முண்டகக்கண்ணியம்மன் கோயில் இந்தியாவின் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் மயிலாப்பூரில் உள்ள அம்மன் கோயிலாகும்.
லஸ்சில் இருந்து சாந்தோம் செல்லும் சாலையில் இடதுபுறத்தில் பெரிய வளைவு காணப்படும். அந்த வழியில் சென்று கோயிலை அடையலாம்.[1]
இக்கோயில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. மூன்று நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் உள்ளது. கோயிலின் உள்ளே அரச மரங்கள் உள்ளன. அதன்கீழ் விநாயகரும், நாகர்களும் உள்ளனர்.[1] அம்மன் சன்னதிக்குப் பின்புறத்தில் விழுதுகள் இல்லாத அபூர்வ கல்லால மரமும் புற்றுடன்கூடிய மூன்றடி கல்நாகமும் உள்ளது. கல்லால மரத்தைத் தல மரமாக வணங்குகின்றனர்.[2]
மூலவராக முண்டகக்கண்ணியம்மன் உள்ளார். தாமரை மொட்டு வடிவத்தில் தன்னை அம்மன் சுயம்புவாக வெளிப்படுத்திக் கொண்டதாலும் தாமரை என்ற தமிழ்ச் சொல்லுக்குரிய முண்டகம் என்பதை கொண்டு தொடங்க அம்மனை சேர்த்து முண்டகக்கண்ணி அம்மன் என்ற பெயர் அமைந்ததாகக் கூறுவர். வேப்பிலை பாவாடை உடுத்தி, வெள்ளி கைபொருத்தி, சந்தன காப்பு அலங்காரத்தில் அம்மன் பொதுவாகக் காணப்படுவார்.[1] ரேணுகாதேவியின் அவதாரங்களுள் ஒன்றாகவும், சப்த கன்னிகைகளில் ஒருவராகவும் இவர் கருதப்படுகிறார்.[2]