மேக் ராஜ் ஜெயின் (Mag Raj Jain)(1931 - 4 நவம்பர் 2014)[1] என்பவர் இந்தியாவில் இராசத்தான் மாநிலத்தின் சமூக சேவகர் மற்றும் தார் பாலைவனப் பகுதியின் வளர்ச்சிக்காகப் பங்காற்றியதற்காக பத்மசிறீ விருதைப் பெற்றவர். ஆசிரியரான இவர், இராசத்தானின் பார்மேர் மாவட்டத்தில் ஏழைகளின் முன்னேற்றத்திற்காக 1990-ல் கிராமப் பொருளாதாரத்தினை மேம்படுத்தும் சமூக (சொசைட்டி டு அப்லிஃப்ட் ரூரல் எகானமி) அமைப்பினை நிறுவினார். தற்போது இந்த அமைப்பு இப்பகுதியில் உள்ள 60 கிராமங்களில் 30,000க்கும் மேற்பட்ட மக்களைச் சென்றடைகிறது.
இப்பகுதியில் வாழும் பெரும்பான்மையினர்பட்டியல் சாதியினரும், பட்டியலிடப்பட்ட பழங்குடியினரும் மற்றும் இந்திய-பாக்கித்தான் போர்கள் மற்றும் மோதல்களின் அகதிகளாக வந்தவர்கள் ஆவர். பெண்களால் நடைமுறைப்படுத்தப்படும் ஒட்டுவேலை மற்றும் கண்ணாடி பூத்தையல் இவர்களின் முதன்மையான குடும்ப வருமானமாக உள்ளது. பல ஆண்டுகளாக ஒப்பந்தக்காரர்கள் மற்றும் இடைத்தரகர்கள் வருமானத்தின் பெரும் பங்கைப் பெற்றதன் மூலம் இவர்கள் இலாபத்தினைச் சுரண்டினார்கள். ஜெயின் தொடங்கிய இந்த இலாப நோக்கற்ற அமைப்பு சம்பந்தப்பட்ட இடைத்தரகர்களை அகற்றுவதையும் உள்ளூர் கைவினைஞர்களுக்கு அதிகபட்ச நன்மைகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.