நீதிபதி முகுல் முத்கல் (Mukul Mudgal) தில்லி உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற இந்திய நீதிபதியாவார். 2009 முதல் 2011 வரை பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் இருந்தார். [1] [2] தற்போது இவர் சர்வதேச கால்பந்து சங்கத்தின் கூட்டமைப்பின் நிர்வாகக் குழுவிலும், மறுஆய்வுக் குழுவிலும் தலைவராக உள்ளார். [3]
குவாலியர் கரானாவைச் சேர்ந்த புகழ்பெற்ற இந்துஸ்தானி இசைக்கலைஞர் பேராசிரியர் வினய் சந்திர முத்கலுக்கு இவர் புதுதில்லியில் பிறந்தார். [4] இவரது தந்தை 1939 ஆம் ஆண்டில் புது தில்லியின் கந்தர்வ மகாவித்யாலயாவை புது தில்லி கன்னாட்டு பிளேசில் தொடங்கினார். சிறந்த கல்வித் திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்ற விஜயா முலே எழுதிய ஏக் அனெக் அவுர் ஏக்தா என்ற இயங்குபடத்தில் ஹிந்த் தேஷ் கே நிவாசி பாடலின் வரிகளுக்கு பேராசிரியர் வினய் சந்திர முத்கல் இன்றும் நினைவுகூரப்படுகிறார். [5] புது தில்லியில் மாடர்ன் பள்ளியிலிருந்து பள்ளிப் படிப்பை முடித்த முகுல் முத்கல் இளங்கலை அறிவியலை தில்லி பல்கலைக்கழகத்திலும், பின்னர் சட்டப்பட்டத்தை முடித்தார். [1] 1973ஆம் ஆண்டில் இந்திய உச்ச நீதிமன்றத்திலும் தில்லி உயர் நீதிமன்றத்திலும் வழக்கறிஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் முனைவர் ஒய். எஸ். சிட்டாலேவின் (மூத்த வழக்குறைஞர்) கீழ் பல ஆண்டுகளாக பணியாற்றினார். மேலும் பல முக்கிய வழக்குகளில் வழக்காடினார். இவர் மார்ச் 2, 1998 அன்று தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு, 2009 திசம்பர் 5ஆம் தேதி பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகி, சனவரி 3, 2011 அன்று ஓய்வு பெற்றார்.
2014ஆம் ஆண்டில், இவர் 2013இல் நடந்த இந்தியன் பிரீமியர் லீக் பந்தயங்களில் நடந்த ஊழல் பற்றி விசாரிக்கும் முத்கல் ஆணையத்தின் தலைவராக இருந்தார். இதில் இந்திய கூடுதல் தலைமை வழக்கறிஞர் எல்.நாகேஸ்வர ராவும், மூத்த வழக்கறிஞரும் முன்னாள் துடுப்பாட்ட நடுவருமான நிலே தத்தா ஆகியோரும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக ஒரு விசாரணையை நடத்த இந்திய உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டனர் . [6] [7]
இவரது சகோதரி மாதவி முத்கல் இந்திய ஒடிசி நடனக் கலைஞராகவும், சகோதரர் மதுப் முட்கல், இந்துஸ்தானி இசை பாடகராகவும் புகழ்பெற்றவர்கள். இவர், தனது தந்தையின் சீடரும், பாடகருமான சுபா முத்கலை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இவர்கள் பிரிந்தனர். [4] வரது மகன் தவால் தில்லியைச் சேர்ந்த "ஹாஃப் ஸ்டெப் டவுன்" என்ற பிரபல இசைக்குழுவை நடத்தி வருகிறார். [8] மேலும்,சிறந்த போக்கர் வீராகவும் அறியப்படுகிறார். [9]