ஆள்கூறுகள்: 4°34′N 101°03′E / 4.567°N 101.050°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பேராக் |
உருவாக்கம் | கி.பி.1800 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மெங்லெம்பு (மலாய்:Menglembu, சீனம்:'万里望'), மலேசியா, பேராக், கிந்தா மாவட்டத்தில், கிளேடாங் மலை அடிவாரத்தில் உள்ள ஒரு நகரம். இதற்கு மிக அருகாமையில் ஈப்போ மாநகரம் உள்ளது. இந்த நகரம் ’மெங்லெம்பு கச்சான்’ எனும் நிலக்கடலைக்கு மலேசியாவிலேயே பெயர் பெற்ற நகரமாகும்.[1]
தெற்கில் பூசிங், லகாட், புக்கிட் மேரா (கிந்தா), பாப்பான், பத்து காஜா, போன்ற நகரங்கள் உள்ளன. ஈப்போ மாநகரத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் மெங்லெம்பு நகரம் இருக்கிறது. சீனர்களின் ஆதிக்கத்தில் உள்ள இந்த நகரம் அண்மைய காலங்களில் வளர்ச்சி பெற்று வருகிறது.
மலேசியாவில் வாழும் தமிழர்கள் நிலக்கடலையைக் ‘கச்சான்’ (Kacang) என்று அழைப்பது வழக்கம். ’கச்சாங்’ எனும் மலாய்ச் சொல்லில் இருந்து கச்சான் எனும் சொல் திரிபுநிலை அடைந்து உள்ளது.
கச்சான் எனும் புதிய சொல் ஒரு வழக்குச் சொல்லாகவும் மாறி விட்டது. எழுதும் போது தமிழர்களில் சிலர் மட்டுமே நிலக்கடலை எனும் சொல்லைப் பயன்படுத்துவது உண்டு. பேசும் மொழியில் பெரும்பாலும் கச்சான் எனும் சொல்லே பயன்படுத்தப் படுகிறது.
இந்த மெங்லெம்பு நகரம் நிலக்கடலைக்குப் புகழ் பெற்றது. நிலக்கடலை இங்கு மெங்லெம்பு பகுதிகளில் பயிர் செய்யப்படவில்லை. என்றாலும் பதப்படுத்தும் தொழில் இங்குதான் நடைபெறுகிறது. மெங்லெம்பு தொழில்துறைப் பகுதியில் நிகான் இன் (Ngan Yin) எனும் பெயரில் நிலக்கடலை தொழிற்சாலை உள்ளது. ஏறக்குறைய 400 பேர் வேலை செய்கிறார்கள்.[2]
1980-ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் பேராக் மாநிலத்தைச் சேர்ந்த சுங்கை சிப்புட், தைப்பிங், கோலாகங்சார்; ஜொகூர் மாநிலத்தைச் சேர்ந்த பொந்தியான் போன்ற இடங்களில் நிலக்கடலை பயிர் செய்யப்பட்டது. விவசாயிகள் பலர் அண்மைய காலங்களில் நிலக்கடலை பயிரிடுவதை நிறுத்தி விட்டனர். அவர்களின் விளைநிலங்கள் பெரும்பாலானவை ரப்பர் மற்றும் எண்ணெய்ப் பனைத் தோட்டங்களாக மாற்றப்பட்டன.[3]
இப்போது வியட்நாம், இந்தோனேசியா, சீனா, கம்போடியா போன்ற நாடுகளில் பயிர் செய்யப்படும் பச்சை நிலக்கடலை இறக்குமதி செய்யப் படுகிறது. வியட்நாமில் நிலக்கடலை பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச், ஜூலை, அக்டோபர் மாதங்களில் அறுவடை செய்யப் படுகிறது.
மெங்லெம்பு நகரில் ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. அதன் பெயர் மகிழம்பூ தமிழ்ப் பள்ளி. தொடக்கத்தில் மெங்லெம்பு தமிழ்ப்பள்ளி என்று அழைத்தார்கள். அண்மைய காலங்களில் மகிழம்பூ தமிழ்ப் பள்ளி என்று அனைவரும் அழைக்கிறார்கள். ஊடகங்களும் மகிழம்பூ தமிழ்ப் பள்ளி எனும் சொற்களைப் பயன்படுத்துகின்றன.
இந்தப் பள்ளி உள்நாட்டுப் போட்டிகளிலும்; அனைத்துலகப் போட்டிகளிலும்; பல சாதனைகளைப் படைத்து உள்ளது.[4] தேசிய நிலையிலான 2020-ஆம் ஆண்டிற்கான பசுமைத் திட்ட மேலாண்மை (Malaysia GPM Sustainability Awards - School & STEM Curriculum 2020) போட்டியில் மகிழம்பூ தமிழ்ப்பள்ளி மூன்று விருதுகளைப் பெற்று சாதனைப் படைத்தது.
இயற்கையை நேசிப்போம் எனும் கருப்பொருளை முதன்மையாகக் கொண்டு மகிழம்பூ தமிழ்ப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. நெகிழிப் பைகள் வேண்டாம் எனும் திட்டத்தில் உருமாற்றம் கண்டு வருகிறது.[5]
பள்ளி எங்கும் பசுமைத் திட்டம். பசுமையை நேசிக்கும் மாணவர்கள். பசுமையைச் சுவாசிக்கும் ஆசிரியர்கள். பசுமைத் திட்டத்தில் ஒரு முன்னோடிப் பள்ளியாகவும் மகிழம்பூ தமிழ்ப்பள்ளி விளங்கி வருகிறது.
மகிழம்பூ தமிழ்ப்பள்ளியில் 280 மாணவர்கள் பயில்கிறார்கள். 25 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். தலைமையாசிரியர் திருமதி. மாரியம்மா அவர்களும் ஆசிரியர்களும் இந்தப் பள்ளியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்.[6]
மகிழம்பூ தமிழ்ப்பள்ளியின் மாணவர்கள் ஆசிரியர்கள் படங்கள்.[7]