மியான் முகமது அலி கசூரி ( Mahmud Ali Kasuri )(1910–1987) என்பவர் பாக்கித்தான் அரசியல்வாதியும், மனித உரிமைக்காக வாதாடும் வழக்கறிஞரும் மற்றும் இந்திய உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும் ஆவார். இவர் இலாகூர், இஸ்லாமியா கல்லூரியில் படித்தவர்.
பாக்கித்தான் உருவாவதற்கு முன்பு இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியிலும், அகில இந்திய முசுலிம் லீக்கிலும் பணியாற்றினார். பின்னர் தேசிய அவாமி கட்சியின் நிறுவனர்களில் ஒருவராக ஆவதற்கு முன்பு ஆசாத் பாக்கித்தான் கட்சியை உருவாக்கி சிலகாலம் அதன் தலைவராக பணியாற்றினார்.[1] ஒரு இடதுசாரி வழக்கறிஞராக, இவர் லெனின் அமைதிப் பரிசைப் பெற்றுள்ளார். வியட்நாம் போரில் அமெரிக்காவின் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்காக பெர்ட்ரண்டு ரசல் உருவாக்கிய ரசல் தீர்ப்பாயத்தில் பணியாற்றினார். 1968 இல் சுல்பிக்கார் அலி பூட்டோ சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து இவர் அவருடன் நெருங்கிய தொடர்பை வளர்த்துக் கொண்டார்; இது தேசிய அவாமி கட்சி மீதான இவரது விரக்திக்கு கூடுதலாக இவர் கட்சியை விட்டு வெளியேற வழிவகுத்தது.[1]
1970 இல், இவர் பாக்கித்தான் மக்கள் கட்சியில் சேர்ந்து கட்சியின் அதன் நிறுவனர் சுல்பிக்கார் அலி பூட்டோ வெற்றி பெற்ற தொகுதி ஒன்றில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1973 இல் பாக்கித்தான் அரசியலமைப்பை உருவாக்குவதில் இவர் முக்கிய பங்கு வகித்தார்.[2][3] அரசாங்கம் எதிர்க்கட்சிகளை குறிவைத்து நடத்திவரும் நடவடிக்கைகளால் ஏமாற்றமடைந்த இவர் பாக்கித்தான் மக்கள் கட்சியிலிருந்து வெளியேறினார். தேசிய அவாமி கட்சியில் இருந்த தனது முன்னாள் தோழர்கள் தேசத்துரோக குற்றத்திற்காக அரசாங்கத்தால் சிறையில் அடைக்கப்பட்டபோது அவர்களையும் இவர் பாதுகாத்தார். கட்சியை விட்டு வெளியேறிய பிறகு, இவர் 1973 இல் எதிர்கட்சித் தலைவர் அஸ்கர் கானின் தெஹ்ரிக்-இ-இஸ்திக்லால் கட்சியில் சேர்ந்தார். 1987 இல் தான் இறக்கும் வரை அந்தக் கட்சியுடன் தொடர்ந்து பயணித்தார்.