மூன்றாம் சேனன் என்பவன், அனுராதபுரத்தில் இருந்து இலங்கையை ஆண்ட சிங்கள அரசர்களுள் ஒருவன். இரண்டாம் உதயன் காலமான பின்னர் இவன் அரசுரிமை பெற்றான். கி.பி. 938 இல் அரியணை ஏறிய மூன்றாம் சேனன் கி.பி. 948 வரை அரசு புரிந்தான்.
துணை அரசனாக இருந்தபோது சாதுக்களதும், மக்களினதும் கோபத்துக்கு ஆளாகியிருந்த போதிலும், இவன் ஒரு மதிநுட்பம் வாய்ந்த அரசன் என்று மகாவம்சம் கூறுகிறது. இவன் பதவி ஏற்றதும் பல்வேறு அறச்செயல்களில் ஈடுபட்டான். தானும் மத அனுட்டானங்களில் ஈடுபட்டான். மதகுருமாருக்கான உறைவிடங்களைக் கட்டிக் கொடுத்ததுடன், அவர்களுக்கான பிற வசதிகளையும் செய்து கொடுத்தான். இலங்கை முழுவதிலும் இருந்த பழைய விகாரைகளைத் திருத்தினான். முன்னோர்கள் செய்த திருப்பணிகளைப் பேணுவதற்கான ஒழுங்குகளையும் செய்ததுடன், விகாரைகளுக்குப் படிமங்களையும் ஓவியங்களையும் வழங்கினான். புத்த சமய விழாக்களையும் ஒழுங்காக நடத்தினான். பாசனத்துக்கான குளங்களைத் திருத்தி வேளாண்மையை மேம்படுத்த உதவினான்.[1]
தனது ஒன்பதாவது ஆட்சியாண்டில் மூன்றாம் சேனன் இவ்வுலக வாழ்வை நீத்தான். இவனுக்குப் பின் இவனது நண்பனும், துணை அரசனுமான உதயன் அரசனானான்.