முகம்மது கரம் ஷா அல்-அசாரி (1 ஜூலை 1918 – 7 ஏப்ரல் 1998) இவர் பாக்கித்தானிலிருந்த பரேல்வி இயக்கத்துடன் தொடர்புடைய ஒரு சிறந்த இஸ்லாமிய அறிஞர் ஆவார். இவர் சிஷ்டியா சூபி ஒழுங்கோடு தொடர்புடையவர் என்றும் கூறப்படுகிறது. [1] [2]
முகம்மது கரம் ஷா 1918 ஜூலை 1 ஆம் தேதி பிரித்தானிய இந்தியாவின் சர்கோதா மாவட்டத்தில் உள்ள பெரா என்ற இடத்தில் பிறந்தார். [1] இவர் தனது அடிப்படைக் கல்வியை 1936 இல் தனது சொந்த ஊரான பெராவில் முடித்தார். பின்னர் அவர் பாரசீக மற்றும் அரபு மொழிகளைக் கற்றுக்கொண்டார். பின்னர் குவாஜா கமர் உல் தின் சியால்வியின் (1906 – 1981) ஆலோசனையின் பேரில், 1942 இல் ஹதீஸைப் படிப்பதற்காக முராதாபாத் சென்றார். இவர் 1945 இல் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பின்னர் அல்-அசார் பல்கலைக்கழகத்தில் உயர் மதக் கல்விக்காக எகிப்துக்குச் சென்றார்.அங்கு இஸ்லாமிய சட்டத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
முகம்மது கரம் ஷா அல்-அசாரி 1995 ஆம் ஆண்டு தீர்க்கதரிசி முகம்மது நபியின் உருது சுயசரிதை " ஜியா அன் நபி " என்ற புத்தகத்தின் ஆசிரியராக இருப்பதால் நன்கு அறியப்பட்டவர் மற்றும் குறிப்பிடத்தக்கவர் ஆவார். [1] [3] அந்தப் புத்தகத்தில் 7 தொகுதிகள் உள்ளன. பின்னர், இது முகம்மது கயூம் அவான் எழுதிய 7 தொகுதிகளைக் கொண்ட ஆங்கில மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. [4] குர்ஆனின் உருது விளக்கமான தப்சீர் ஜியா உல் குர்ஆனை 5 தொகுதிகளில் எழுதியதற்காகவும் இவர் அங்கீகரிக்கப்படுகிறார். [5] [6] [7]
பெராவில் தனது தந்தையால் நிறுவப்பட்ட தார் அல் உலும் முஹம்மதியா கௌசியா என்ற இஸ்லாமிய நிறுவனத்தை மறுசீரமைத்து, மதக் கல்வியின் பாடத்திட்டத்தில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்தார். மதக் கல்வியுடன் நவீன கல்வியும் கற்கப்பட வேண்டும் என்று இவர் கருதினார். [1]
முகம்மது கரம் ஷா அல்-அசாரி பாக்கித்தான் இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்றவர் மற்றும் அகில இந்திய முஸ்லீம் லீக்கிற்காக 1946 ஆம் ஆண்டு இந்திய மாகாணத் தேர்தல்களில் தீவிரமாக பிரச்சாரம் செய்துள்ளார். [1]
முகம்மது கரம் ஷா அல்-அசாரி 1998 இல் இறக்கும் வரை பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். தன் ஷரியாத் அமர்வுகளில் பணியாற்றினார். [1] தேசிய ஷரியத் நீதிமன்றம் 1981 ஆம் ஆண்டில் முதன்முதலில் நிறுவப்பட்டபோது இவர் அதில் ஒரு நீதிபதியாக ஆனார். [8]
இவர் எழுதிய தப்சீர் ஜியா உல் குர்ஆன் என்ற நூல் 1995 இல் ஐந்து தொகுதிகளில் வெளிவந்துள்ளது. [9] ஜியா அன் நாபி என்ற புத்தகம் 1995இல் முஹம்மது நபியின் விரிவான சுயசரிதையாக ஏழு தொகுதிகளில் வெளிவந்துள்ளது. [1]
பாக்கித்தான் அரசாங்கத்தால் சீதாரா-இ-இம்தியாஸ் (சிறந்த நட்சத்திரம்) என்ற கௌரவம் இவருக்கு வழங்கப்படது. மேலும், பாக்கித்தான் அஞ்சல் துறை தனது 'கடிதங்களில் சிறந்தவர்' என்ற முத்திரைத் தொடரில் 2004 இல் ஒரு நினைவு அஞ்சல் தலை வெளியிட்டு இவரை கௌரவித்தது. [10]
முகம்மது கரம் ஷா அல்-அசாரி கிட்டத்தட்ட ஒரு வருடம் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இருந்து பின்னர் 1998 ஏப்ரல் 7, அன்று இறந்தார். [1]