ஒரு மெலனாவு குழந்தைக்கு ஒரு மாதம் வயதானதும், அந்தக் குழந்தையின் தலையைத் "தடல்" என்ற மரக் கருவியில் வைப்பது வழக்கம். 1912-ஆம் ஆண்டுப் படம். | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
132,600 (2014)[1] | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
மலேசியா (சரவாக்) | |
மொழி(கள்) | |
மெலனாவு, மலாய் | |
சமயங்கள் | |
இசுலாம் 73.14%, கிறித்தவம் 18.99%[2] | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
தயாக்கு மக்கள், புரூணியர்கள், ஓராங் உலு மக்கள் |
மெலனாவ் மக்கள் அல்லது மெலனாவு மக்கள் (மலாய்: Melanau; ஆங்கிலம்: Melanau; சீனம்: 梅拉瑙人; ஜாவி: ميلانو; என்பவர்கள்; மலேசியா, சரவாக் மாநிலத்தைச் சேர்ந்த பூர்வீகக் குழுவினராகும். சரவாக் மாநிலத்தில் தொடக்கக் காலங்களில் குடியேறிய குழுவினர்களில் இந்தக் குழுவினரும் ஒரு குழுவினர். இவர்களை அ லிகோவ் (A-Likou) இனத்தவர் என்றும் அழைக்கிறார்கள்.[3]
இவர்கள் மெலனாவு மொழியில் (Melanau language) பேசுகிறார்கள். மெலனாவு மொழி மலாய-பொலினீசிய மொழிகளின் (Malayo-Polynesian languages) வடக்கு போர்னியோ மொழிகளின் ஒரு பகுதியாகும். முக்கா (Mukah) பேச்சுவழக்கில் அ லிகோவ் என்றால் ஆற்று மக்கள் என்று பொருள்.
19-ஆம் நூற்றாண்டில், மத்திய சரவாக்கில் உள்ள ராஜாங் ஆற்றின் முக்கிய துணை நதிகளில் மெலனாவு மக்கள் சிதறிய சமூகங்களாகக் குடியேறினர்.
பெரும்பாலான மெலனாவு மக்களுக்கு, தங்களை டயாக் மக்கள் என்று அழைப்பதை விரும்புவது இல்லை. ஏனெனில் தயாக் மக்கள் என்பது போர்னியோவில் வசிப்பவர்களுக்காக மேற்கத்தியர்களால் பயன்படுத்தப்பட்ட ஒரு வார்த்தை என்று சொல்கிறார்கள்..
ஆனாலும் மெலனாவ் மக்கள், ஏற்கனவே அ லிகோவ் என்று தங்களின் சொந்த அடையாளத்தையும் சொந்தக் கலாசாரத்தையும் கொண்டு உள்ளனர். மெலனாவு மக்கள், கிளமந்தான் (Klemantan) எனும் துணை இனக் குழுவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கருதப் படுகின்றனர்.[4]
சரவாக்கில் முதன்முதலில் குடியேறியவர்களில் மெலனாவுவ் மக்கள் தான் என்று கருதப்படுகிறது. தங்களைக் குறிக்க, மெலனாவு என்ற பெயரை அண்மைய காலம் வரையில் அவர்கள் பயன்படுத்தவில்லை.
மெலனாவு மக்கள் தங்களை அ லிகோவ்; அதாவது 'நதியின் மக்கள்' என்றே அடையாளப் படுத்திக் கொண்டார்கள். புருணை மலாய் மக்கள் தான் இவர்களை மெலனாவு என்று அழைத்தார்கள்.[5]
14-ஆம் நூற்றாண்டில் இருந்து, மெலனாவ் மக்கள் ஒரு போதும் ஓர் இன அரசியல் அமைப்பின் கீழ் ஒன்றுபடவில்லை. சுமார் 500 ஆண்டுகளாகப் புரூணை சுல்தானகத்தின் கட்டுப்பாட்டில் வாழ்ந்தனர். சுமார் 100 ஆண்டுகளாக சரவாக் வெள்ளை ராஜாக்களின் கட்டுப்பாட்டில் வாழ்ந்தனர்.
இதுவே வடமேற்கு போர்னியோவின் கடற்கரையோரத்தில் பரவலாக வாழ்ந்த மெலனாவ் மக்களிடையே மொழி வேறுபாடுகளுக்கு வழி வகுத்தது.
இருப்பினும், மெலனாவ் மொழி, அதன் அசல் தன்மையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. அந்த மொழியின் மீது மலாய் மொழி அதிகத் தாக்கத்தை ஏற்படுத்திய போதிலும், மெலனாவ் மொழி தனித்து இயங்கி வருகிறது.
குழு வாரியாக, மெலனாஸ் பின்வரும் வகைகளாக வகைப்படுத்தலாம்;
இந்தப் பிரிவுகளிள் மிகப்பெரிய குழு மாத்து தாரோ குழு ஆகும். ஒவ்வொரு குழுவிற்கும் அதன் தனித்துவமான பேச்சுவழக்கு உள்ளது. ஆனால் அவை அனைத்தும் ஒரே கலாசாரம் மற்றும் ஒரே மொழியியல் பின்னணியைப் பகிர்ந்து கொள்கின்றன.[6]
சரவாக் மாநிலத்தின் புள்ளியியல் துறையின் புள்ளிவிவரங்களின்படி, 2014-ஆம் ஆண்டில், 132,600 பேர் தங்களை மெலனாவ் மக்கள் என்று பதிவு செய்து உள்ளனர். மெலனாவ் மக்கள் குழு, சரவாக் மாநிலத்தில் ஐந்தாவது பெரிய இனக் குழுவாக உள்ளது.[7]
மெலனாவ் மக்கள், சரவாக்கில் சிறுபான்மையினராக இருந்தாலும், சரவாக் அரசியலில் பெரும்பகுதியை தக்க வைத்துக் கொண்டு உள்ளனர். சரவாக்கின் யாங் டி பெர்துவா எனும் ஆளுநர் பதவியில் 6 பேரில் ஐவர் மெலனாவ் இனத்தைச் சேர்ந்தவர்கள். எ.கா: யாங் டி பெர்துவா துன் பெகின் ஸ்ரீ அப்துல் தைப் மகமுட்
சரவாக்கின் முதலமைச்சர்களில் 6 பேரில் இருவர் மெலனாவ் இனத்தைச் சேர்ந்தவர்கள்.
மெலனாவ் மக்களின் மக்கள்தொகை:[7]
ஆண்டு | 1876 | 1939 | 1947 | 1960 | 1970 | 1980 | 1991 | 2000 | 2010 |
---|---|---|---|---|---|---|---|---|---|
தொகை | 30,000 | 36,772 | 35,560 | 44,661 | 53,234 | 75,126 | 96,000 | 109,882 | 123,410 |
ஒரு மெலனாவ் குழந்தைக்கு ஒரு மாதம் வயதானதும், அந்தக் குழந்தையின் தலையை "தடல்" (Tadal) என்ற மரக் கருவியில் வைப்பது வழக்கம்.
குழந்தையின் நெற்றியைப் பகுதியைத் தட்டையாக்கி, முகத் தோற்றத்தை முடிந்த வரை முழு நிலவின் வடிவத்தைப் போன்று உருவாக்குவதாகும். குழந்தை தூங்கும் போது மட்டுமே அழுத்தம் கொடுக்கப் படுகிறது.