முதலாம் பிரவரசேனன் | |
---|---|
சாம்ராட் | |
ஆட்சிக்காலம் | சுமார் 275 - 335 பொ.ச. |
முன்னையவர் | விந்தியசக்தி |
பின்னையவர் | |
குழந்தைகளின் பெயர்கள் |
|
மரபு | வாகாடகப் பேரரசு |
முதலாம் பிரவரசேனன் (Pravarasena I ஆட்சிக் காலம் சுமார் 275 – 335 பொ.ச. [1] ) வாகாடக வம்சத்தை நிறுவிய விந்தியசக்தியின் வாரிசு ஆவார். இவர், 'பேரரசர்' அல்லது 'உலகளாவிய ஆட்சியாளர்' என்று பொருள்படும் "சம்ராட்" என்று அழைக்கப்பட்ட முதல் மற்றும் ஒரே வாகாடக ஆட்சியாளராக இருந்தார். [2] [3] பிரவரசேனனின் மரணத்திற்குப் பிறகும் ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகளுக்கு இவர்கள் தொடர்ந்து ஆட்சி செய்து மத்திய இந்தியா மற்றும் தக்காணத்தில் வாகாடகர்கள் தங்களை ஒரு பெரிய சக்தியாக நிறுவிக் கொண்டனர்.
பிரவரசேனனின் ஆட்சிக்காலத்தைப் பற்றிய எந்தக் கல்வெட்டும் அல்லது பதிவேடும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. [4] இவரது ஆட்சி மற்றும் சாதனைகள் பற்றிய கிடைத்திருக்கக்கூடிய தகவல்கள், வகாடக வம்சத்தின் பிற்கால பதிவுகளிலிருந்தும் புராண இலக்கியங்களிலும் மட்டுமே கிடைத்துள்ளது. புராணங்கள் ஒருமனதாக பிரவரசேனனுக்கு (அல்லது "பிரவீர", என புராண நூல்களில் இவர் அழைக்கப்படுகிறார்) 60 ஆண்டுகள் நீண்ட ஆட்சியை வழங்குகின்றன. பிரவரசேனன் முதுமை வரை வாழ்ந்தார் என்பதற்கு, இவருடைய பேரரசின் வாரிசுகளில் பிரவரசேனனின் பேரனும் இருந்தான். [5]
பிரவரசேனனின் இராணுவ வெற்றிகளைப் பற்றிய விவரங்கள் தெரியவில்லை என்றாலும், இவர் நடத்தியதாகக் கூறப்படும் பல வேத யாகங்களில் இருந்து அவற்றின் எண்ணிக்கை மற்றும் முக்கியத்துவத்தை அறியலாம். பிரவரசேனன் தனது ஆட்சியின் போது நான்கு அசுவமேத யாகங்களைச் செய்துள்ளார். ஒவ்வொன்றும் வெற்றிகரமான ஒரு போரின் முடிவைக் குறித்திருக்கலாம். [6] ஒரு மரபுவழி இந்துவாகவும், பிராமண மத பாரம்பரியத்தின் வெற்றியாளராகவும், பிரவரசேனன் பல வேத யாகங்களையும் செய்தார். [7] இவரது தொழில் வாழ்க்கையின் முடிவில், இவர் தக்காணத்தின் மீது மேலாதிக்கத்தை அடைந்த பிறகு, முறையாக 'சாம்ராட்'என்ற பேரரசு பட்டத்தை ஏற்றுக்கொண்டார் .[8]
பிரவரசேனனின் பேரரசின் வடக்கே இந்தியாவின் மத்தியப் பகுதிகளில் வலுவான படையாக இருந்த சக்திவாய்ந்த பத்மாவதி நாக மன்னர்கள் இருந்தனர். பிரவரசேனன் தனது மகன் கௌதமிபுத்திரனை பாவ நாக மன்னனி மகளுக்கு திருமணம் செய்து வைத்தன் மூலம் பத்மாவதி நாக மன்னன் பாவ நாகனுடன் ஒரு முக்கியமான அரசியல் கூட்டணியை உருவாக்கினார். [3] இந்தக் கூட்டணி வாகாடக ஆதிக்கங்களின் வடக்கு எல்லையைப் பாதுகாத்தது. மேலும், தெற்கே விரிவடைய பிரவரசேனனை விடுவித்தது. பத்மாவதி நாகர்களைப் பின்பற்றி பிரவரசேனன் பல அசுவமேத யாகங்களைச் செய்திருக்கலாம். ஏனென்றால் பிந்தையவர் பத்து அசுவமேத யாகங்களைச் செய்ததாகக் கூறப்படுகிறது. [9]
பிரவரசேனனின் தலைநகரம் காஞ்சனகா என்று அழைக்கப்பட்டது. இது மத்தியப் பிரதேசத்தின் பன்னா மாவட்டத்திலுள்ள நச்னாவுடன் அடையாளம் காணப்பட்டது, அங்கு பல ஆரம்பகால வாகாடக கல்வெட்டுகளும் சமகால கட்டமைப்புகளின் எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. [3] இது பிரவரசேனனின் அசல் அதிகாரத் தளம் இன்றைய மத்தியப் பிரதேசத்தின் விந்தியப் பகுதியில் இருந்ததாகக் கூறுகிறது. அதிலிருந்து வாகாடர்கள் தெற்கே மகாராட்டிரா வரை பரவியிருந்தது. அதன் மிகப்பெரிய அளவில், பிரவரசேனனின் பேரரசு நருமதை மற்றும் கிருஷ்ணா நதிகளுக்கு இடையில் தக்காணம் முழுவதையும் உள்ளடக்கியிருந்தது . அதே நேரத்தில் இவரது செல்வாக்கு மண்டலம் மால்வா, குசராத்து, ஆந்திரா மற்றும் தெற்கு கோசலம் வரை பரவியது.[10] பிரவரசேனனுக்கு நான்கு மகன்கள் இருந்தனர். அவர்கள் இவரது பேரரசின் வெவ்வேறு மாகாணங்களுக்கு துணை அரசராக நியமிக்கப்பட்டனர். மேலும் இந்த மாகாணங்கள் பிரவரசேனனின் மரணத்தைத் தொடர்ந்து சுதந்திரமடைந்ததாகத் தெரிகிறது. [11]
பிரவரசேனனின் மூத்த மகன் இளவரசர் கௌதமிபுத்திரனின் மகன் உருத்ரசேனன் பிரவரசேனனின் மரணத்திற்குப் பிறகு ஆட்சிக்கு வந்தார். உருத்ரசேனனும் அவரது சந்ததியினரும் வடக்கு பெரார் ( விதர்பா ) மற்றும் மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகளை ஆளும் வாகாடகா வம்சத்தின் "முக்கிய" கிளையை உருவாக்கினர். [12] பிரவரசேனனின் மற்றொரு மகன், சர்வசேனன், தெற்கு பெரார் மற்றும் மகாராட்டிராவின் மராத்வாடா பகுதியை ஆண்டதாகத் தெரிகிறது. மேலும் அவரது தந்தையின் மரணத்திற்குப் பிறகு சர்வசேனன் வத்சகுல்மாவில் வகாடகா வம்சத்தின் ஒரு கிளையை நிறுவினார். [13] மற்ற இரண்டு மகன்கள் அமைத்த கிளைகள் பற்றி எதுவும் தெரியவில்லை. [14]
பிரவரசேனன் ஒரு நீடித்த பாரம்பரியத்தை விட்டுச் சென்றார். மேலும், வாகாடக வம்சத்தின் இறுதி அழிவு வரை நினைவுகூரப்பட்டார். வாகாடக ஆட்சியாளர்களின் அனைத்து செப்புத் தகடுகளும் விந்தியசக்திக்குப் பதிலாக பிரவரசேனனுடன் குடும்பப் பரம்பரையைத் தொடங்குகின்றன. [15] பிரவரசேனனின் வாரிசுகள் எவரும் இவரது உயரிய பட்டமான "சாம்ராட்"டை ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக 'மஹாராஜா' என்ற ஒப்பீட்டளவில் அடக்கமான பட்டத்தில் திருப்தி அடைந்தனர். [3] பிரவரசேனனின் தனித்துவமான ஏகாதிபத்தியப் பட்டம், இவரது விரிந்த பேரரசு, மற்றும் எண்ணற்ற வேத யாகங்களைச் செய்ததன் மூலம், சந்ததியினரின் பார்வையில் இவரை ஒரு சிறந்த ஆட்சியாளராகத் தனித்து நிற்கச் செய்தது.