'இலாங்குலா' முதலாம் நரசிங்க தேவன் | |
---|---|
யவனபானிவல்லபன், அம்மிராமமர்தனன், கஜபதி, பரமமகேசுவரன், துர்கைபுத்திரன், புருசோத்தமபுத்ரன் | |
கொனார்க் இடிபாடுகளில் காணப்படும் உடைந்த கல் பலகை முதலாம் நரசிங்க தேவனின் வில்வித்தையை சித்தரிக்கிறது. | |
ஆட்சிக்காலம் | பொ.ச.1238-1264 |
பின்னையவர் | முதலாம் புவன தேவன் |
துணைவர் | மால்வாவின் பரமாரஇளவரசி சீதா தேவி, சோட தேவி (சோழ இளவரசி), மேலும் பலர். |
மரபு | கீழைக் கங்கர் |
தந்தை | 'இரௌத்தா' மூன்றாம் அனங்கபீமதேவன் |
தாய் | கஸ்தூரி தேவி |
மதம் | இந்து |
'இலாங்குலா' முதலாம் நரசிங்க தேவன் ( Langula' Narasingha Deva I ) என்பவர் பொ.ச.1238-1264 வரை இடைக்காலத்தின் ஆரம்பகால ஒடிசாவை ஆட்சி செய்த கீழைக் கங்க வம்சத்தின் சக்திவாய்ந்த மன்னரும், போர்வீரரும் ஆவார்.[1] தனது தந்தையான மூன்றாம் அனங்கபீமதேவனின் காலத்தில் கலிங்க இராச்சியத்தின் மீது தொடர்ந்து அச்சுறுத்தி வந்த வங்காள முஸ்லிம்களைத் தோற்கடித்தார். துருக்கிய-ஆப்கானிய படையெடுப்பாளர்களால் இந்தியா மீது இஸ்லாமிய விரிவாக்கத்திற்கு எதிராக தாக்குதலை நடத்திய கலிங்கத்தின் முதல் மன்னரும், இந்தியாவில் இருந்த சில ஆட்சியாளர்களில் ஒருவரும் ஆவார். இவரது தந்தை வங்காளத்தின் துருக்கிய-ஆப்கானிய ஆட்சியாளர்களுக்கு எதிராக தனது இராச்சியத்தை வெற்றிகரமாக பாதுகாத்தார். மேலும், வங்காளத்தில் உள்ள இரார், கௌடா, வரேந்திரா ஆகிய இடங்களுக்கு அப்பால் அவர்களைத் துரத்தினார். முஸ்லிம்களுக்கு எதிராக தான் பெற்ற வெற்றிகளின் நினைவாக இவர் கொனார்க் சூரியக் கோயிலைக் [2] கட்டினார். கோவில்களைத் தவிர பாலேசுவரில் ராய்பணியா கோட்டையை கிழக்கிந்தியாவின் மிகப்பெரிய கட்டடக்கலை அற்புதக் கோட்டையாக எழுப்பினார்.[3] இவரது பேரன் இரண்டாம் நரசிங்க தேவனின் கெந்துபதான தகடுகள், முதலாம் நரசிங்க தேவனின் இராணியான சீதாதேவி மால்வாவின் பரமார மன்னனின் மகள் என்று குறிப்பிடுகிறது.
நரசிங்க தேவன், ஒடிசாவில் கஜபதி ( யானைகளின் இறைவன் ) என்ற பட்டத்தைப் பயன்படுத்திய முதல் மன்னனாவார். இது திரிகலிங்கத்தை ஆண்ட மன்னர்களின் ஏகாதிபத்திய பட்டமாக மாறியது. அதன் பின்னர் ஒட்டர தேசத்தின் பகுதியாக வெளிப்பட்டது. இந்த தலைப்பு முதன்முதலில் பொ.ச.1246 தேதியிட்ட கபிலாசர் கோவிலில் உள்ள கல்வெட்டில் பயன்படுத்தப்பட்டது. [4] [5]
சந்திரசேகர கோவில் கல்வெட்டில் பரம மகேசுவரர், துர்கை-புத்திரர், புருசோத்தம புத்திரர் என்றெல்லாம் முதலாம் நரசிங்க தேவன் குறிப்பிடப்பட்டுள்ளார். தனது ஆட்சியின் போது சைவம், சாக்தம், ஜெகனாதர் பிரிவினரின் பாதுகாவலராகவும், அதை பின்பற்றியவராகவும் இருந்ததை தலைப்புகள் காட்டுகின்றன. இவர் கட்டிய கோனார்க் சூரியன் கோவிலில் காணப்படும் ஒரு சிற்பம், இவர் மூன்று முக்கிய தெய்வங்களுக்கு முன்னால் வணங்குவதைக் காட்டுகிறது. இலிங்கராஜ் கோவில் கல்வெட்டுகள், அங்கு முஸ்லிம் படைகளின் ஊடுருவலுக்குப் பிறகு ராதா மற்றும் கௌடவிலிருந்து தப்பி ஓடிய அகதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதற்காக சதாசிவ மடம் என்று அழைக்கப்படும் மடத்தைக் கட்டியதாகக் கூறுகிறது. சிறீகூர்மம் கோவில் கல்வெட்டு, எந்த ஒரு கெட்ட குணமும், தொந்தரவும் இல்லாத நிதானமானவர் எனக் கூறுகிறது. இவர் மதிப்புமிக்கப் பொருட்களை வைத்திருந்தார். கலை, கட்டிடக்கலை மற்றும் மதம் ஆகியவற்றை கற்றறிந்தார். [6]
இவர் நீதி சாத்திரத்தை (சட்ட புத்தகம்) பின்பற்றும் போது மரீசி மற்றும் பராசர மரபுகளின்படி அரசை நிர்வகித்தார். நம்பிக்கை மற்றும் ஆன்மீகத்தின் மீது தனக்கு இருந்த ஈடுபாட்டின் காரணமாக, கோனார்க், கபிலாசர், கிராச்சோர கோபிநாதர், சிறீ கூர்மத்தில் கூர்மநாதர் கோவில், சிம்மாச்சலத்தில் உள்ள வராக லட்சுமி நரசிம்மர் கோயில், இவரது விதவை சகோதரி சந்திரிகாவின் ஆதரவால் கட்டப்பட்ட அனந்த வாசுதேவர் கோயில் போன்ற பல கோயில்களுக்கான கட்டுமானப் பணிகளை இவர் ஆணையிட்டு முடித்தார். சமசுகிருதம் மற்றும் ஒடியா இரண்டும் இவரது ஆட்சியின் போது அரசவை மொழிகளாக ஆதரிக்கப்பட்டன. மேலும் வித்தியதரரின் 'ஏகாவலி' போன்ற தலைசிறந்த சமசுகிருத படைப்புகள் இந்த காலத்தில் எழுதப்பட்டன. இவரால் கட்டப்பட்ட கபிலாசர் கோவிலில் உள்ள கல்வெட்டு, நிச்சயமற்ற கடலில் இருந்து வேதங்களையும் உலகையும் காப்பாற்றி எழுப்பிய விஷ்ணுவின் வராக அவதாரத்துடன் ஒப்பிடுகிறது. ஒடிய அரசர்களில் 'கஜபதி' அல்லது 'போர் யானைகளின் ஆண்டவன்' என்ற பட்டத்தை பயன்படுத்திய முதல் மன்னர் இவரே. [7]
முதலாம் நரசிங்க தேவனால் கட்டப்பட்ட கோனார்க் சூரியன் கோயிலின் கட்டுமானம் குறித்து ஒரு பிரபலமான ஒடியா புராணக்கதை இன்றுவரை உள்ளது. புராணத்தின் படி, பிக்சு மகாரானா என்ற முன்னணி சிற்பியின் தலைமையில் 1200 கொத்தனார்கள் பணிகளை செய்தனர். பன்னிரெண்டு வருடங்கள் பிரார்த்தனை செய்துவிட்டு அதே இடத்தில் சூரியனின் வரத்தால் தொழுநோயிலிருந்து குணமடைந்த சாம்பனின் புராணக்கதைக்கு ஒத்த பன்னிரண்டு ஏக்கர் நிலத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்குள் திட்டத்தை முடிக்க வேண்டும் எனத் திட்டமிட்டனர். தாமதம் காரணமாக, பன்னிரண்டாம் ஆண்டு முடிவதற்குள், கோபுரத்தின் மேல் பகுதி கிட்டத்தட்ட முடிக்கப்பட்ட நிலையில் கலசம் பொருந்தாததால், திட்டம் முடிக்கப்படவில்லை. தாமதம் மற்றும் கொத்தனார்களின் திறமை மீது சந்தேகம் கொண்ட அரசன், அடுத்த நாள் காலைக்குள் பணியை முடிக்க உத்தரவிட்டார். இல்லையெனில் அவர்கள் அனைவரின் தலைகளும் துண்டிக்கப்படும் என்றும் அறிவித்தார். அன்றைய தினமே பிக்சு மகாரானாவின் பன்னிரண்டு வயது மகன் தர்மபாதன் தான் பிறந்தது முதல் பார்த்திராத தன் தந்தையைச் சந்திக்க வந்தான். எடை காரணமாகக் கோவிலின் உச்சியில் கலசத்தை வைக்க முடியாமல், கொத்தனார்கள் மிகவும் அஞ்சினார்கள். சிறு குழந்தை எப்படியோ இந்தப் பணியைச் செய்து, கலசத்தை கோவிலின் உச்சியில் வைத்து அந்த பணியை முடித்தது. கொடுக்கப்பட்ட பணியை முடிக்க கொத்தனார்களுக்கு உத்தரவுகள் மிகவும் கடுமையாக இருந்ததால், ஒரு குழந்தை பணியை முடிக்கும் செய்தி அவர்களின் மரணத்தை உறுதி செய்திருக்கும். நிலைமையை உணர்ந்த தர்மபாதர், பக்கத்து கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். பன்னிரெண்டு வயது இளைஞன் செய்த இந்த தியாகம், அவனது தந்தையையும் மற்ற அனைத்து கொத்தனார்களையும் காப்பாற்றியது. முதலாம் நரசிங்க தேவன், தனது கடுமையான கட்டளையை நீக்கி அவர்களின் உயிரைக் காப்பாற்றினார். [8]</br>
கிழக்கு இந்தியாவில் அரசியல் பின்னடைவுக்கான முக்கியமான கட்டத்தில் 'இலாங்குலா' நரசிங்க தேவன் ஆட்சிக்கு வந்தார். இவர் தனது தந்தையின் இராணுவ சாதனைகளைப் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. மேலும், தனது சகாப்தத்தின் தனித்துவமான மன்னரானார். கிழக்கு இந்தியாவின் மீது பண்டைய ஒடிசாவின் இராணுவ வலிமையை மீட்டமைத்தார். மத்திய இந்தியா மற்றும் கிழக்குக் கடற்கரையின் பகுதிகளை ஆக்கிரமிக்கும் வெளிநாட்டு துருக்கியப் படைகளிடமிருந்து பாதுகாத்தார். பொ.ச. 1192ல் நடந்த முதலாம் தாரைன் போரில் தில்லியின் ஆட்சியாளர் பிரித்திவிராசு சௌகானின் வீழ்ச்சிக்குப் பிறகு, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து சுதந்திரமான வம்ச ஆட்சியாளர்களும் அலட்சியமாக இருந்தனர். இவரது ஆக்ரோஷமான இராணுவக் கொள்கைகள் மற்றும் மூலோபாய முடிவுகளின் காரணமாக, கங்கர்கள் சக்திவாய்ந்த இராணுவப் பிரசன்னத்துடன் முழுமையான சுதந்திர அரசை நிறுவ முடிந்தது. அடுத்த இரண்டரை நூற்றாண்டுகள் வரை, பண்டைய ஒடிசா அல்லது கலிங்கத்தின் எல்லைகளை அச்சுறுத்துவதில் முஸ்லிம் படைகள் வெற்றிபெற முடியவில்லை. இந்த நீண்ட கால அமைதி, நிலை மற்றும் இராணுவ வலிமையின் இருப்பு காரணமாக; மதம், வணிகம், இலக்கியம் மற்றும் கலை ஆகியவை செழித்து புதிய உயரங்களை அடைந்தன. ஜெகநாதரை வழிபடும் பாரம்பரியம் ஒவ்வொரு ஒடியா வீட்டிலும் உள்வாங்கப்பட்டது.
இந்த சகாப்தத்தில் பல அற்புதமான கோவில்கள் கட்டப்பட்டன. கீழைக் கங்க ஆட்சியாளர்களில் 'இலாங்குலா' நரசிங்க தேவன் மிகவும் குறிப்பிடத்தக்க ஆரம்ப ஆட்சியாளர்களில் ஒருவராக இருந்தார். சமசுகிருத கவிஞரான வித்யாதரர் தனது 'ஏகாவலி' என்ற படைப்பில் இவரை ஒரு சிறந்த நாயகனாகக் கருதுகிறார். காத்யாயனியின் பக்தன் என்று வர்ணிப்பதன் மூலம் 'இலாங்குலா' சக்தி தேவியின் பக்தராகப் போற்றப்படுகிறார். கீழைக் கங்கர்களின் செப்புத் தகடு மானியங்கள் இவரை பவானியின் மகனாகக் கருதுகின்றன.[9] அந்த நேரத்தில் ஒடிசாவின் மூன்று முக்கிய தெய்வங்களான புருசோத்தம ஜெகனாதர், இலிங்கராஜா சிவன், விரஜா துர்க்கை ஆகியோரை இணைத்து தனது தந்தையைப் போலவே இவர் மூவரின் வழிபாட்டைத் தொடர்ந்தார். கோனார்க் மற்றும் ஜெகனாதர் கோயிலில் காணப்படும் பல சிற்பங்கள் மூன்று பிரிவுகளின் ஒருங்கிணைந்த வழிபாட்டைச் சித்தரிக்கிறது. [10]</br>