மேரா கௌ சோங்பா அல்லது மேரா வயுங்கப்பா அல்லது மேரா தாமே தான்பா என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இந்த கலாச்சார திருவிழா, இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் வசிக்கும் மெய்தி பழங்குடி மக்கள் உட்பட அங்கு வசிக்கும் ஒவ்வொரு பழங்குடி இனக்குழுக்களாலும் ஒற்றுமையின் விழாவாக கொண்டாடப்படுகிறது. மெய்தி நாட்காட்டியின் மேரா மாதத்தின் சந்திர நாளான பதினைந்தாம் தேதி இவ்விழா கொண்டாடப்படுகிறது.
மணிப்பூர் மாநிலத்தில் உள்ள பல்வேறு இனக்குழுக்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையை நினைவுபடுத்தும் ஒரு அடையாளமாகவும், மேலும்'மணிப்பூரி தேசியவாதத்தின் கருத்தை வலுப்படுத்தும் விதமாகவும், இவ்விழா நீண்ட காலமாக கொண்டாடப்படுகிறது.
சனா கோனுங் என்று அழைக்கப்படும் மணிப்பூரின் அரச குடும்பத்தின் அரண்மனையான காங்லாவின் மைதானத்தில் ஒவ்வொரு பழங்குடி இனத்தவரும் அவர்களின் இன ஆடைகளையும், அணிகலன்களையும், போர்கருவிகளையும் அணிந்து வந்து, அரச குடும்பத்தின் முன்பாக தங்களின் கலாச்சாரத்தை அடையாளப்படுத்தும் விதமாக கலை நிகழ்ச்சிகள், நடனங்கள், இசை நிகழ்ச்சிகள், பொய் சண்டைகள் என வெளிப்படுத்துவார்கள்.மன்னர் மற்றும் பழங்குடி தலைவர்களுக்கு இடையே பரிசுப் பரிமாற்றம் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் ஆகியவைகள் இதன் முக்கிட்டா அம்சங்களாகும்.
இந்த திருவிழா கிபி முதல் நூற்றாண்டில் நோங்டா லைரன் பகாங்பாவின் காலத்திலிருந்தே தொடங்கியது, 1891 க்கு முன், இந்த திருவிழா கங்க்லா கோட்டையில் உள்ள நுங்கோய்பியிலும், தென்மேற்கில் உள்ள கங்லாசாவிலிருந்து மேற்கு திசையில், உள்ள லம்பாக் மைதானத்திலும் நடத்தப்பட்டது. [2]
ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர்/அக்டோபரில் வரும் மேரா மாதத்தில், ஹூ சோங்பா திருவிழா கொண்டாடப்படுகிறது, இதில் அனைத்து பழங்குடித் தலைவர்கள் அல்லது குல்லக்பாக்கள் அவர்களோடு சுற்றியுள்ள மலைப்பகுதிகளைச் சேர்ந்த பழங்குடி மக்களும் திரளாக பங்கேற்கின்றனர்.
மேரா ஹூ சோங்பா திருவிழா உண்மையில் ஆயிரக்கணக்கானோர் கூடும் ஒரு பெரிய திருவிழா, எனவே, தங்கும் இடம் மற்றும் விருந்துக்கான ஏற்பாடுகள் மணிப்பூர் மன்னரின் நேரடி மேற்பார்வையில் செய்யப்படுகிறது; பழங்குடியினர் விவகார அலுவலகம் (ஹாவோ மச்சா லோயிசாங்) இந்த விழாவின் முழுப் பொறுப்பையும் கொண்டுள்ளது.[3]
திருவிழா ஒரு பெரிய விருந்துடன் முடிவடைகிறது; உணவில் உலர்ந்த மீன், மாடுகள், எருமைகள், நாய்கள் போன்றவற்றின் கறி வழங்கப்படும். விழாவில் பங்குகொள்ளும் அனைவரும் தங்களுக்கு விருப்பமான இறைச்சியை எடுத்துக் கொள்ளவும், அவர்கள் விரும்பும் பானத்தை அனுபவிக்கவும் அனுமதிக்கப்படுகிறார்கள். மணிப்பூரின் அனைத்து மலைவாழ் பழங்குடியினரும் கலந்துகொள்ளும் இந்த திருவிழா மணிப்பூரில் உள்ள மிகப்பெரிய திருவிழாவாகும்.