை செய்யத் தொடங்கினார். இன உறவுகளில் அதிக அக்கறை கொண்ட இவர், லெய்செஸ்டரில் உள்ள இந்திய தொழிற்சாலை தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடினார். ரேஸ் டுடே இதழில் எழுதுகையில் , இலண்டனின் கிழக்கு முனையில் உள்ள வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் தங்குமிடங்களில் வசிக்கும் போது, தொழிற்சாலைகளில் குறைந்த ஊதியம் பெற்றுக்கொண்டு அதிக நேரம் உழைக்கும் பணியாளர்களைப் பற்றி அறிக்கை செய்தார். இந்திய குடும்பங்களிலிருந்து பிரிந்து வாழும் இந்த ஊழியர்கள் சுழற்சி அடிப்படையில் தங்கள் இருப்பிடங்களில் உள்ள படுக்கை வசதியை பகிர்ந்து கொள்வதையும், அவர்கள் வீட்டுவசதிக்கு தகுதி மறுக்கப்பட்டு, அவர்கள் தனிமனிதர்களாக பட்டியலிடப்பட்டுள்ளனர் என்பதையும் மாலா சென் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். பின்னர், தனது கணவர் மற்றும் பிற ஆர்வலர்களுடன் சேர்ந்து, மாலா சென் வங்காள வீட்டுவசதி நடவடிக்கைக் குழுவை நிறுவினார். இது கிழக்கு இலண்டனில் வாழ்கின்ற வங்காளதேச சமூகத்திற்கு பாதுகாப்பான வாழ்க்கை முறையை நிறுவ வழிவகுத்தது.
தோண்டியுடன் சேர்ந்து, மாலா சென் பிரித்தானிய பிளாக் பாந்தர்ஸ் இயக்கத்தின் தீவிர உறுப்பினராகவும் இருந்தார். [1] இவர், பத்திரிகையான ரேஸ் டுடே கூட்டுப்பணியின் ஆரம்ப உறுப்பினராக இருந்தார்.
மாலா சென், தனது 63வது வயதில், 2011ம் ஆண்டு, மே 21 அன்று மும்பையில் உள்ள டாடா மெமோரியல் மருத்துவமனையில், ஓசோஃபேஜியல் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சைக்கு பின்னர் இறந்தார். அந்த நேரத்தில் இவர் இந்தியாவில் எச்.ஐ.வி நோயாளிகளைப் பற்றிய புதிய புத்தகத்தில் பணிபுரிந்து வந்தார். [4] [5] ஜூலை 2011 இல், இலண்டனில் உள்ள நேரு மையத்தில், இவருக்காக ஒரு நினைவு நிகழ்வு நடைபெற்றது. [6] [7]
பாண்டிட் க்வீன், மிகவும் பாராட்டப்பட்ட 1994இல் வெளிவந்த இந்தியத் திரைப்படம் ஆகும். இது, இவரது புத்தகமான பூலான் தேவியின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது ஆகும்.
மாலா சென்னின்பிரித்தானிய பிளாக் பாந்தர்ஸை அடிப்படையாகக் கொண்டு, 2017 ஆம் ஆண்டு வெளிவந்த பிரித்தானிய நாடக குறுந்-தொடரான கொரில்லாவில், ஜாஸ் மித்ராவால் ஈர்க்கப்பட்ட ஒரு பெண் முன்னணி நடிகையான, ஃப்ரீடா பிண்டோ நடித்தார்.