மெர்லிமாவ் Merlimau 滨海立茂 | |
---|---|
நாடு | மலேசியா |
உருவாக்கம் | 1500 |
நேர வலயம் | ஒசநே+8 (MST) |
• கோடை (பசேநே) | பயன்பாடு இல்லை2° 09' 0" North, 102° 26' 0" East |
மெர்லிமாவ் (மலாய்: Merlimau, சீனம்: 滨海立茂), மலேசியாவின், மலாக்கா மாநிலத்தின் ஜாசின் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். மலாக்கா மாநகரத்தில் இருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு தான் மலாக்கா வரலாற்றில் புகழ் பெற்ற துன் தேஜாவின் கல்லறை அமைந்து உள்ளது. மலாக்கா மாநகரத்திற்கும் மூவார் நகரத்திற்கும் நடுவில் இருக்கின்றது.[1]
முன்பு காலத்தில் இங்கு குடியேறிய மலாய்க்காரர்கள் கிரீஸ் எனும் குறுவாள் ஆயுதங்களைப் பயன்படுத்தினர். அந்த ஆயுதங்களைப் பளபளக்கச் செய்ய டெலிமா எனும் ஒரு வகையான எலுமிச்சைப் பழத்தைப் பயன்படுத்தினார்கள். ஆக, அந்த டெலிமா எனும் சொல்லில் இருந்து தான் மெர்லிமாவ் எனும் இருப்பிடச் சொல்லும் உருவானது.[2][3]
1511 ஆம் ஆண்டில், டத்தோ மாமுன் என்பவர் இந்தோனேசியா, சுமத்திராவில் இருந்து இங்கு குடியேறினார். அவருடன் சில விசுவாசிகளும் உடன் வந்தனர். முதலில் மெர்லிமாவ் ஆற்று ஓரத்தில் இருந்த காடுகளை அழித்து வீடுகளைக் கட்டினார்கள். அப்போது அந்தப் பகுதியில் நிறைய காட்டு மிருகங்கள் இருந்தன. அவற்றிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேலிகளை அமைத்துக் கொண்டனர்.[3]
வரலாற்றுப் புகழ்மிக்க கிராமத் தலைவர் நாத்தார் என்பவரின் இல்லம் இங்குதான் இருக்கிறது. இங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் கம்போங் சிம்பாங் எனும் கிராமத்தில், துன் தேஜாவின் கல்லறை இருக்கிறது. துன் தேஜாவின் வரலாறு மலாக்கா சுல்தானக வரலாற்றுடன் இணையப் பெற்றது.
துன் தேஜா, மலாய் இலக்கியங்களில் ஓர் அழகியாக வர்ணிக்கப்படுகின்றது.[4] பகாங் மாநில அரச பரம்பரையைச் சேர்ந்தவர். இவருடைய இயற்பெயர் துன் தேஜா ரத்னா பெங்காளா. இவருடைய தந்தையார் ஸ்ரீ அமார் டி ராஜா பெண்டஹாரா. 1450-களில் பகாங் மாநிலத்தின் நிதியமைச்சராகச் சேவை செய்தவர். இவருடைய அழகில் மயங்கிய மலாக்காவின் கடைசி சுல்தான் முகமட் ஷா, அவரைத் தன் மனைவியாக்கிக் கொண்டார்.
மலாக்காவைப் போர்த்துக்கீசியர்கள் கைபற்றியதும், சுல்தான் முகமட் ஷா தன் பரிவாரங்களுடன் மூவார் பகுதிக்கு இடம் மாறிச் சென்றார். அங்குதான் துன் தேஜா காலமானார்.[5]
மெர்லிமாவ் நகரம் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. பழைய மலாக்கா - மூவார் கூட்டரசு சாலையில் இருந்தும் மெர்லிமாவிற்கு பயணம் செய்யலாம். இந்த நகரில் தொடர் வண்டிப் போக்குவரத்து இல்லை.
எதிர்காலத்தில், இந்த நகரம் மீன்வளர்ப்புத் துறையில் சிறந்து விளங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மலேசிய அரசாங்கம் பல மேம்பாட்டுத் திட்டங்களை அமல்படுத்த உள்ளது.[6]