மேரி பென்டன் | |
---|---|
பிறப்பு | மேரி ஜேன் பென்டன் c. 1854 இலாண்டூர், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் |
இறப்பு | c. 1896 (அகவை 41–42) |
மற்ற பெயர்கள் | மெகர்பாய் |
பணி | நாடக நடிகை |
வாழ்க்கைத் துணை | கவாஸ்ஜி பழஞ்சி கட்டாவ் |
பிள்ளைகள் | ஜஹாங்கீர் கட்டாவ் |
மேரி பென்டன் (Mary Fenton) அல்லது மெகர்பாய் [1] (1854 - 1896) என்ற இவர் ஐரோப்பிய வம்சாவளியைச் சேர்ந்த முதல் குஜராத்தி, பார்சி மற்றும் உருது நாடக நடிகை ஆவார்.[2] பிரிட்டிசு இந்திய இராணுவத்தில் ஒரு ஐரிசு இராணுவ வீரருக்குப் பிறந்த இவர், பார்சி நடிகரும்-இயக்குனருமான கவாஸ்ஜி பழஞ்சி கட்டாவ் என்பவரை காதலித்து மணந்தார். கட்டாவ் இவரை நடிப்புலகிற்கு அறிமுகப்படுத்தினார். மேலும் பென்டன் ஒரு வெற்றிகரமான மேடை வாழ்க்கையை கொண்டிருந்தார்.
மேரி பென்டன் இந்தியாவின் முசோரிக்கு அருகிலுள்ள இலாண்டூரில் பிரிட்டிசு இந்திய இராணுவத்தின் ஓய்வுபெற்ற வீரர் மேத்யூ பென்டன் மற்றும் ஜேனட் ஆகியோருக்கு மேரி ஜேன் பென்டன் என்ற பெயரில் பிறந்தார். இவரது ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி பற்றிய கூடுதல் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. பார்சி நாடக நடிகரும் இயக்குநருமான கவாஸ்ஜி பழஞ்சி கட்டாவ் தனது இந்தர் சபா என்ற நாடகத்திற்காக ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்த பொழுது பென்டன் தனது மேஜிக் விளக்கு என்ற நிகழ்ச்சிக்காக மண்டபத்தை முன்பதிவு செய்ய வந்திருந்தார். அங்கே இருவரும் சந்தித்து பின்னர் இருவரும் காலித்து மணந்து கொண்டனர்.[3] அதைத் தொடர்ந்து, மேரி, மெகர்பாய் என்ற பார்சி பெயரை ஏற்றுக்கொண்டார். மேரி ஏற்கனவே இந்தி மற்றும் உருது மொழியை அறிந்திருந்தார். மேலும் 1870களில் கட்டாவ் பாடல் மற்றும் நடிப்பில் இவருக்கு கூடுதல் பயிற்சி அளித்தார்.
இவரது திறமை மற்றும் கட்டாவுடனான உறவு காரணமாக அவர் நாடக அரங்குகளில் ஒரு பரபரப்பை உருவாக்கினார்.[3] இருப்பினும், 1878ஆம் ஆண்டில் பெண்டன் நாடகத்திற்குள் நுழைந்தது தொடர்பாக கட்டாவிற்கும் பேரரசி விக்டோரியா நாடக நிறுவனத்தின் உரிமையாளர் ஜஹாங்கிர் பெஸ்டோன்ஜி கம்பட்டா என்பவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, கட்டாவ் மும்பையிலிருந்து தில்லிக்கு புறப்பட்டு, பென்டனை எதிர்த்த மானெக் என்பவருக்குச் சொந்தமான ஆல்பிரட் நாடக நிறுவனத்தில் சேர்ந்தார். இதன் விளைவாக, கட்டாவ் தனது சொந்த ஆல்பிரட் நிறுவனத்தை 1881 இல் தொடங்கினார். அங்கு பென்டன் நீண்ட மற்றும் வெற்றிகரமான வாழ்க்கையைப் பெற்றார்.
பென்டனும் கட்டாவும் பின்னர் பிரிந்தனர். இவர்களுக்கு ஜஹாங்கிர் கட்டாவ் என்ற ஒரு மகன் இருந்தார்.[3][4]
மேரி பார்சி, குஜராத்தி மற்றும் உருது நாடகங்களின் முதல் ஆங்கிலோ-இந்திய நடிகை ஆவார்.[4] இவர் பார்சியில் கதாநாயகி வேடங்களில் பிரபலமானார்.[5] பின்னர் இவர் பிராம்ஜி அப்பு நாடக நிறுவனத்தில் பணிபுரிந்தார். அதன்பிறகு பல நாடக குழுக்களுக்கு மாறினார்.
மேரி பென்டன் அநேகமாக 1896 இல் தனது 42 வயதில் இறந்துவிட்டார் என்று நம்பப்படுகிறது.[3] பார்சி நாடகங்களில் இவரது அறிமுகம் ஆரம்ப கட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய ஏராளமான ஆங்கிலோ-இந்திய நடிகைகளுக்கும் அத்துடன் இந்தியாவின் பேசாத படங்களின் சகாப்தத்தின் படங்களுக்கும் வழிவகுத்தது.[4]
இவரது வாழ்க்கை மற்றும் பிற ஆரம்பகால பெண் நடிகைகளைப் பற்றி நெயதி ரத்தோட் என்பவர் எழுதி இயக்கிய டிராமா குயின் (2018) என்ற ஒரு நாடகம், புளூ பெதர் தியேட்டர் என்ற நிறுவனம் தயாரித்தது. மெக்ரின் சபா என்பவர் மேரி பென்டனாக நடித்திருந்தார்.[6]