முச்சுருளி என்பது, ஐரிய பெருங்கற்கால, புதியகற்காலக் களங்களில் காணப்படும் செல்ட்டிய, முன்செல்ட்டியக் குறியீடுகள் ஆகும். குறிப்பாக இக் குறியீடுகள், நியூகிராங்கே நடைவழிக் கல்லறையின் வாயில் தூண்களிலும், மண்மேட்டைச் சுற்றியுள்ள வரம்புக்கற்களிலும் பொறிக்கப்பட்டு உள்ளன. செல்ட்டிய, முன்செல்ட்டிய நம்பிக்கைகள் சார்ந்த குறியீடுகள் எனப் பலர் கருதும் இம்முச்சுருளிகள், அப் பண்பாடுகளைச் சேர்ந்த கலைப்பொருட்கள் பலவற்றில் பல்வேறு வடிவங்களில் காணப்படுகின்றன. இவற்றுக்கான மிகவும் பழைய எடுத்துக்காட்டுகள் முன்செல்ட்டியக் கல்லாலான நினைவுச் சின்னங்களில் உள்ளன. பிந்திய எடுத்துக்காட்டுகள் செல்ட்டியக் கிறித்தவம் சார்ந்த அலங்கார எழுத்துக்களைக் கொண்ட சுவடிகளில் காணப்படுகின்றன.
நியூகிராங்கேயையும், பிற நினைவுச் சின்னங்களையும் உருவாக்கியவர்களின் பண்பாட்டில், இம்முச்சுருளிகள் என்ன பொருள் குறித்தன என்பது தெளிவாகத் தெரியவில்லை. அண்மைக்கால வரலாற்றில், செல்ட்டியக் கிறித்தவர்கள், கிறித்தவ மும்மையைக் குறிக்க இக் குறியீட்டைப் பயன்படுத்தினர். புதுப்பலகடவுட்கொள்கைச் சமயங்கள் இக் குறியீட்டைத் தமது நம்பிக்கைகளில் காணப்படும் பல்வேறு மும்மைத் தன்மைகளைக் குறிக்கப் பயன்படுத்துகின்றனர். செல்ட்டிய மீளமைப்புப் பல்கடவுட்கொள்கையில் முச்சுருளி ஒரு முக்கியமான குறியீடு ஆகும். அவர்கள் இதை நிலம், கடல், விண் என்னும் முப்புலங்களை அல்லது மும்மைத் தன்மை கொண்ட ஒரு கடவுளைக் குறிக்கப் பயன்படுத்தினர்.[1] அவர்களின் மனான்னான் என்னும் கடவுளைக் குறிக்கவே இக் குறியீடு பெரும்பாலும் பயன்பட்டது ஆயினும், சில வேளைகளில் இது பிரிகிட் என்னும் பெண் கடவுளையும் குறித்தது.
இக்குறியீடு மனிதரின் கருப்பக் காலமான ஒன்பது மாதங்களைக் குறித்தது என்ற கருத்தும் உண்டு.