முதலாம் சேனன், 9 ஆம் நூற்றாண்டில் அனுராதபுரத்தில் இருந்து இலங்கையை ஆண்ட மன்னர்களில் ஒருவர். இவன் இதற்கு முன் ஆட்சியில் இருந்த ஒன்பதாம் அக்கபோதியின் சகோதரன் ஆவான். அக்கபோதி இறந்த பின்னர் கி.பி. 846 இல் அரியணை ஏறிய முதலாம் சேனன் கி. பி. 853 வரை ஆட்சியில் இருந்தான்.
இவன் தனது முன்னோர்களுடைய வழக்கங்களைப் பின்பற்றியும், புதிய நல்ல வழக்கங்களைக் கைக்கொண்டும் நாட்டைச் செவ்வனே ஆண்டுவந்ததாகத் தெரிகிறது. ஆனால், அரியணைக்குப் போட்டியாக இருந்த ஒன்று விட்ட சகோதரனான மகிந்தன் என்பவன் இந்தியாவுக்குச் சென்றிருந்தபோது அவனைக் கொலை செய்வித்து தனக்கு போட்டி இல்லாமல் ஆக்கினான்.[1] இவனுக்கு மகிந்தன், கசபன், உதயன் என மூன்று உடன்பிறந்தோர் இருந்தனர். மகிந்தன் துணை அரசானாகப் பணியாற்றி வந்தான். இவனது ஆட்சிக் காலத்தில் உள்நாட்டில் குழப்பம் உருவாகியது. இதனால், வெளிநாட்டில் இருந்தும் பயமுறுத்தல்கள் இருந்துவந்தன.
இவன் காலத்தில் பாண்டியன் சிறீமாற சிறீவல்லபன் இலங்கை மீது படையெடுத்தான். தனது படைகள் தோல்வியுறுவதைக் கேள்வியுற்ற சேனன் எடுக்கக்கூடிய செல்வங்களையும் எடுத்துக்கொண்டு மலைநாட்டுக்குத் தப்பி ஓடினான். பாண்டியப் படைகளை எதிர்க்கச் சென்ற சேனனின் உடன்பிறந்தானும், துணை அரசனுமான மகிந்தன், சிங்களப் படைகள் பின்வாங்கி ஓடிவிட்டதைக் கண்டு எதிரியிடம் பிடிபட விரும்பாமல் தனது கழுத்தை தானே வாளால் வெட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டான்.[2] இன்னொரு சகோதரன் கசபன் போரில் கொல்லப்பட்டான். அனுராதபுரத்தைக் கைப்பற்றிய பாண்டியனுடன் முதலாம் சேனன் உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொண்டு தொடர்ந்து நாட்டை ஆண்டான். நாட்டின் வடபகுதி பாண்டியர் வசமானது.
போர்த் தோல்வியால் இழந்த புகழை மீள்விக்கும் எண்ணம் ஈடேறாமலேயே முதலாம் சேனன் 853 இல் பொலநறுவையில் காலமானான்.[3]