மேலாண்மை பொன்னுசாமி (1951 - 30 அக்டோபர் 2017) தமிழக சிறுகதை, மற்றும் புதின எழுத்தாளர்.[1] இவர் எழுதிய மின்சாரப்பூ என்ற சிறுகதைத் தொகுப்பு நூல் 2007 ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருதைப் பெற்றது.[2][3]
விருதுநகர் மாவட்டம் மேலாண்மறைநாடு என்ற கிராமத்தில் பிறந்தவர் பொன்னுசாமி. ஏழைக் குடும்பத்தில் பிறந்த இவர் வறுமையின் காரணமாக 5-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை.
இவருக்கு 10 வயதானபோது தந்தை இறந்துவிட்டார். அப்போதே குடும்பப் பொறுப்பு முழுவதையும் ஏற்றுக்கொண்டார். சகோதரர் கரிகாலனுடன் சேர்ந்து கூட்டுக் குடும்பமாகவே வசித்தார். கிராமத்தில் உள்ள சிறிய மளிகைக் கடையை நடத்தி வந்தார். இவருக்கு மனைவி பொன்னுத்தாய் மற்றும் 2 மகள்கள், 1 மகன்.
5ஆம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாவிட்டாலும் நூல்களை வாசிப்பதை இவர் நிறுத்தவில்லை. குறிப்பாக இலக்கிய நூல்களை அதிகம் படித்தார். இடதுசாரி இலக்கிய அமைப்புகளுடன் ஏற்பட்ட தொடர்பால் இவர் எழுதத் தொடங்கினார்.
மேலாண்மை பொன்னுசாமி 36 புத்தகங்களை எழுதியுள்ளார். இவற்றில் 22 சிறுகதைத் தொகுப்புகள்; 6 நாவல்கள்; 6 குறுநாவல் தொகுப்புகள் ஆகியவை அடங்கும். ஒரு கட்டுரைத் தொகுப்பையும் எழுதினார்.
இவரது கதைகள் பல்வேறு இலக்கிய பத்திரிகைகள் மட்டுமின்றி, ஜனரஞ்சக பத்திரிகைகளிலும் வெளியாகின.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை தொடங்கியதில் முக்கியப் பங்கு வகித்த இவர் அச்சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்தார். இவரது புனைப்பெர்கள் அன்னபாக்கியன், அன்னபாக்கியச்செல்வன், ஆமார்நாட்டான்.
எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 2017 அக்டோபர் 30 அன்று சென்னையில் காலமானார்.[4]