மித்து ஆலூர் (Mithu Alur ; பிறப்பு 27 மார்ச் 1943) பொதுவாக டாக்டர் மித்து ஆலூர் என்று குறிப்பிடப்படுகிறார். வலிப்பு உள்ளவர்களுக்கும் உதவும் தி ஸ்பாஸ்டிக் சொசைட்டி ஆஃப் இந்தியாவின் நிறுவனர் தலைவரும் ( இப்போது ADAPT என மறுபெயரிடப்பட்டது - ("Able Disable All People Together") கல்வியாளரும், இயலாமை உரிமை ஆர்வலரும், ஆராய்ச்சியாளரும், எழுத்தாளரும், இந்தியாவில் ஊனமுற்ற மக்கள் தொடர்பான பிரச்சினைகளை எழுதியவரும் ஆவார்.
நரம்பு-தசை மற்றும் வளர்ச்சி குறைபாடுகள் உள்ளவர்களின் கவனிப்பு மற்றும் கல்விக்கு இவர் முன்னோடியாக உள்ளார். [1] [2] பெருமூளை வாதம், மதியிறுக்கம், டெளன் நோய்க்கூட்டறிகுறி, மனவளர்ச்சிக் குறை போன்றவை. இவரது மகள் மாலினி சிப்க்கு பெருமூளை வாதம் இருப்பது கண்டறியப்பட்ட பிறகு, தனது மகள் போன்ற நிலைமைகள் உள்ளவர்களின் பராமரிப்பு இந்தியாவில் இல்லை என்பதை உணர்ந்தார். எனவே இவர் இங்கிலாந்தில் பயிற்சி பெற்றார். 1972இல் இந்திய ஸ்பாஸ்டிக்ஸ் அமைப்பை (Spastics Society of India) தொடங்கினார். இந்தியாவில் ஊனமுற்றோரின் பல பெற்றோர்களும் நண்பர்களும் இவரிடமிருந்தும் இவரது நிறுவனத்திலிருந்தும் வெவ்வேறு மாநிலங்களில் அந்தந்த வலிப்பு நோயாளிகள் சங்கங்களைத் தொடங்க உத்வேகம் மற்றும் பயிற்சியைப் பெற்றனர். இன்று இந்தியாவில் 16 மாநிலங்களில் பல கிராமப்புறங்களுக்கும் சுதந்திரமான வலிப்பு நோயாளிகள் சங்கங்கள் உள்ளன.
ஆலூர், கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்தார். இவர் தனது உயர்கல்வியை தில்லியில் மிராண்டா பள்ளியில் பயின்றார். 1963இல் தில்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். 1965இல், இவர் ரஞ்சித் சிப் என்பவரை மணந்தார். ஒரு வருடம் கழித்து இவர்களுக்கு மாலினி சிப் என்ற ஒரு மகள் பிறந்தார்.
மாலினிக்கு பெருமூளை வாதம் இருப்பது கண்டறியப்பட்டது. இந்தியாவில் ஊனமுற்ற குழந்தைகளுக்கான சரியான பள்ளி இல்லை என்பதைக் கண்டறிந்த இவர், 1968இல் லண்டன் பல்கலைக்கழகத்தின் கல்வி நிறுவனத்தில் (IOE) சிறப்பு கல்வித் துறையில் ஆசிரியராகப் பயிற்சி பெற்றார்.
இந்தியா திரும்பிய இவர், மும்பையில் ஒரு பள்ளியைத் திறக்க விரும்பினார். அப்போதைய இந்தியப் பிரதமர் திருமதி. இந்திரா காந்தியைத் தொடர்பு கொண்டார். நடிகை நர்கிசு தத்தை தொடர்பு கொள்ளுமாறு பிரதமர் காந்தி கேட்டுக் கொண்டார். நர்கிசு தத் தி ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டி ஆஃப் இந்தியாவின் (SSI) முதல் புரவலராக ஆனார். இது முறையாக 2 அக்டோபர் 1972இல் தொடங்கப்பட்டது.[3]
பின்னர் இவர் இந்தியாவில் முதன்முதலில் பெருமூளை வாதம் உள்ள குழந்தைகளுக்காக சிறப்பு கல்வி மையத்தை கோலாபாவில் 2 அக்டோபர் 1973 இல் தொடங்கி ஒரு கூரையின் கீழ் கல்வி மற்றும் சிகிச்சை வசதிகளை வழங்கினார். இது மாலினி சிப், பர்ஹான் கான்ட்ராக்டர் ,இம்தியாஸ் என்ற மூன்று குழந்தைகளுடன் தொடங்கப்பட்டது. நர்கிசு தத், இதன் வாழ்நாள் புரவலராக இருந்தார். 1981இல் நர்கிசு இறந்த பிறகு, அவரது கணவர் சுனில் தத் தனது மனையின் பணியை மேற்கொண்டு வந்தார்.
ஸ்பாஸ்டிக்ஸ் சொசைட்டி அதன் பின்னர் ஆசிரியர் பயிற்சி, பெருமூளை வாதம், மதியிறுக்கம், மனவளர்ச்சிக் குறை, பலவித குறைபாடுகள், கற்றல் குறைபாடுகள் உள்ள இளைஞர்களின் தொழிற்பயிற்சி ஆகிய திட்டங்களை உள்ளடக்கியது. இது வக்காலத்து மற்றும் விழிப்புணர்வு துறையிலும் செயல்படுகிறது. மேலும் இவ்வகைக் குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் பிற நிபுணர்களுக்கும் ஆதரவை வழங்குகிறது.
1989 இல் இந்திய அரசு இவருக்கு பத்மசிறீ விருது வழங்கியது.[4]