முண்தும் (Mundhum) என்பது லிம்பு மக்களின் பண்டைய மத நூல் மற்றும் நாட்டுப்புற இலக்கியம் ஆகும். [1] இது, பேலான் என்றும் அழைக்கப்படுகிறது. இது நேபாளத்தின் பழமையான, பூர்வீக மதமாகும். முண்தும் என்றால் லிம்பு மொழியில் "பெரிய வலிமையின் சக்தி" என்று பொருள் படுகிறது. [2] இந்தியத் துணைக்கண்டத்தில் வேத நாகரிகத்தின் எழுச்சிக்கு முன்பிருந்து பின்பற்றப்பட்ட யாக்துங் (லிம்பு) கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளின் பல அம்சங்களை முண்தும் உள்ளடக்கியது எனப்படுகிறது. [3]
முண்தும் 'தூங்காப்' மற்றும் 'பேய்சப்' என இரண்டு பகுதிகளாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. [4] இந்த நூல் மதத்திற்கு அப்பாற்பட்டது எனக் கருதப்படுகிறது. கலாச்சாரம், சடங்கு மற்றும் சமூக விழுமியங்களுக்கு வழிகாட்டியாக செயல்படுகிறது. இது, பண்டைய லிம்பு மொழியில் எழுதப்பட்டுள்ளது. பல்வேறு லிம்பு பழங்குடியினரிடையே இவற்றின் பதிப்புகள் வேறுபடுகின்றன, ஒவ்வொரு பழங்குடியினரின் தனித்துவமான கலாச்சாரமாகவும் மற்ற பழங்குடியினர் மற்றும் மக்களுடன் தொடர்புடைய அவர்களின் சமூக அடையாளத்தையும் ஒற்றுமையையும் இந்த நூல் உருவாக்குகிறது. [5]
தூங்காப் முண்தும் என்பது, வழிவழியாக சேகரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, எழுத்துக் கலை அறிமுகப்படுத்தப்படும் வரை வாய்மொழி மற்றும் நாட்டுப்புறக் கதைகள் மூலம் அனுப்பப்பட்டது. [6] இது சம்பாஸ், சமயக் கவிஞர்கள் மற்றும் பட்டிமன்றம் ஆகியோரால் பாடல் வடிவில் இயற்றப்பட்டு வாசிக்கப்பட்ட காவியம் ஆகும். தொடக்கத்தில் கிராத சமூக புரோகிதர்கள் சம்பாஸ் என்று அழைக்கப்பட்டனர், அங்கு சாம் என்றால் பாடல் மற்றும் பா என்றால் அறிந்தவர் (ஆண்) என்று பொருள் படும்.
பேய்சப் முண்தும் என்பது மதத்தைப் பற்றி எழுதப்பட்ட புத்தகம் ஆகும். இது நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை, சோக்சோக் முண்தும், யேஹாங் முண்தும், சம்ஜிக் முண்தும் மற்றும் சாப் முண்தும் ஆகும். இதில், பிரபஞ்சத்தின் உருவாக்கம், மனிதகுலத்தின் ஆரம்பம், பாவத்தின் காரணம் மற்றும் விளைவு, பொறாமை, பொறாமை மற்றும் கோபம் போன்ற தீய ஆவிகளின் உருவாக்கம் மற்றும் குழந்தை பருவத்தில் மரணத்தின் காரணம் மற்றும் விளைவு போன்ற கருத்துகளை விளக்கும் சோக்சோக் முண்தும் கதைகளைக் கொண்டுள்ளது.