மாவீரர் நாள் (தமிழீழம்)

மாவீரர் நாள்
மாவீரர் நாள் அடையாளம் - காந்தள்
அதிகாரப்பூர்வ பெயர்மாவீரர் நாள்
கடைப்பிடிப்போர்தமிழர்
நாள்நவம்பர் 27
நிகழ்வுஆண்டு

தமிழீழத்தில் மாவீரர் நாள் (Maaveerar Naal) என்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்குபெற்று தாய்நாட்டுக்காக தமது உயிரை ஈந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களையும், அவர்களோடு சேர்ந்து போரிட்டு உயிர் ஈந்த எல்லைப்படை துணைப்படை வீரர்களையும், புலிகளோடு இணைந்து உயிர் ஈந்த ஈழ புரட்சிகர மாணவர் இயக்க உறுப்பினர்களையும், மற்றும் குட்டிமணி, தங்கத்துரை போன்ற வேறு சில ஈழப்போராட்ட போராளிகளையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செய்து, பெருமைப்படுத்தும் நாள் ஆகும். இதற்குரிய நாளாக நவம்பர் 27 ஆம் நாள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரால் 1989 ஆண்டில் அறிவிக்கப்பட்டது. நினைவுகூரும் நாள் போன்று மற்ற நாடுகளில் போர்வீரர்களை நினைவுகூரும் நாட்களோடு மாவீரர் நாள் ஒப்பிடத்தக்கது. ஈழத்தமிழர் அனேகர் வெவ்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும், ஈழப் போராட்டத்தில் மடிந்த வீரர்களுக்கு மரியாதை செய்வர். மற்ற இயக்கங்களுடைய போராளிகளுக்கும் இவ்வாறு வணக்கம் செலுத்தும் நாட்கள் உண்டு.[1][2][3]

வரலாறு

[தொகு]

விடுதலைப் புலிகள் ஈழப் போரில் இறந்த போராளிகளை நினைவுகூருவது, மதிப்பது தமது அடிப்படைக் கடமைகளில், கொள்கைகளில் ஒன்றாகக் கருதுகிறார்கள். மாவீரர் நாளாக நவம்பர் 27 விடுதலைப் புலிகளால் 1989 அறிவிக்கப்பட்டது. தமிழீழ மாவீரர் நாளாக இந்நாளைத் தேர்ந்தெடுத்ததற்கு தமிழீழ போராட்ட வரலாற்றுடன் இணைந்த ஒரு முக்கிய காரணம் உள்ளது. இந்த நாளில்தான் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது போராளியான சங்கர் (செ. சத்தியநாதன்) மரணம் அடைந்தார்.

மாவீரர் எண்ணிக்கை

[தொகு]

கடைப்பிடிப்பு

[தொகு]

தமிழீழம்

[தொகு]

போராட்டக் காலத்தில் மாவீரர் நாளில் பல மாவீரர் குடும்பங்கள் மாவீரர்களின் கல்லறைக்களுக்கு சென்று அஞ்சலி செலுத்துவர். கொடியேற்றுதல், ஈகைச்சுடரேற்றுதல், மலர்தூவி அஞ்சலி செய்தல் என்பன மாவீரர்நாளின் முக்கிய நிகழ்வுகளாக இடம்பெறுகின்றன. அதனைத் தொடர்ந்து தமிழீழத் தேசியத்தலைவரின் மாவீரர்நாள் உரையும், விடுதலை வேட்கையையும், வீர உணர்வுகளையும் தரக்கூடியதான கலைநிகழ்வுகளும், பல்வேறு நினைவுகூர் நிகழ்வுகள், உரைகளும் இடம்பெற்றன. மாவீரர் வாரத்தில் மாவீரர் குடும்பங்களின் உறுப்பினர்களும் பெருமைப்படுத்தப்பட்டனர். 2009 ஈழப்போராட்டத் தோல்வியின் பின் இலங்கை அரசால் மாவீரர்நாள் துயிலும் இல்லங்கள் அழிக்கப்பட்டும், மாவீரர்நாள் நினைவு நிகழ்வுகள் தடைசெய்யப்பட்டும் உள்ளன.

புலம்பெயர் நாடுகள்

[தொகு]
மாவீரர் துயிலுமில்லம் செயற்கை முறையில் அமைக்கப்பட்டு நினைவுகூரப்படல், இடம்: ஜெர்மனி

புலம்பெயர் நாடுகளிலும் தமிழீழத்தில் கடைப்பிடிக்கப்படும் அத்தனை முறைகளும் மாவீரர்நாளில் கடைப்பிடிக்கப்படுகிறது. மாவீரர்துயிலும் இல்லமும், கல்லறைகளும் செயற்கை முறைகளில் வடிவமைக்கப்பட்டு அதற்கென ஒரு மண்டபத்தில் வைத்து மாவீரர்கள் நினைவுகூரப்படுகிறார்கள். முன்னர் புலம்பெயர் நாடுகளில் நடைபெறும் மாவீரர்நாட்கள் அந்தந்த நாடுகளின் விடுமுறைகளோடு ஒட்டி, ஈழமக்களின் வசதிக்கேற்றபடி நாள் குறிக்கப்பட்டு நினைவுகூரப்பட்டது. தற்போது சில ஆண்டுகளாக அந்த நிலையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பெற்று மாவீரர்நாளான நவம்பர் 27ஆம் நாளிலேயே அனேகமான புலம்பெயர் நாடுகளில் மாவீரர்நாள் நிகழ்கிறது.

கொடியேற்றுதல்

[தொகு]
உயிரிழந்த மாவீரர் ஒருவரின் தாய், தமிழீழத் தேசியக்கொடியை ஏற்றுகிறார். இடம்: ஜெர்மனி; ஆண்டு: 2002

மாவீரர் நாள் நிகழ்வுகளில் தமிழீழத் தேசியக்கொடியை ஏற்றிப் போற்றுதல் மிக முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. தமிழீழத் தேசியக் கொடி மாவீரர் குடும்ப உறுப்பினர்களால் ஏற்றப்படும். கொடியேற்றப்படும் போது புதுவை இரத்தினதுரையால் எழுதப்பெற்ற ஏறுது பார் கொடி ஏறுது பார்... என்ற உணர்வு மிக்க பாடல் ஒவ்வொரு முறையும் ஒலிக்க விடப்படும்.

மாவீரர் நாள் உறுதிமொழி

[தொகு]

உலகத் தமிழர் அனைவரும் மாவீரர் நாளன்று தமிழ் மக்களைக் காக்க இன்னுயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அவர்கள் கண்ட தமிழீழக் கனவை நனவாக்கவும் அரும்பாடு படுவேன் என்றும் உறுதிக்கூறி கீழ்க்கண்ட உறுதிமொழியை எடுப்பார்கள்.

"மொழியாகி,
எங்கள் மூச்சாகி - நாளை
முடிசூடும் தமிழ்மீது உறுதி!
வழிகாட்டி எம்மை
உருவாக்கும் தலைவன்
வரலாறு மீதிலும் உறுதி!
விழிமூடி இங்கு
துயில்கின்ற வேங்கை
வீரர்கள் மீதிலும் உறுதி!
இழிவாக வாழோம்
தமிழீழப் போரில்
இனிமேலும் ஓயோம் உறுதி!"

ஈகைச்சுடரேற்றுதல்

[தொகு]
ஈகைச்சுடர் ஏற்றப்படுகிறது. இடம்: ஜெர்மனி

தொடக்க காலங்களில் மாவீரர் நாளில் ஈகைச்சுடரேற்றுவது நள்ளிரவு 12.00 மணிக்கு என்றிருந்தது. பின்னர் அது மாலை 06.05 மணிக்கு என்று மாற்றப்பட்டு விட்டது. அதற்கும் காரணம் உள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதற் களப்பலியான சங்கர் வீரமரணமடைந்தது நவம்பர் 27, 1982 அன்று மாலை 6.05 மணிக்கு. லெப். சங்கர் தனது தாய் நாட்டுக்காக தன் உயிரை அணைத்துக் கொண்ட அதே நாள், அதே நேரமான 6.05 மணியே தமீழீழ மாவீரர்நாளில் ஈகைச்சுடரேற்றும் நேரமானது.

ஈசைக்சுடரேற்றும் போது மாவீரர் துயிலுமில்லப் பாடல் பாடப்படும்.

மாவீரர் குடும்ப பெருமைப்படுத்தப்படல்

[தொகு]

மாவீரர் வாரத்தில் மாவீரர் குடும்பங்களின் உறுப்பினர்களும் விடுதலைப்புலிகள் அமைப்பினரால் பெருமைப்படுத்தப்பட்டனர். ஆரம்பத்தில் இந்தச் செயற்பாடு தமிழீழத்தில் மட்டுமே கடைப்பிடிக்கப் பெற்றது. அதற்குப் பிறகு வெளிநாடுகளிலும் இந்த நிகழ்வு நடைபெற்றது.

தமிழீழத்தில்

[தொகு]

ஒரு மாவீரனின் நினைவுச்சின்னம் எந்த மாவீரர் துயிலும் இல்லத்தில் உள்ளதோ அந்த இடத்துக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் (பெற்றோர்கள், உடன்பிறப்புகள்) அழைத்து வரப்பட்டு மாவீரர் வாரத்தின் மூன்று நாட்கள் அதற்குரிய மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு விருந்தினர்களாகக் கவனிக்கப்பட்டனர்.

புலம்பெயர் நாடுகள்

[தொகு]

அதற்கென மாவீரர் வாரத்தின் ஒரு நாளையோ அன்றி மாவீரர் நாளையோ தேர்ந்தெடுத்து அந்த நாளில் மாவீரர் குடும்பத்தினர் கௌரவிக்கப்பட்டார்கள்.

மாவீரர் நாள் உரை

[தொகு]

மாவீரர்நாள் உரை தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் ஒவ்வோர் ஆண்டும் மாவீரர் நாளில் உரைக்கப்பட்டது. இவ்வுரை தமிழீழத்தில் இருந்து ஆற்றப்பட்டாலும் உலகின் பல நாடுகளுக்கும் நேரடி ஒலிபரப்பாகவும், ஒளிபரப்பாகவும் எடுத்துச் செல்லப்பட்டது. இவ்வுரை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் பற்று கொண்டோர்களால் மட்டுமன்றி விடுதலையில் அக்கறை கொண்ட மற்றைய அமைப்பினர்களாலும், மாற்றுக் கருத்துக்கொண்ட அமைப்பினர்களாலும், விடுதலைப்போரையே வெறுப்பவர்களாலும், சாதாரண தமிழ் மக்களாலும், சிங்கள அரசினாலும் கூட செவிமடுக்கப்பட்டது.

கார்த்திகைப் பூ

[தொகு]

தமிழர்களின் தேசியப்பூவாக, கார் காலத்தில் மலர்ந்திடுவதும், தமிழீழ தேசியக்கொடியின் வர்ணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதும், தமிழீழத் தேசியத் திருநாளாம் மாவீரர் நாள் வருகின்ற திங்களில் கொடிபரப்பி பூத்துக் குலுங்குவதும், தமிழீழ தேசமெங்கும் பரவி முகிழ் விடுவதுமான கார்த்திகைப் பூ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கார்த்திகைப் பூவினை பண்டைத் தமிழ் இலக்கியங்களிலே காந்தள் என்றே அழைப்பர்.

படங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "As Toronto Tamils honour war dead, some fear Sri Lankan election could spark more violence". Kirthana Sasitharan. CBC. 27 November 2019. Retrieved 27 November 2019.
  2. McDowell, Sara; Braniff, Máire (2014). Commemoration as Conflict: Space, Memory and Identity in Peace Processes. Palgrave Macmillan. pp. 87–88. ISBN 978-0-230-27375-7.
  3. Mylvaganam, K. "Vanni Preparing for Heroes' Day". Illankai Tamil Sangam.

வெளி இணைப்புகள்

[தொகு]