மைக்ரோகைலா சக்கரபாணி | |
---|---|
ஆண் மைக்ரோகைலா சக்கரபாணி | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | மைக்ரோகைலா
|
இனம்: | மை. சக்கரபாணி
|
இருசொற் பெயரீடு | |
மைக்ரோகைலா சக்கரபாணி பிள்ளை, 1977[2] |
மைக்ரோகைலா சக்கரபாணி (Microhyla chakrapanii) என்பது மைக்ரோகைலிடே குடும்பத்தில் உள்ள ஒரு தவளைச் சிற்றினம் ஆகும்.[3][4] இது அந்தமான் தீவுகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இது மாயபந்தர் அரிசி தவளை, சக்கரபாணி கூர்வாய் தவளை மற்றும் பக்கவாட்டு பட்டை தவளை என்றும் அழைக்கப்படுகிறது.[3] உருவவியல் அடிப்படையில் மைக்ரோகைலா அச்சடினா குழுவுடன் தொடர்புடையது எனப் பரிந்துரைத்தாலும், மூலக்கூறு தரவு இதை மைக்ரோகைலா பிசிப்சு குழுவில் வைக்கிறது. மைக்ரோகைலா மைமென்சிங்ஹென்சிசு இதன் நெருங்கிய உறவினராக உள்ளது.[4]
முதிர்ச்சியடைந்த ஆண் தவளை 17–22 mm (0.7–0.9 அங்) நீளமுடையது.[4] இதன் உடல் மிதமான தடிமனாக இருக்கும். மூக்கு வட்டமானது. செவிப்பறைச் சவ்வு தெரிவதில்லை. விரல் நுனிகளில் வட்டுகள் இல்லை; அதேசமயம் கால்விரல்கள் தனித்தனி வட்டுகளைக் கொண்டுள்ளன. கால்விரல்களுக்கு அடித்தள வலை உள்ளது. மென்மையான தோலினை உடைய இத்தவளையின் தொண்டை, மார்பு மற்றும் வயிற்றின் ஒரு பகுதி கரடுமுரடாக இருக்கும். முதுகுபுறம் பழுப்பு கலந்த சாம்பல் நிறத்தில் இருக்கும். தோள்பட்டை மட்டத்தில் நடு முதுகுபுறக் கோட்டின் இருபுறமும் இரு கருமையான திட்டுகளும், இவற்றுக்குப் பின்னால் மற்றொரு இணை அகன்ற, அடைப்புக்குறி வடிவத் திட்டுகளும் உள்ளன. பக்கவாட்டு பட்டைகள் மூக்கின் நுனியிலிருந்து கிட்டத்தட்ட இடுப்பு வரை நீண்டு இரண்டு பக்கங்களிலும் காணப்படும்.[5]
மைக்ரோகைலா சக்கரபாணி வடக்கு அந்தமான், நடு அந்தமான், தெற்கு அந்தமான், ரட்லாண்ட், சிறிய அந்தமான், நீளத்தீவு மற்றும் நீள் தீவு ஆகிய பகுதிகளிலிருந்து அறியப்படுகிறது.[3]
மைக்ரோகைலா சக்ரபாணி புதைந்து வாழ்பவை.[5] பெரும்பாலான மாதிரிகள் தற்காலிக குளங்கள் மற்றும் குட்டைகளின் ஓரங்களில் புற்களின் கீழ் காணப்படுகின்றன. பெரும்பாலும் இரண்டாம் நிலை காடுகளில் இனப்பெருக்க காலத்தில், பொதுவாக நவம்பர் மாதத்தில் இதனைக் காணலாம். இது நெல் வயல்களிலும் பசுமைமாறாக் காடுகளிலும் பதிவாகியுள்ளது.[4]
2004ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின்படி, இந்த சிற்றினமானது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் அச்சுறுத்தப்பட்ட உயிரினங்களின் பட்டியலில் தரவுகள் போதாது எனப் பட்டியலிடப்பட்டுள்ளது. இது வடக்கு அந்தமானில் உள்ள மாயாபந்தரில் மட்டுமே அறியப்பட்டுள்ளது.[1]