மெல்வில் டி மெல்லோ (Melville de Mellow) டி மெல்லோ எனவும் அறியப்படும் இவர் (1913 - 1989) அனைத்திந்திய வானொலியில் ஒரு வானொலி ஒலிபரப்பாளர் ஆவார். சுதந்திர இந்தியாவில் பல்வேறு நிகழ்வுகள் பற்றிய உயர்தர அறிக்கைகள் மற்றும் வர்ணனைகளுக்காக இவர் நினைவுகூரப்படுகிறார், இதில் தில்லியில் மகாத்மா காந்தியின் இறுதி ஊர்வலத்தின் ஏழு மணிநேர ஒளிபரப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது. 1963 ஆம் ஆண்டு ஒலிபரப்பிற்கு இவர் ஆற்றிய சேவையைப் பாராட்டி இந்திய அரசால் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது. [1]
டி மெல்லோ, சிம்லாவிலுள்ள பிஷப் காட்டன் பள்ளி, மற்றும் முசோரி, செயின்ட் ஜார்ஜ் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றார். அகில இந்திய வானொலியில் சேருவதற்கு முன்பு இந்தியப் பஞ்சாப் படைப்பிரிவில் பணியாற்றினார். [2] [3] மெல்வில் டி மெல்லோ இந்தியப் படைத்துறைக் கல்விக்கூடத்தில் பயின்று பட்டம் பெற்ற முதல் குழுவில் இடம் பெற்றவர். [4] இவர் கோரலி எம்மா என்பவரை மணந்தார். இவரது மருமகன் இயன் டுடர் டி மெல்லோ முதியோர் நலனுக்கான தான் ஆற்றிய பணிகளுக்காக ஆஸ்திரேலியவின் பதக்கம் பெற்றவர். [5]
மெல்வில் டி மெல்லோ ஏப்ரல் 1950 முதல் ஏப்ரல் 1971 வரை அனைத்திந்திய வானொலியில் பணிபுரிந்தார். இவர் 'ஊழியர் கலைஞர்கள்' வகையைச் சேர்ந்தவர். ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து இவர் தயாரிப்பாளராக மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு வானொலியில் தக்கவைக்கப்பட்டார். [6] டி மெல்லோ சுதந்திர இந்தியாவில் பல்வேறு நிகழ்வுகளின் ஆழமான குரல் வர்ணனைக்காக குறிப்பிடத்தக்க ஒளிபரப்பாளராக நினைவுகூரப்படுகிறார். [7]</ref> [8] 1948 ஆம் ஆண்டில், காந்தி சமிதியிலிருந்து ராஜ்காட்டில் உள்ள தகனம் செய்யும் இடத்திற்கு மகாத்மா காந்தியின் உடலைத் தாங்கிய வாகனத்துடன் அனைத்திந்திய வானொலியின் வண்டியிலிருந்து ஏழு மணி நேர வர்ணனையை வழங்கினார். அன்றைய தினம் மெல்வில் டி மெல்லோவின் வர்ணனை, தேசத்தின் துக்கத்தையும் அஞ்சலியையும் வெளிப்படுத்தி, காந்தியின் உடல் ராஜ் காட் நோக்கி நகர்ந்தது. இந்தியாவில் வானொலி ஒலிபரப்பின் சிறந்த நிகழ்வுகளில் ஒன்றாக இது நினைவுகூரப்படுகிறது. [9] மூத்த இந்தி வர்ணனையாளர் ஜஸ்தேவ் சிங் அன்றைய இவரது வர்ணனையைக் கேட்ட (அப்போது பதினேழு வயது) வர்ணனையை ஒரு தொழிலாக எடுத்துக்கொள்ள தூண்டியதாகக் குறிப்பிட்டுள்ளார். வானொலி ஒலிபரப்பிற்கான இவரது சேவைகளுக்காக சிங் பத்மசிறீ மற்றும் பத்ம பூசண் விருதுகளை பெற்றுள்ளார். [10] [11] 1952 ஆம் ஆண்டில், ராணி எலிசபெத்தின் முடிசூட்டு ஊர்வலத்தின் வர்ணனையை வழங்குவதற்காக மெல்வில் டி மெல்லோ பிரித்தானிய அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டார். [8] இவர் பல ஆண்டுகளாக இந்தியாவின் குடியரசு தின அணிவகுப்பில் வர்ணனையாளராக இருந்தார். மேலும் இவர் இந்தியா - பாக்கித்தான் வளைதடிப் பந்தாட்டப் போட்டிகளின் வர்ணனையையும் வழங்கியுள்ளர். [12] வங்காளதேச விடுதலைப் போர் மற்றும் அதைத் தொடர்ந்து இந்தியப் படைகள் விடுதலை செய்தல் பற்றிய இவரது அறிக்கை வானொலியைக் கேட்பவர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது. [13]
மெல்வில் டி மெல்லோ, 1964இல் தோக்கியோவில் நடந்த கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வரையிலான ஓட்டத்தை விவரிக்கும் தி ஸ்டோரி ஆஃப் தி ஒலிம்பிக்ஸ் உட்பட விளையாட்டு பற்றிய பல புத்தகங்களை எழுதியுள்ளார், [14] [1]
மெல்வில் டி மெல்லோ தனது வாழ்க்கை முழுவதும் அவரது பணிக்காக பாராட்டப்பட்டார். பொதுநலவாய நாடுகளின் உதவித்தொகை (பிபிசி), 1948, செக்கோஸ்லோவாக் வானொலி ஆவணப்படப் பரிசு, 1960, பத்மசிறீ (1963), வானொலி ஆவணப்படத்திற்கான இத்தாலியா பரிசு (1964) - இது இவர் லாலி அண்ட் தி லயன்ஸ் ஆஃப் கிர் என்ற புத்தகதிற்காக வென்றது. அகில இந்திய வானொலி, சமன் லால் விருது (1971), செக்கோஸ்லோவாக் அமைதிக் கட்டுரைப் பரிசு (1972), சிறப்பு விருது (ICFEE), 1975, வர்ணனை விருது (1975), விளையாட்டுக்கான சிறந்த புத்தகத்திற்கான கல்வி அமைச்சகத்தின் விருது (1976), நீண்ட சேவை விருது (1977), வானொலி மற்றும் தொலைக்காட்சியில் சிறந்து விளங்குவதற்கான விருது மற்றும் ஏசியாட் ஜோதி விருது (1984) உள்ளிட்ட பல இதில் அடங்கும்.[1]