மேடலின் பியர்தோ ( Madeleine Biardeau ) (16 மே 1922 நியோர்டு - 1 பிப்ரவரி 2010 செர்வக்சு ) பிரான்சைச் சேர்ந்த இந்தியவியலாளர் ஆவார்.[1]
மேட்லின் பியர்தோ சிறு தொழில்முனைவோர்களின் நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தார். பாரிசின் தென்மேற்கு புறநகரில் உள்ள அப்போது சிறுமிகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்ப்ட்டிருந்த ஒரு பிரெஞ்சு சமூகப்பள்ளியில் கல்வி பயின்றார். அங்கு இவர் தத்துவம் பயின்றார். கீழை நாடுகளின் ஆன்மீகத்தில் ஈர்க்கப்பட்டார். இடது கத்தோலிக்க சூழலுக்கு நெருக்கமாகவும், கத்தோலிக்க மதத்தை கடைப்பிடிப்பவராக இருந்தபோதிலும் வலுவான மதச்சார்பற்ற உணர்வைக் கொண்டிருந்ததால் இந்து தத்துவத்தைப் படிப்பதற்காக சமசுகிருதம் கற்கத் தொடங்கினார். [1]
இந்தியாவைப் பற்றி ஆர்வத்துடன், 1950 களில் இரண்டு ஆண்டுகள் திருவாங்கூர் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த பியர்தோ, பண்டிதர்களின் உதவியுடன் சமசுகிருத நூல்களை படித்தார். இவர் 1990கள் வரை கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவிற்கு வந்து சென்றார். மேலும் புனேவிலுள்ள டெக்கான் முதுகலை கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் மற்றும் பாண்டிச்சேரி பிரெஞ்சு நிறுவனம் ஆகியவற்றில் பணிபுரியும் சமசுகிருதப் பண்டிதர்களுடன் நெருக்கமாக பணியாற்றினார். இவர் நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று, பல்வேறு சாதிகளைச் சேர்ந்த மக்களைக் கணக்கெடுத்து, பல்வேறு வழிபாட்டு முறைகள் மற்றும் சடங்குகள் பற்றிய தகவல்களை சேகரித்தார்.[1]
புராணங்களிலும் அத்வைத வேதாந்தத்திலும் உள்ள தத்துவங்களை விரிவாகப் படித்தார். மந்தன மிஸ்ரர், வாசஸ்பதி மிஸ்ரர் மற்றும் பரத்ஹரி ஆகியோரின் படைப்புகளை இவர் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்தார். 1964 இல் (பிரெஞ்சு மொழியில்) “பாரம்பரிய பிராமணியத்தில் அறிவு கோட்பாடு மற்றும் பேச்சின் தத்துவம் ” என்ற தனது முனைவர் பட்ட ஆய்வுக் கட்டுரையை எழுதினார்.
இந்து இதிகாசங்கள் பியர்தோவின் பங்களிப்பில் ஒரு முக்கிய பகுதியாக இருந்தது. மேரி-கிளாட் போர்ச்சர் மற்றும் பிலிப் பெனாய்ட் என்ற இரண்டு அறிஞர்களுடன் இணைந்து இவர் வால்மீகியின் இராமாயணத்தை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்தார் (1991). 2002 இல் வெளியிடப்பட்ட மகாபாரதத்தின் இரண்டு திருத்தப்பட்ட தொகுதிகள் இவரது கடைசி முக்கியப் படைப்பாகும்.[1] சுருக்கமாக, மகாபாரதத்தை பௌத்தத்திற்கு எதிரான அறிவார்ந்த மற்றும் மதரீதியான எதிர்வினையாக மேடலின் பியர்தோ கருதினார். பிரஞ்சு மொழியில் “பியர்தோவின் மகாபாரதம் ”என்ற தலைப்பில், அந்த உரை “பிராமணியத்தின் அடிப்படை உரை” என கருதப்படுகிறது.
மேட்லின் பியர்தோ 2008 இல் பிரான்சிலுள்ள சமூக இடமான செர்வெக்சில் தங்கியிருந்தார். மேலும் 2010 இல் இறந்தார்.