முகமது அப்பாஸ் (Mohammad Abbas (பிறப்பு: 10 மார்ச், 1990) [1] பாக்கித்தான் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20, ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார். வலதுகை மட்டையாளரான இவர் வலதுகை பந்து வீச்சாளர் ஆவார். இவர் சியல்கோட் ஸ்டாலியன்ஸ், கான் ஆய்வக அணி ,பாக்கித்தான் தொலைக்காட்சி அணி ,சியல்கோட் துடுப்பாட்ட அணி மற்றும் சியல்கோட் 19வயதிற்குட்பட்டோர் அணி ஆகிய அணிகளுக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடி வருகிறார். 2018 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் நடைபெற்ற மாகானத் துடுப்பாட்ட வாகையாளர் கோப்பைக்கான தொடரில் இவர் லீசெஸ்டெர்ஷயர் மாகாண துடுப்பாட்ட அணிக்காக விளையாட ஒப்பந்தம் ஆனார்.[2] ஆகஸ்டு 2018 இல் பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியம் இவர் உட்பட முப்பத்து மூன்று வீரர்களுக்கு 2018-19 ஆம் ஆண்டிற்கான மத்திய ஒப்பந்த விருதினை வழங்கியது.[3][4]
முகமது அப்பாஸ் பாக்கித்தானில் உள்ள சம்பிரல் எனும் சிற்றூரில் பிறந்தார். இவர் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடுவதற்கு முன்பாக தோல் தொழிற்சாலையில் பற்றவைக்கும் வேலையில் ஈடுபட்டு வந்தார்.[5][6]
2015-16 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற குவைத்-இ- அசாம் கோப்பைக்கான தொடரில் இவர் விளையாடினார். அந்தத் தொடரில் சிறப்பாக பந்துவீசி 61 இலக்குகளைக் கைப்பற்றினார். இதன் மூலம் அந்தத் தொடரில் அதிக இலக்குகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார்[7].பின் அதற்கு ஆண்டு நடந்த தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 71 இலக்குகளை கைப்பற்றி அதிக இலக்குகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார்.[8] மேலும் 2017-18 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தொடரில் இவர் சூயி வடக்கு வாயு பைப்லைன்ஸ் லிமிடட் அணி சார்பாக விளையாடிய இவர் ஏழு போட்டிகளில் விளையாடி 37 இலக்குகளைக் கைப்பற்றினார்.[9]
2017 ஆம் ஆண்டில் பாக்கித்தான் அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவருக்கு இடம் கிடைத்தது.[10] ஏப்ரல் 21, 2017 இல் சபினா பார்க்கில் தனது முதல் போட்டியில் விளையாடினார். தனது முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் கிரெய்க் பிராத்வெய்ட் இலக்கினை வீழ்த்தினார். இந்தப் போட்டியின் முடிவில் இவர் மூன்று இலக்குகளைக் கைப்பற்றினார்.[11] இந்தத் தொடரின் மூன்றாவது போட்டியில் முதல் முறையாக ஐந்து இலக்குகளைக் கைப்பற்றினார்.[12]
2018 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான இரண்டு தேர்வுத் துடுப்பாட்டம் கொண்ட தொடரில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். மே மற்றும் சூன் 2018 இல் நடைபெற்ற போட்டியில் முத்ல் முறையாக பத்து இலக்குகளைக் கைப்பற்றினார். மேலும் அந்தத் தொடரின் தொடர் நாயகன் விருதினைப் பெற்றார்.[13] 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாக்கித்தான் துடுப்பாட்ட அண்டு விழாவில் இவரை ஆண்டின் சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரராக பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியம் தேர்வு செய்தது.[14] அதே ஆண்டில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் தனது 50ஆவது தேர்வு இலக்கினைக் கைப்பற்றினார். இது இவரின் பத்தாவது போட்டி ஆகும்.இதன்மூலம் மிகக் குறைவான போட்டிகளில் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 50 இலக்குகளைக் கைப்பற்றிய பாக்கித்தானிய வீரர் எனும் சாதனை படைத்தார்.[15] இந்தத் தொடரின் இறுதிப் போட்டியின் இரண்டு ஆட்டப் பகுதிகளிலும் ஐந்து இலக்குகளைக் கைப்பற்றினார். மேலும் ஐக்கிய அரபு அமீரகாரகத்தில் ஒரு மித வேகப் பந்துவீச்சாளர் ஒருவர் பத்து இலக்குகளைக் கைப்பற்றுவது இதுவே முதல் முறையாகும்.[16]
கிரிக்கின்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: முகமது அப்பாஸ் (துடுப்பாட்டக்காரர்)